இதழ்: 6, நாள்: 15 - வைகாசி -2013 (May)
   
 
  உள்ளடக்கம்
 

மகேந்திரனின் முள்ளும் மலரும் – நினைத்திராத ஒரு ஆரம்பம் -வெங்கட் சாமிநாதன்

--------------------------------
முள்ளும் மலரும் சில பகிர்தல்கள் - பாஸ்கர்சக்தி
--------------------------------
முள்ளும் மலரும்... - எஸ். ஆனந்த்
--------------------------------
முள்ளும் மலரும்... - சுஜாதா தேசிகன்
--------------------------------
முள்ளொன்று மலர்ந்தது. - கார்த்திக் பாலசுப்பிரமணியன்
--------------------------------
ஒருபோதும் வாடாத 'மலர்' - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
முள்ளும் மலரும் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
--------------------------------
முள்ளும் மலரும் - முள்ளில் மலர்ந்த மலர்....- அருண்
--------------------------------
   

   


மகேந்திரனின் முள்ளும் மலரும் – நினைத்திராத ஒரு ஆரம்பம்

- வெங்கட் சாமிநாதன்


எப்போது என்று நினைவில் இல்லை. தில்லியில் இருந்த வருடங்களில் அறுபதுக்களிலிருந்து தியேட்டருக்குப் போய் சினிமா பார்த்தது மிக அபூர்வம். ஒரு சில விசேஷமாக நடத்தப்படும் காட்சிகளுக்குச் 0சென்றதுண்டு தான். அப்படித்தான் உன்னைப் போல் ஒருவன், மோக முள் போன்ற ஒரு சிலவற்றைப் பார்த்தது. சென்னை வந்த பிறகு 2000-குப் பிறகு தான் பொதிகைத் தொலைக்காட்சியில் பழைய படங்கள் திரும்பக் காட்டப்பட்டன. சில தொடராகவும் சில ஒரே காட்சியாகவும். அப்படித்தான் நான் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படம் பார்த்திருக்கவேண்டும். சரியாக நினைவில் இல்லை.

அந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு அபூர்வப் பிறவியை எனக்கு அறிமுகப் படுத்தியது. அவரது இன்னும் சில படங்கள் உண்டு என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. உதிரிப் பூக்கள் தமிழ் சினிமாவின் சம்பிரதாயக் கதை சொல்லலையும், படமாக்கும் மரபையும், நடிப்பு என்று நாம் வளர்த்துள்ள ஒரு பாணி அங்க சேஷடைகளையும், அதில் சேர்க்கப்படவேண்டிய மசாலாக்களையும், விசேஷ தாளிப்பையும் ஒதுக்கிய ஒரு முயற்சியாக இருந்தது. எவ்வளவோ வருஷங்களுக்குப் பிறகு எழுபதுகளில், இப்படி ஒன்று வந்துள்ளதே, இப்படியும் ஒருவர் சிந்தித்து செயல்பட்டிருக்கிறாரே என்று ஒரு வியப்பும் சந்தோஷமும்.

பத்து பதினைந்து வருஷங்களுக்கு ஒரு முறை இப்படி ஏதோ ஒன்று வந்து போகும். தொடர்ச்சியாக இப்படி யாரும் சிந்தித்து செயல்பட்டு ஒரு மரபை, வியாபார வெள்ளப் பெருக்கை விட்டு தள்ளி ஒடும் ஒரு சிறு ஓடையாகக் கூட நாம் காணமுடிந்திருக்கவில்லை.

அத்தகைய மகேந்திரன், இதற்கு முன்னர் முள்ளும் மலரும் என்று படம் எடுத்திருப்பதாகவும் அதைப் பற்றி எழுதவேண்டும் என்று அருண் கேட்டுக் கொண்டார். நான் பார்த்திருந்தால் தானே எழுத. ஆனால் மகேந்திரனின் படம் பார்க்க ஒரு ஆவல் திரும்பக் கிளறிவிடப்பட்டுவிட்டது. அந்தப் படத்தின் குறுந்தகடு அனுப்பி வையுங்கள், சந்தோஷமாகச் செய்கிறேன் என்றேன். அனுப்பியும் வைத்தார்.

ஆவலுடன் பார்க்க உட்கார்ந்தேன். எடுத்த உடனேயே வந்த காட்சி, முகத்தில் அறைவதாக இருந்தது. ஒரு பூஜை அறை இருபக்கமும் சிறுவர்கள் சிறுமிகள். மற்ற தெய்வப் படங்களுக்கு இடையே மலர் மாலை சூட்டப்பட்ட ஒரு நடு வயது ஸ்த்ரீயின் படம்.

இது மகேந்திரன் இல்லை. இது 70 – 80 வருட கால அரதப் பழசான தமிழ்ப் பட ஆரம்பக் காட்சி. அந்தக் காட்சியில் தான் அனாதைகளாக்கப்பட்டு விட்ட ஒரு சிறுவனும் அவன் தங்கையும் வரிசையின் நடுவில் காட்சி தருகிறார்கள். அடுத்து வரும் காட்சிகள் ஏழைகள் பணக்காரர்களின் மமதையில் வதைபடும் காட்சி. சிறுவன் அந்தப் பணக்காரரின் கார் ஹெட் லைட்டை உடைத்து விட்டு ஓடுகிறான். தார்மீகச் சீற்றம். அந்தக் காட்சி மறைந்து, அடுத்து வரும் காட்சி, அதே போல் காரின் ஹெட்லைட்டை அதே போல சீற்றத்தோடு கல்லை எடுத்து உடைத்து நொறுக்கும் காட்சி. அந்தச் சிறுவன் இப்போது ரஜனிகாந்தாக வளர்ந்துவிட்டான்.

இதுவும் தமிழ் சினிமா முத்திரை பதிந்த பத்தாம் பசலி உத்தி. இதற்கு அடுத்த ஒரு சில காட்சிகளில் சிறு வயதிலேயே அனாதையாகிவிட்டாலும் தன் சொந்த உழைப்பில் தன் தங்கையைக் காப்பாற்றுவதாகச் சொல்லும் ஒரு வசனம் வருகிறது. ஆக இதற்கு முந்திய ஆரம்பக் காட்சிகள் அனைத்தும் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு தடவைக்கு இரு தடவை சொல்லி மனதில் பதிய வைக்கும் மரபைச் சார்ந்ததே தவிர அவசியமற்றவை. இங்கிருந்து தான் கதை ஆரம்பிக்கிறது. இந்த மகேந்திரன் இதற்கு அடுத்ததாக உதிரிப் பூக்களை உருவாக்கப் போகும் மகேந்திரன் இல்லை. முள்ளும் மலரும் மகேந்திரன் டிபிகல் தமிழ் சினிமாக் கதை சொல்லும் மகேந்திரன் தான். இது எப்படி சாத்தியமாயிற்று.? பின்னர் இப்போது நான் தெரிந்து கொள்கிறேன், முள்ளும் மலரும் படம் இயக்குவதற்கு முன் மகேந்திரன் தமிழ் சினிமாவின் வெற்றிகரமாக செயல்பட்டு வந்த சினிமா கதைக்காரர். சினிமா கதை வசனம் எழுதி வந்தவர். அவரது இயக்குனராகும் ஆசைக் கனவு முள்ளும் மலருமாக வந்துள்ளது.

ஆனால் இதை விட்டு வெளிவரும் ஆரம்ப பிரயத்தனம் என்றே முள்ளும் மலரை நான் பார்க்கவேண்டும். அடியோடு பெயர்த்து எறிந்து விடக் கூடாது. அபத்தமான வசனப் பிரசங்கங்கள் இல்லை. குறைந்திருக்கின்றன. வசனங்கள் குறைந்திருந்தாலும், அதன் பொய்யான வீராவேசப் பாணி, நாடக பாணி நடிப்பு, எல்லாம் மறைந்து விடவில்லை. இயல்பான சூழலை உருவாக்க முடியவில்லை. குடிசை தான். ஆனால் குடிசையின் சூழல் இல்லை. ஏழைப் பெண் அழகாக இருப்பாள் தான். ஆனால் இதில் வரும் பெண்கள் எல்லாம் பவுடரும் லிப்ஸ்டிக்கும் பூசிய செக்கச் சிவந்த பெண்கள். ஏழைக் குடிசைப் பெண்கள் இல்லை. படாபட் லட்சுமி வேறே எப்படி இருப்பாளாம்? ரஜனி பின் எப்படி வசனம் பேசி தன் வீராப்பைக் காட்டுவாராம்? “என்னைக் குடிகாரன்னு சொன்னான். வேலை வேட்டி இல்லாதவன், சண்டைக்காரன்னு சொன்னான். பொறுத்துக்கிட்டேன். என் தங்கைக்கு சோறுகூட போடாமல் அலையறேன்னு சொன்னானே அதைத் தான் பொறுக்கமுடியலே” இது சிவாஜி கணேசன் வசனம் இல்லைதான். ஆனால் அந்தக் காட்சியும், இந்த வசனமும் ரஜனிகாந்தின் முகம் போற கோணலும், கை ஆட்டலும் கொஞ்சம் அடக்கிவாசிக்கும் தமிழ் ஹீரோத் தனம் தான். அடக்கி வாசித்தாலும் தமிழ் சினிமாத் தனம் தான். ரஜனிகாந்த் வசனம் தான் பேசுகிறார். அந்தக் காட்சியில் ஒரு அண்ணன் கோபத்தில் சீறவில்லை. அவன் பேச்சு இல்லை. அப்படி ஒரு பெரிய புரட்சிகர மாற்றம் வந்தால் தான் தமிழ் சினிமா என்பது உண்மையில் சினிமா ஆகும்.

நான் ஒவ்வொரு காட்சியாக ஒவ்வொரு வசனமுமாக, ஒவ்வொரு திருப்பத்திலும் வரும் குணமாற்றமுமாக சொல்லிக்கொண்டே போக வேண்டிய அவசியமில்லை. இதில் நான் தமிழ் வாழ்க்கையையோ தமிழ் ஏழைகளையோ பார்க்கவில்லை. ரஜனியையும் படாபட் லட்சுமியையும் தான் நாம் பார்க்கிறோம். எல்லோரும் வழக்கமான பாத்திர வார்ப்புகள் தான். அதே ரஜனி தான். அதே வெண்ணிற ஆடை மூர்த்தி தான். கிராமத்து மனிதர்கள் அல்ல.

இதில் வரும் முதல் காதல் பாட்டுக் காட்சி. அதைப் பற்றி மிக பிரமாதமான வெற்றி என கொண்டாடப்படும், காரில் கிராமத்துப் பெண்களை ஏற்றிக் கொண்டு பாடிக்கொண்டே சரத் கார் ஓட்டும் காட்சி. சரத்துக்கு கார் ஓட்டத் தெரியும் தான். ஆனால் அவர் ஸ்டீரிங் வீலை பாதி இப்படியும் பாதி இப்படியுமாக ஒரு கால் சுற்று வளைப்பதிலிருந்தே ஏன் கார் ஓட்டத் தெரிந்தவர் அபத்தமாக ஸ்டீரிங்கைச் ஆட்டவேண்டும் என்று கேட்கத் தோன்றுகிறது. கார் நேராகத் தான் ஓடுகிறது. ஸ்டீரிங்க் தான் ஆடுகிறது கால் வட்டமாக. சரி. அந்தப் பாட்டு யார் இசை அமைத்தால் என்ன? யார் பாடினால் என்ன? முற்றிலும் அபத்தமாகப் படமாக்கப்பட்ட காட்சி அது. அப்படி இருக்க, அந்தக் காட்சி இல்லாது கதை வளராது என்று மகேந்திரன் தயாரிப்பாளர் செட்டியார் ஒருவரிடம் வாதாட வேண்டி வந்ததாகவும் அவர் பணம் கொடுக்க மறுத்தாகவும் ஒரு வரலாறு சொலலப் படுகிறது. இந்தப் பாட்டும் கதையும் எப்படிப் பின்னிப் பிணைந்தது என்று தமிழ் சினிமா இயக்குனரோ கதைக்காரரோ தான் நம்புவார். சினிமா என்ற ஊடகத்தைத் தெரிந்தவர் சொல்லமாட்டார். தமிழ் சினிமாவுக்குத் தான் இந்த மசாலா தேவை. பின் ஏன் மகேந்திரனும் மற்றவர்களும் பாட்டும் டான்ஸும் நீண்ட வசனங்களும் இல்லாத தமிழ் சினிமாவை நோக்கிச் செல்வதாகவும், முள்ளும் மலரும் தான் முதல் தமிழ்ப் படம் Cinema as a visual medium ஆக வந்து சரித்திரம் படைத்ததாக பாராட்டுகிறார்கள். பாராட்டிக்கொள்கிறார்கள்? இதில் எந்த தமிழ் சினிமாத்தன மசாலா இல்லை?. மற்ற படங்களில் உள்ள கடுமையில் கோரத்தில், இல்லை தான். ஆனால் எந்த மசாலாக்கள் வேண்டாமோ அவை அத்தனையும் ”எல்லாத்திலேயும் கொஞ்சம் கொஞ்சம் எதுக்கும் போட்டு வைக்கலாம்”, என்று போடப்பட்டிருப்பது, பாது காப்பு கருதியோ அல்லது தமிழ் சினிமாவுக்கு கதை வசனம் எழுதிய பழக்கத்தின் காரணமாகவோ, இருக்கத் தான் செய்கின்றன.
தன்னை வேலையை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டது காளிக்குக் கோபம். அவன் உடனே என்ன செய்கிறான்?. குடித்துவிட்டு ரோடில் கிடக்கிறான். (இது ஒரு தமிழ் சினிமா ஸ்டாக் காட்சி இல்லையா?) காளி ரோட்டு நடுவில் படுத்துக் கிடப்பது மாத்திரம் ஃப்ளாஷ் லைட் போடு ஏதோ நாடக மேடையில் ஸ்பாட் லைட் போடுவது போல போட்டிருக்கும். எந்த ஊரில் எந்த ரோடில் நடுவில் அப்படி வட்டமாக குடித்துக்கிடப்பவனைச் சுற்றி ஃபளாஷ் லைட் போட்டிருக்கும்.? இது தமிழ் சினிமா பேத்தலான ஸ்டாக் காட்சி அல்லவா? நியாயமாக அவன் இருட்டில் ஒரு ரோட் ஓரத்தில் ஒரு பள்ளத்தில் தடுமாறி விழுந்து கிடப்பான். இருக்கும் இடம் தெரியாது. ஒரு வேளை மறு நாள் காலையில் அகப்பட்டால் உண்டு.. இல்லையெனில் மயக்கம் தெளிந்து காலையில் வீடு திரும்புவான். ஆனால் இது தமிழ் சினிமா. அந்தக் கண்ணைக் கூசும் வெளிச்சத்திலும் காரோ லாரியோ ஒன்று அவன் மேல் ஏறி அவன் கையை மாத்திரம் முறித்துவிட்டுப் போகும். இதில் கதையும் அபத்தம். காட்சிப் படுத்தியதும் அபத்தம் என்று தான் சொல்ல வேண்டும்.

உதிரிப் பூக்களின் மகேந்திரனின் முதல் படத்தைப் பார்க்கக் கிடைத்த அதிர்ஷ்டத்தை எண்ணிக் காத்திருந்த எனக்கு இந்த ஏமாற்றத்தில் இப்படி எழுத நேர்ந்துள்ளது மனதுக்கு மிகவும் வருத்தம் தருகிறது. இதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால் பார்ப்பதை, உணர்வதை எழுதித் தான் ஆகவேண்டும். இது ரஜனி காந்துக்கு புதிய திருப்பத்தை ஸ்டாராக வாழ்வு தந்த படம் என்கிறார்கள். படமும் மகத்தான் வெற்றி என்கிறார்க்ள். அது பற்றி பிர்சினையே இல்லை.

சரத் பாபு வீட்டின் முன் ரோடில் நின்று கொண்டு வள்ளியை பார்த்து “வள்ளி நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்பான். அவன் அப்படி எண்ணக் கூடும். அந்த வார்த்தைகளில் சொல்லவும் கூடும். ஆனால் அப்படிச் சொல்லக் கூடிய சூழலோ நம்பகமான இயல்பான காட்சியோ, அந்த விருப்பத்தைச் சொல்ல நேரும் சந்தப்ப உரையாடலோ உருவாக்கப் படாது இப்படி நேருக்கு நேர் சந்தித்துச் சொல்வது, அது நாம் நம்புவது நாடக மேடையில் தான் நடக்கும். அங்கு வேறு வழியில்லை. ஆனால் சினிமாவில் சூழலையும் நம்பகமான பேச்சுக்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்க வேண்டும். அதிலும் தமிழ் சினிமாவில் இயல்பான யதார்த்தமான காட்சிகளை உருவாக்க முனைந்துள்ள மகேந்திரன் செய்ய வேண்டும்.

வள்ளி கல்லுடைக்கும் இடத்தில் வேலை செய்யப் போயிருக்கிறாள் என்று கேட்டதும் யாரும் இல்லாத வெளியில், ரோடில் வள்ளி வள்ளி என்று சத்தமிட்டுக்கொண்டே ஓடுவது ஒரு ஸ்டாக் தமிழ் சினிமா காட்சி. சங்கராக இருந்தால் தென் அமெரிக்க ஆண்டீஸ் மலைத் தொடரின் ஒரு மலை முடுக்கில் நின்று கொண்டு “வள்ளி, வள்ளி” என்று சத்தமிட்டால் நல்லாருக்கும் என்று சொல்லியிருப்பார். ஆனால் மகேந்திரனது லோ பட்ஜெட், படம். யதார்த்தப் படம். தமிழ் சினிமாவில் முதல் அடி வைப்பில் இவ்வளவு தான், கட்டு படியாகும். நம்மூர் வயல் வெளியில் தான் கூவிக்கொண்டு ஓட முடியும்.
அது சரி, வேலைக்கும் போகவில்லை. இவர் எப்படி குடும்பத்தை நடத்தினாராம். வெண்ணிற ஆடை மூர்த்தி ரூ 10,000 கடன் கொடுத்தார் கடை வைக்க. அந்த கடை எங்கே? அந்தக் கடையையும் காணோம். அதில் ஒரு நாள் கூட காளி உட்கார்ந்திருந்தோ, கடைக்குச்சரக்கு வாங்கிப் போட்டோ பார்க்கவில்லை. பின் வள்ளியைப் பார்த்து வசனம் பேசுவது தமிழ் சினிமா தான். . சரி. சரத் பாபுக்கு வள்ளியைக் கல்யாணம் செய்து கொள்ள வீடு வந்து கேட்பது சரி. நடக்கும். ஆனால் தன் தப்பிற்கு தண்டனை கொடுத்த எஞ்சினீயரிடம் வன்மம் கொள்வதும், அவனுக்கு கல்யாணம் செய்து கொடுக்காமல், ஊரறிய ரஜனியின் நண்பனது பெண்டாட்டியை வைப்பாக வைத்துக்கொண்டிருப்பவனுக்கு கட்டிக் கொடுக்கிறேன் என்பது என்ன தன்மானம்?, என்ன தங்கை பாசம்? சமயத்துக்கு உதவியவனுக்கு கைம்மாறா? இல்லை வாங்கிய 10,000 ரூபாயை இப்படி தங்கையைக் கல்யாணம் செய்து கொடுத்து கழித்துக்கொள்கிறானா? எப்படி அர்த்தம் எடுத்துக்கொள்வது? இல்லை இப்படி ஒரு திடீர் திருப்பம் நல்லாருக்கும். தமிழ் திரைக் கதை மரபு சார்ந்தது தான். என்றா? தமிழில் திரைக்கதை எழுதுகிறவர் என்னவேண்டு மானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதி வசனமும் எழுதி விட்டால் ஆச்சா? ஊரே அவனை இழிவாகப் பார்க்கிறது.

கடைசிக் காட்சி இருக்கே அது தமிழ் சினிமாவுக்கே பேடண்ட் ஆகிவிட்ட அபத்தம். காளி தன் தங்கையை சரத் கல்யாணம் செய்து கொள்ள ஊரே ஒத்துழைத்து, காளியைத் தாண்டி செல்கிறது. காளி அங்கேயே நின்று விடுகிறான். நதியின் கரை. காளி சிலையாக கரையோரம் நின்று கொண்டிருக்கிறான். அந்தத் தூரக் காட்சிக்காகவே ரஜனி அங்கு நின்று கொண்டே இருக்க வேண்டும். கொஞ்ச தூரம் போன பிறகு வள்ளி திரும்பி ஓடி வருகிறாள் ரஜனியிடம். ஏன்? அங்கு ஒரு வசனம் உணர்ச்சி பொங்க வீராவேசத்தோடு பேசவேண்டும். ”பாத்தீங்களாடா என் தங்கச்சி வள்ளியை? இப்போ எங்கேடா உங்க மூஞ்சியைக் கொண்டு வச்சுக்குவீங்க? என்கிறான் காளி வீராப்புடன்.

இந்தக் காட்சி, இந்த வசனம், இந்த திடீர் திருப்பம் எல்லாம் ரூம் போட்டு யோசிச்சு எழுதும் டிபிகல் தமிழ்த் திரைக்கதை, திரை வசனம் தான். இத்தோடு முடியவில்லை. கடைசியில் காளிசொல்கிறான். “ இப்போ நான் சொல்கிறேன். நானே வள்ளியை அவ இஷ்டப்படியே கட்டிக் கொடுக்கறேண்டா என்று சரத் பாபுவிடம் சேர்க்கிறான் வள்ளியை. இந்த கோபம் வீராவேசம், தன் மானம் புண்ணாக்கு எல்லாம் எதுக்கு? வசனம் பேச மாத்திரமா?

தன் தங்கையைக் கேவலமா பேசிவிட்டான் என்று வெண்ணிற ஆடை மூர்த்தியை அடித்து உதைத்து துவம்சமாக்கி ரோடில் சவம் மாதிரி கிடக்க விடுகிறான். அவன் அடித்துத் துவைக்கும் போது கசாப் கடையில் மாமிசம் கொத்துக்கறியாகிக் கொண்டிருக்கும் காட்சி இடையில் காட்டப்படுகிறது. சரி. ரொம்ப ஸ்பஷ்டமாக சந்தேகத்துக்கு இடமில்லாது கசாப்புக்கடையையும் காட்டி சினிமா விஷுவல் மீடியம் என்று சொல்லியாயிற்று. அடுத்த நாள் காலையில் வெண்ணிற ஆடை மூர்த்தி, நேற்றைய கொத்துக் கறி, இன்று நன்றாக மடிப்பு கலையாத சலவை ஜிப்பாவும் வேஷ்டியுமாக உட்கார்ந்திருக்கிறார். எங்கேடா அவங்க? என்று ரஜனி கேட்க, விரைப்பாக ”உன் தங்கைக்கு கல்யாணம் நடக்குது அங்கே போய்ப்பாரு” என்று சொல்ல முடிகிறது. அந்த ஆள் ஒன்று மேட்டுப் பாளையம் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும், இல்லை பக்கத்து மயானத்தில் தகனத்துக்குக் காத்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் சினிமா, அவருக்கு காஸ்ட்யூம் தயாராக இருக்கு. ரஜனி வர ஷாட் அடுத்தப்ப்போல இருக்கு, காத்திட்டு இருக்கார்.

இப்படி சொல்லிக்கொண்டே போவது எனக்கு இஷ்டமாயில்லை உதிரிப் பூக்கள் பார்த்த சந்தோஷத்தில் எதை எதையோ நினைத்து எதிர்பார்த்து இருந்தேன். கடைசியில் நிறைய தமிழ் சினிமாவுக்கு கதை வசனம் எழுதி வெற்றிகரமாக இருந்தவர் பாதை மாற முனைந்து பழசை மறக்கவும் முடியாது, புதுசை புரிந்து கொள்ளவும் முடியாத ஒரு தவிப்பைத் தான் பார்க்க நேரிட்டுவிட்டது. இருப்பினும் அடுத்து வர இருப்பது உதிர்ப் பூக்கள். இது எப்படி நிகழ்ந்தது.?

கடைசிக் காட்சியில் விஜயன் தானாக ஆற்றுக்குள் இறங்கி தன்னை மூழ்கடித்து இறக்கும் காட்சி தவிர வேறு எதுவும் குறை சொல்ல இருந்ததாக எனக்கு இப்போது நினைவில் இல்லை. பார்த்து எவ்வளவு வருஷங்களோ தெரியாது.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </