இதழ்: 6, நாள்: 15 - வைகாசி -2013 (May)
   
 
  உள்ளடக்கம்
 

மகேந்திரனின் முள்ளும் மலரும் – நினைத்திராத ஒரு ஆரம்பம் -வெங்கட் சாமிநாதன்

--------------------------------
முள்ளும் மலரும் சில பகிர்தல்கள் - பாஸ்கர்சக்தி
--------------------------------
முள்ளும் மலரும்... - எஸ். ஆனந்த்
--------------------------------
முள்ளும் மலரும்... - சுஜாதா தேசிகன்
--------------------------------
முள்ளொன்று மலர்ந்தது. - கார்த்திக் பாலசுப்பிரமணியன்
--------------------------------
ஒருபோதும் வாடாத 'மலர்' - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
முள்ளும் மலரும் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
--------------------------------
முள்ளும் மலரும் - முள்ளில் மலர்ந்த மலர்....- அருண்
--------------------------------
   

   


முள்ளும் மலரும்...

- எஸ். ஆனந்த்


எழுபதுகள் தமிழ் திரையுலக சரித்திரத்தின் ஒரு முக்கிய காலகட்டம். புதிய இயக்குநர்கள், புதிய கதாநாயகர்கள், கதாநாயகிகள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், புதிய முயற்சிகள் என மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருந்தன. இவர்களில் பலர் இளைஞர்கள். புதிய அலை ஒன்று தமிழ் திரையுலகில் உருவாகி தமிழ் சினிமாவை உன்னத நிலைக்குக் கொண்டுசெல்லும் எனும் எதிர்பார்ப்புகளுடனும், கற்பனைகளுடனும் காத்திருந்த காலம். ஆவலுடன் எதிர்பார்த்த அந்த ‘மறுமலர்ச்சி’ ஒரு கனவைப் போல அப்படியே கடந்து போய்விட்டது. இருந்தாலும் இன்றுவரை பேசப்படும் சில குறிப்பிடத்தக்க படைப்புகள் அந்த நேரத்தில் உருவானதை மறுக்க இயலாது.

பாரதி ராஜா கிராமப்புறக் கதைகளைச் சொல்லத் தொடங்கிக் கவனம் பெற்றார். அவர் சீடர் கே.பாக்கியராஜ் நாடக பாணி வசனங்களையும் சுவராசியமான கதைகளையும் கொண்டு அளித்த திரைப்படங்கள் தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடின. திரைப்படக் கலை பற்றி அறிந்திருந்த அனந்துவின் துணைகொண்டு, மேற்கத்திய திரை விழாப் படங்களின் சாயல்களில் படைப்புகளை அளித்தவர் கே.பாலச்சந்தர். தழுவல்களாக அவரால் உருவாக்கப்பட்ட பல படைப்புகள் விமரிசகர்களாலும் மக்களாலும் பாராட்டப்பட்டன. துரை (பசி), ருத்ரையா (அவள் அப்படித்தான்) போன்ற படைப்பாளிகளுக்கு உரிய இடம் மறுக்கப்பட்டதும் அக்காலத்தில் தான். ராபர்ட் ராஜசேகரன் போன்று வெற்றிகண்டு பின்னர் காணாமற் போனவர்களும் உண்டு. அந்த நேரத்தில் தங்களின் சீரிய படைப்புகளால் கவனம் பெற்றவர் இருவர். ஒருவர் மகேந்திரன் , மற்றொருவர் பாலு மகேந்திரா.

கதை வசனகர்த்தாவான மகேந்திரன் இயக்குநராகத் திரையுலகிற்கு அறிமுகமானது முள்ளும் மலரும் திரைப்படத்துடன். சிவாஜி நடித்த தங்கப் பதக்கம் போன்ற மிகையுணர்ச்சி மிக்க திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதிக்கொண்டிருந்த மகேந்திரனின் அசலான திறமையும் திரைப்படக் கலை பற்றிய ஆழ்ந்த அறிவும் வெளிப்பட முள்ளும் மலரும் வழிசெய்தது. 1978 இல் முப்பது வருடங்களுக்கு முன் வெளிவந்த இத்திரைப்படம் அன்றுபோலவே இன்றும் நம்மை முழுமையாகப் பாதிக்கும் படைப்பு. அண்னன் தங்கை பாசம் பற்றிய கதை என்பது முதல் காட்சியிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. தங்கையிடம் பாசம் அதிகம் கொண்ட முரட்டுச் சிறுவனான காளி வளர்ந்து பெரியவனாகும் போதும் மீண்டும் கோபத்தில் கார் கண்ணாடியை உடைப்பவனாக, எதிர்த்துக் கேள்வி கேட்பவனாக அறிமுகமாகிறான். இயற்கை அழகு மிக்க மலைப்புற கிராமத்தில் தங்கையுடன் வாழும் காளி, அவன் தங்கை வள்ளி, அவர்களின் உதவியால் அங்கு தாயுடன் குடியேறும் மங்கா, பணிநிமித்தம் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கும் பொறியியலாளரான காளியின் மேலதிகாரி ஆகிய பாத்திரங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் எளிமையான கதை.

உணர்ச்சிகளால் பின்னப்பட்டிருக்கும் பாத்திரம் காளியினுடையது. எந்த நேரம் என்ன விதமாக நடந்துகொள்வான் என்பது யாருக்கும் தெரியாது. தங்கை கேட்டவுடன் அநாதைகளாக வந்த மங்காவுக்கும் தாய்க்கும் அடைக்கலம் கொடுப்பது, ஊராருக்கு உதவுவது என நல்ல குணங்கள் கொண்டவன். கிராமத்தின் செல்லப் பிள்ளையாகவும் அதே நேரத்தில் பிறர் பயப்படும்படி அளவு மீறிக் கோபம் கொள்பவனாகவும் அந்த ஊரில் வலம் வருகிறான். தட்டிக்கேட்க ஒரு மேலதிகாரி வந்தவுடன் நிலமை மோசமகிறது. முதன்முறையாக அதிகாரியை சந்திக்கும் போதே காளிக்கு அவரிடம் பகை உருவாகிவிடுகிறது. இறுதிவரை அவரைப் பகைவனாகவே பார்க்கிறான்.
காளியின் தங்கை வள்ளி அவனுக்கு நேர் எதிர்; மலர் போல மிருதுவானவள். வள்ளிக்குத் தாயும் தந்தையும் அவளுடைய அண்ணன் காளிதான். மங்கா துணிவு மிக்கவள். காளியின் முரட்டுத்தனத்தை சட்டை செய்யாதவள். இறுதியில் வள்ளி விரும்பியபடி மேலதிகாரியை திருமணம் செய்துகொள்ள வழி செய்கிறாள். மேலதிகாரி கண்டிப்பானவர். காளிக்கு அவரைப் பிடிக்கவில்லையே தவிர காளிக்கு உதவுவதும், வள்ளியை மணமுடிக்க நேரில் அவன் வீட்டுக்கு வந்து பெண் கேட்பதுமாக நிதானமும் கனிவும் கொண்டவராக அவரைக் காண்கிறோம்.

காளியாகவே மாறி கோபம், மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் யதார்த்தமாக, வெகு அழகாகத் தனது நடிப்பால் வெளிப்படுத்துவது நடிகர் ரஜனிகாந்த். ஒரு நல்ல நடிகரை சிகரெட்டையும் துண்டையும் தூக்கிப்போட்டுப் பிடிக்கவைத்து ’ஸ்டைல்’ நடிகராக ஆக்கிவிட்டது தமிழ் திரையுலகம். வள்ளியாக ஷோபாவின் நடிப்பு பற்றி சொல்லவே வேண்டாம். மங்காவாக ஜெயலட்சுமியும், மேலதிகாரியாக சரத் பாபுவும் சிறப்பாகத் தங்கள் பாத்திரங்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர். நடித்திருப்போர் அனைவரிடமிருந்தும் யதார்த்தமாகவும் இயல்பாகவும் நடிப்பை வெளிப்படுத்தச் செய்திருப்பதில் மகேந்திரன் தனது முதல் படைப்பிலேயே சிறப்பாகச் செயல்பட்டிருகிறார். விறுவிறுப்பான பாத்திரங்களில் நடித்து அறியப்பட்ட ரஜனிகாந்த்தை ஒரு கை இழந்த காளி பாத்திரத்தில் சிறப்பாக நடிக்க வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


படம் முழுக்க பாத்திரங்களின் உணர்வுகள் சிறப்பாக வெளிப்படுத்தப்படும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. வள்ளிக்கும் என்ஜினியருக்கும் இடையே உணர்வுகள் மௌனமாக பறிமாறிக்கொள்ளப்படுகின்றன. வெகு சில சந்திப்புகள், குறைவான வார்த்தைப் பரிமாற்றங்களில் இருவரும் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்வதை மகேந்திரன் அழகாகச் சொல்கிறார். ஜீப்பை ஓட்டுவதாகப் பாவனை செய்துகொண்டிருக்கும் வள்ளியை என்ஜினியர் முதல் முதலில் சந்திக்கும் காட்சியில் அவர் கேட்டவுடன் கண்களில் நீர் பொங்க குழந்தை போல அழத் தயாராகும் வள்ளியை தோழிகளுடன் ஜீப்பில் அவர் அழைத்துச் செல்வதிலிருந்து இறுதியில் என்ஜினியர் அவளிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்பது வரை ஒவ்வொரு காட்சியாகச் சொல்லலாம். முரடனான காளியும் மங்காவும் தங்கள் காதலைப் பரிமாறிக்கொள்வதும் அவ்வாறே காட்சிகளைக் கொண்டு சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அளவான, இயல்பான வசனங்கள் இக்காட்சிகளுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

ஒளிப்பதிவைப் பொறுத்தவரை பாலு மகேந்திரவின் கைவண்ணம் படம் முழுக்க பரிணமிக்கிறது. இது ஆர்வோ (Orwo) வண்ணப் படம். வண்ணம் சீராக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் படமாக்கப் பட்டிருக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன்பு அரங்கில் பார்த்த பல காட்சிகள் இன்னும் நினைவில் இருக்கின்றன. இப்போது கிடைக்கும் டிவிடி ஓரளவு நல்ல பிரதியாக இருந்தாலும் ஒளிப்பதிவின் அழகைப் பல மடங்குகள் குறைவாகவே அளிக்கிறது. உதிரிப் பூக்கள் திரைப்படத்தை எங்கள் திரைப்பட சங்கத்தில் திரையிட்ட போதும் இதே குறை தான். இம்மாதிரியான முக்கிய தமிழ் திரைப்படங்கள் அனைத்தையும் மூலப் பிரதிகளிலிருந்து அவற்றின் தரம் குறையாது டிஜிட்டல் மறுபதிப்பாக உருவாக்குவதுடன், ஆவணப்படுத்திக் காக்க வேண்டியதும் அவசியம். அரசும், திரையுலகைச் சேர்ந்தவர்களும் , திரைப்பட ஆர்வலர்களும் இந்த முயற்சியில் இணையவேண்டும் இல்லையெனில் விரைவில் பல முக்கிய தமிழ்த் திரைப்படங்கள் இருந்த இடம் தெரியாது காணாமற் போய்விடும்.

இந்தப் படத்தில் நான்கு பாடல்கள். இனிமையான இசையுடன் கதையோட்டத்துடன் இணைந்து அழகாகப் படமாக்கப்பட்டிருக்கும் பாடல்கள், அவற்றைப்பற்றி குறை சொல்வதற்கில்லை. இருந்தும் இன்று இப்படத்தைக் காணும் போது பாடல்கள் இல்லாது இசையும் மட்டுப்படுத்தப்பட்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் எனும் எண்னம் மனதில் ஓடுவதைத் தவிர்க்க முடியவில்லை. (இளையராஜா ரசிகர்கள் மன்னிக்க.)

தமிழ் திரைப்படங்களைப் பாடல்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது பற்றிய ஆதங்கம் எனக்கு உண்டு. முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற திரைப்படங்கள் உருவாகிக்கொண்டிருந்த காலங்களில் கதை சார்ந்து, பாத்திரங்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்குமாறு பாடல்கள் படமாக்கப்பட்டன. உருவாக்கப்படும் படைப்பிற்குச் சற்றும் தொடர்பில்லாத பாடல் காட்சிகளை கோடிகள் செலவழித்துப் படமாக்கி இடைச் செருகல்களாக நிரப்பும் பரிதாபத்தை சங்கர் போன்ற இயக்குநர்கள் தொண்ணூறுகளில் துவங்கி வைத்தனர். அது இன்று வரை தொடர்கிறது. கதையின் வலிமையையும் சீரான ஓட்டத்தையும் இடையிடையே வரும் பாடல்கள் நீர்த்துப்போகச் செய்கின்றன. பெரும்பாலான திரைப்படங்களில் வலுவற்ற கதைகளின் ஓட்டைகளை நிரப்புவதற்கும், இயக்குநரின் இயலாமையை மறைப்பதற்காகப் பார்வையாளரின் கவனத்தைத் திருப்புவதற்கும் இத்தகைய பாடல் காட்சிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான் நிதர்சனமான உணமை.

நம்மூரில் பெரிய இயக்குநர்களாக அறியப்படுபவரகள் கூட இயக்குநருக்கான அடிப்படை நெறிகள் எவற்றையும் பின்பற்றுபவர்கள் அல்ல என்பதை நாம் அறிவோம். மூலக்கதை பற்றியும் அதை எழுதிய எழுத்தாளரின் பெயரையும் அறிவிப்பது உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். முள்ளும் மலரும் திரைப்படத்தில் எழுத்துக்கள் ஓடத் துவங்கும்போது முதலில் உமா சந்திரன் எழுதி கல்கி வெள்ளி விழாமலரில் பரிசு பெற்ற கதை என்பது அறிவிக்கப்டுகிறது. காளியின் பாத்திரம் கையை இழக்கும் பகுதி வரை அக்கதையிலிருந்து எடுத்துக்கொண்டு மீதியைத் தானே எழுதி கதையை உருவாக்கியதாக மகேந்திரன் கூறியிருப்பதாகப் படித்திருக்கிறேன். மகேந்திரனின் உதிரிப் பூக்கள் படத்திலும் கதை புதுமைப்பித்தனுடையது என அறிவிக்கப்படுகிறது.

ஒரு நல்ல திரைப்படம் முடிந்து அரங்கிலிருந்து செல்லும் பார்வையாளர் மனதில் சுமந்து செல்வது அப்படைப்பு அவர்களுள் எழுப்பிய உணர்வுகளைத்தான் என்று சொல்வார்கள், உணர்வுகள் நம்மை முழுமையாக ஆக்கிரமிப்பவை. இசை, நுட்பங்கள்,. உத்திகள், ஒளிப்பதிவு எல்லாம் அதற்கு அப்புறம்தான். சிறந்த படைப்புகள் அனைத்துமே நமது உணர்வுகளைப் பாதிப்பவைதான். முள்ளும் மலரும் அத்தகைய படைப்பு. முழுமையான ஒரு சிறந்த அனுபவத்தைப் அளிப்பதாக, மனதை உணர்வுகளல் நிறைத்துவிடுவதாக அமைந்து விடுகிறது.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </