இதழ்: 17     ஆடி (01 - 15) (July 01 - 15), 2014
   
 
  உள்ளடக்கம்
 
பிரசன்ன விதானகேவின் "வித் யூ விதவுட் யூ" - யமுனா ராஜேந்திரன்

--------------------------------

With you Without you - ஒரு களப்பணியாளனின் நேரடி அனுபவம் - தமிழ் ஸ்டுடியோ அருண்

--------------------------------
பிரசன்ன விதானகே நேர்காணல் - சுதீஷ் காமத், தமிழில்: யுகேந்தர்
--------------------------------
பிரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல் - கேள்விகள்: விஸ்வாமித்திரன், தமிழில்: அஜீதன், சித்ரா
--------------------------------
ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 5 - பால் க்ரானின் :: தமிழில்: எஸ்.ஆனந்த்
--------------------------------
கண்ணாடியறையிலிருந்து எறியப்படும் கல் - தினேஷ் குமார்
--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 4 - தினேஷ் குமார்
--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 3 - பி.கே.நாயர்
--------------------------------
உலக சினிமா சாதனையாளர்கள் - 3 - இங்மர் பெர்க்மன் - அம்ஷன் குமார்
--------------------------------
ஒரு சகாப்தத்தை மீட்கும் பணி - தமிழில்: அம்ஷன் குமார்
 
   

   

 

 

பிரசன்ன விதானகேவின் "வித் யூ விதவுட் யூ"

- யமுனா ராஜேந்திரன்

குறிப்பிட்ட இரண்டு பாத்திரங்களில் ஏதாவதொரு பாத்திரத்தின் மீதும் பார்வையாளர்கள் அனுதாபம் செலுத்த வேண்டும் என நான் விரும்பவில்லை. இந்த இரு பாத்திரங்களையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவே விரும்புகிறேன்.

இயக்குனர் பிரசன்ன விதானகே
The Hindu, 3O june 2O14.

I

இருபது ஆண்டுகளில் சிங்கள மொழியில் வெளியான முக்கியமான திரைப்படங்கள் அனைத்துமே சிங்கள ராணுவம் குறித்த படங்களாகவே இருக்கின்றன. பிரசன்ன விதானகேயின் பவுர்ணமி நாளில் நிகழ்ந்த மரணம் மற்றும் ஆகஸ்ட் சூரியன், இநோகா சதாயாங்கினியின் காற்றுப் பறவை, அசோகா ஹந்தகமாவின் இந்த வழியால் வாருங்கள் அல்லது கம் அலாங்க் திஸ் ரோடு : ஏ நைன் ஹைவே மற்றும் இனி அவன், மோஹன் நியாசின் களு சுது மல் அல்லது நிறமற்ற பூக்கள், சோமரட்ன திசநாயக்கேவின் சரோஜா, துசரா பிரீசின் பிரபாகரன், போதி கீர்த்தி சேனாவின் மாதா, விமுக்தி ஜெயசுந்தராவின் த பார்சேக்கன் லேன்ட், சரத் வீரசேககராவின் காமினி, சந்திரன் ரட்னத்தின் தி ரோட் டு எலிபன்ட் பாஸ் போன்ற திரைப்படங்கள் அனைத்தும் சிங்களப் பிரதேசங்களிலும், சிங்களவர் உளவியலிலும் தமிழர் பிரச்சினை மற்றும் சிங்கள ராணுவம் ஏற்படுத்திய தாக்கங்களையே பேசுகின்றன.

சிங்கள் ராணுவம் சிங்களத் திரைப்படங்களில் இவ்வளவு பெரிய பாத்திரம் வகிக்க என்ன காரணம்? இலங்கையின் அரசியல் மற்றும் சிவில் சமூகம் கல்விஅமைப்பு என அனைத்துமே ராணுமயப்படுத்தப் பட்டிருக்கிறது. கிராமப்புறத்தில் வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழித்த வேலைவாய்ப்புத் துறையாக ராணுவம் இருக்கிறது. கடந்த முப்பதாண்டுகளில் நடந்து வந்ததும் முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்ததும் தமிழ் பயங்கரவாதத்திற்கு எதிரான சிங்கள தேசிய விடுதலை யுத்தம் எனும் கருத்தை யுத்தத்தை நடத்திய அரசியல்வாதிகள் தெற்கிலங்கை சமூகத்தில் விதைத்து வந்திருக்கிறார்கள். திரைப்படத் தணிக்கையின் மீதும், தயாரிப்பின் மீதும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் பெரும் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறது. குழந்தைகள். இளம்பெண்கள், தாய்மார்கள், பிக்குகள், சிவில் சமூக வாழ்வு, குடும்ப வாழ்வு என அனைத்தையும் தழுவியதாக உள்நாட்டு யுத்தம் பரவியிருக்கிறது. ராணுவம் எனும் அமைப்பும் அதனது துணைஉறுப்புகளும் பாலுறவு பழக்கவழக்கங்கள் உள்பட அன்றாட வாழ்வின் சகல தளங்கிலும் இலங்கைத்தீவு தழுவி தனது பிரசன்னத்தைக் கொண்டிருக்கிறது.

இரண்டு கோடி ஜனத்தொகை கொண்ட இலங்கைக்கு மூன்று இலட்சம் பேர்கள் கொண்ட ராணுவப்படை இருக்கிறது. சராசரியாக அறுபது குடிமக்களுக்கு ஒரு படையினன் எனக் கணக்கு வருகிறது. தெற்கு இலங்கையில் ராணுவப்பெருமிதமும் சாகசமும் குறித்த திரைப்படங்கள் ஒரு வகையினமாகவும், ராணவச்சேர்ப்பும் இடப்பெயர்வும் அச்சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளைச் சொல்லும் திரைப்படங்கள் இன்னொரு வகையினமாகவும் இருக்கின்றன. இதில் ராணுவ சாசகங்களைச் சொல்லும் திரைப்படங்களுக்குப் பாதுகாப்பு அமைச்சகமே தயாரிப்புக்கான உதவிகளை வழங்குகின்றன. ராணுவம் சிங்கள சமூகத்தின் குடும்பம், ஆண்பெண் உறவுகள், பொருளியல் போன்றவற்றில் ஏற்படுத்திய உளவியல் பாதிப்புகளைச் சொல்லும் படங்களை இலங்கை அரசு கடும் தணிக்கை விதிகளைக் கொண்டு ஒடுக்கி வருகின்றது.

ராணுவம் குறித்த பார்வைகள் என்பதும் அனுபவங்கள் என்பதும் தெற்கு இலங்கையில் இருந்து முற்றிலும் வித்தியாசமான வகையிலேயே வடகிழக்குத் தமிழர்களுக்கு இருக்கிறது. சிங்கள ராணுவம் என்பது தமிழ் மக்களைப் படுகொலை செய்யும் ஒரு ஆயுத இயந்திரம் என்பதும், தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் வல்லுறவு புரியும் ஒரு அரக்கர் கூட்டம்தான் சிங்கள ராணுவம் என்பது இம்மக்களின் அனுபவம். இதுவரையிலான சிங்கள ராணுவம் குறித்த சிங்க மொழிப் படங்களில் இப்பிரச்சினையைத் தொட்டுப் பேசியவை இரண்டே இரண்டு படங்கள்தான். ஓன்று அசோக ஹந்தகமாவின் இது எனது சந்திரன், மற்றையது பிரசன்ன விதானகேவின் வித் யூ விதவுட் யூ அல்லது உன்னோடும், நீ இல்லாமலும் திரைப்படம். சிங்கள சமூகத்தில் பிரசன்ன விதானகேவின் இடத்தை இந்த அளவில்தான் மதிப்பிட வேண்டும். தமிழ் வெகு மக்களைப் படுகொலை செய்த ராணுவம், தமிழ்ப் பெண்களைக் கூட்டமாகப் பாலியல் வல்லுறவு புரிந்து கொலைகள் செய்த, தமிழர் சொத்துக்களைச் சூறையாடிய சிங்கள ராணுவம் எனும் தனது அனுபவத்தை இப்படத்தில் வரும் செல்வி எனும் பெண் அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறார். அவளது பாத்திரப் படைப்பு எந்த இடத்திலும் இந்த நிலைபாட்டில் சமரசம் செய்து கொள்வதில்லை. படத்தில் இடம்பெறும் அவளது தற்கொலை கூட அதற்கு எதிரான கலகம் மட்டுமல்ல, சிங்களக் கூட்டுமனநிலையில் தீராத குற்றவுணர்வையும் அது விட்டுச் செல்கிறது.

காற்றுக்கென்ன வேலி, உச்சிதனை முகர்ந்தால் என இருபடங்கள் ஈழப்பிரச்சினையை முன்வைத்து வந்த தமிழக அரசியல் படங்கள். புகழேந்தி தமிழ்தேசியத்தை வெளிப்படையாகவே ஆதரித்து நிற்கும் இயக்குனர். காற்றுக்கென்ன வேலி திரைப்படம் இந்திய ராணுவம் இலங்கையில் பேரழிவைச் செய்து மீண்டபின் வெளியான படம். உச்சிதனை முகர்ந்தால் படம் முள்ளிவாய்க்கல் பேரழிவின் பின் வெளியான படம். காற்றுக்கென்ன வேலி திரைப்படத்தில் ஐபிகேஎப் அதிகாரி ஒருவரும் ஈழப்போராளிப் பெண் சந்திக்கும் காட்சி ஒன்றும் உண்டு. ஐபிகேப் நிகழ்த்திய வல்லுறவுகள் குறித்து அப்படம் விவாதிக்கவேயில்லை.

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தில் நல்லெண்ணம் கொண்ட தமிழகக் காவல்துறை அதிகாரி சட்டவிரோதமாக தமிழகத்தினுள் வந்த ஈழ சிறுமியைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கிறார். இரு படங்களிலுமே இந்திய ராணுவம், தமிழகக் காவல்துறை குறித்த விமர்சனங்கள் ஏதுமில்லை. தமிழகத்தில் காவல்துறை ஈழ அகதிகளை இப்படிப்பட்ட நிலையில்தான் அணுகுகிறதா? எனில் ஏன் இத்திரைப்படங்களில் வெளிப்படையாகப் பேசமுடியவில்லை? இப்படங்களில் மட்டுமல்ல சைனைட், மிசன் நைன்டிடேஸ், குற்றப் பத்திரிக்கை என எதிலுமே அரசியல் விவாதங்களே இல்லை. இந்திய, தமிழக தணிக்கைக் கட்டுப்பாடுகள் காரணம் என்பது நமக்குத் தெரியும். தணிக்கையில் எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் மெட்ராஸ் கபே மற்றும் டெரரிஸ்ட், இனம் படங்களில் கூட ஐபிகேஎப் தொடர்பான விவாதங்கள் என்பது இல்லை.

ஈழப் பிரச்சினை குறித்து வெளியாகி தமிழகத்தில் வரவேற்புப்பெறாத படங்கள், வெளியிட முடியாத படங்கள் எவ்வளவோ இருக்கின்றன. மண், மிதிவெடி, தேன்கூடு, ஆணிவேர் என அந்தப்பட்டியல் வெகுநீண்டது. இவைகளைக் கொண்டு வருவதில், திரையிடுவதில் என்ன சிக்கல்? தணிக்கைச் சிக்கல் எனில், இந்தத் தணிக்கையை எதிர்த்து எவ்வளவு இயக்குனர்கள் சவாலாகச் செயல்பட்டார்கள்? மட்டுமன்று ஐபிகேஎப் பிரச்சினையைப் பேசிய இன் த நேம் ஆப் புத்தா பட பிரிவியூவுக்கு வந்து பாராட்டியவர் எவரும் அந்தப் படத்தைத் தமிழகத்தில் திரையிட உதவு முன்வரவில்லை எனச் சொல்கிறார் அதனது இயக்குனர். என்ன காரணம்?

இந்தியாவில் இன்னும் ராணுவத்தினாலோ பாதுகாப்பு அமைச்சினாலோ கட்டுப்படுத்தப்படாத நீதியமைப்பும், திரைப்படத் தணிக்கை ரிவைசிங் கமிட்டியும் இருக்கிறது. பல இந்திய மற்றும் தமிழக இயக்குனர்கள் ரிவைசிங் கமிட்டி வரை சென்று போராடி படங்களைக் கொண்டு வருகிறார்கள். இன் த நேம் ஆப் புத்தா படம் கூட இந்தியாவில் தணிக்கைச் சான்றிதழ் பெற்றதுதான். ஓருவர் அரசை விமர்சித்து படம் எடுத்துவிட்டார் என்றால் தமிழகத்திலோ அல்லது பிற இந்திய மாநிலங்களிலோ பாதுகாப்பு அமைச்சோ அல்லது மாநில அரசுகளோ கொலை மிரட்டல் விடுவது இல்லை. தணிக்கையை எதிர்த்துப் பேசவும், ரிவைசிங் கமிட்டியில் சென்று போராடவும், அதனை ஆதரிக்கிற திரை ஆர்வலர்கள் செயல்படுவதற்குமான வாய்ப்பு தமிழகத்திலும் இந்தியாவிலும் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தில் ஈழப் பிரச்சினை பற்றி, முள்ளிவாய்க்கால் பற்றி உருப்படியாக எந்தப் படமும் உருவாகவில்லை. ஏன், புகலிட நாடுகளிலிருந்தும் கூட ஈழத்தமிழர்களிடமிருந்து ஐபிகேப் காலம் குறித்தோ அல்லது பின்முள்ளிவாய்க்கால் குறித்து எந்த முழுநீளப்படமும் வெளியாகவில்லை.

இந்தச் சூழலில் இலங்கையின் திரைப்படக் கலைஞர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்? படத்தில் குறைந்தட்ச அரசியல் இருக்குமென்றால் திரைக்கதை மற்றும் லொக்கேசன் போன்ற ஆவணங்கள் அரசிடமும் பாதுகாப்பு அமைச்சிடமும் அனுமதி வாங்க வேண்டும். அரசு குறித்த விமர்சனங்கள் இருந்தால் ராணுவ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். கொலை மிரட்டல்களையும் எதிர்கொள்ள வேண்டும். கொல்லப்பட்ட ஊடகவியலார்களின் பட்டியல் மிக நீண்டது. இதிலிருந்து தப்புவதற்காக மேற்கத்திய முதலீட்டுடன்தான் பிரசன்ன டெத் இன் எ புல் மூன் டே, ஆகஸ்ட் சன், வித் யூ அன்ட் விதவுட் யூ படங்களை எடுக்கிறார். அவரது படங்கள் இலங்கையில் திரையிடமுடிவதில்லை. உலகப் படவிழாக்கள்தான் பிரதானகளம். படம் வெளியாகி இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து மேற்கத்திய நாடுகளின் அழுத்தம், நீண்ட நீதிமன்றப் போராட்டங்களின் பின் அவரது படங்கள் இலங்கையை அடைகின்றன. அவர் சிங்கள மொழியில் படங்களை உருவாக்குகிறார் எனும் அளவில் சிங்கள மொழி பேசும் மக்கள்தான் அவரது ஆதாரமான டார்கெட் ஆடியன்ஸ். அவர்களோடு பேசுவதுதான் அவரது முன்னுரிமை. அந்த நோக்கில்தான் அவர் படங்களை உருவாக்க முடியும். அவரது படங்கள் பேசும் விடயங்கள் இன்று உலக அளவிலான மானுடப் பிரச்சினை. ஆகவேதான், உலகின் மிகச் சிறந்த இயக்குனர்களின் வரிசையில் வைத்து அவர் கொண்டாடப்படுகிறார். அவரது படங்களை நாம் இப்படித்தான் மதிப்பிட வேண்டும்.

ஐபிகேஎப் கொடுமைகள் குறித்தோ முள்ளிவாய்க்கால் பேரழிவு குறித்தோ தமிழகத்தமிழர்கள் அல்லது ஈழத்தமிழர்கள் உருப்படியாக எதுவும் படங்கள் உருவாக்கவில்லை. ஐபிகேஎப் பற்றிய இன் த நேம் ஆப் புத்தர படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் கேரளத்தவர். அதனது இயக்குனர் ராஜேஷ் தொடுபுழா கேரளத்தவர். முள்ளிவாய்க்கால் குறித்த படமெடுத்த இரண்டு இயக்குனர்களுமே இலங்கையின் சிங்கள மொழிக் கலைஞர்கள்தான். தமிழர்கள் உருவாக்கியிராத, உருவாக்க வேண்டிய படங்களை வேற்றுமொழிக் கலைஞர்கள்தான் உருவாக்கி இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, முள்ளிவாய்க்கால் மனிதப் பேரழிவை உலகின் கண்களுக்கு முன்வைத்த சேனல் நான்கு தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படங்களின் தகவல்களைத் திரட்ட தமது உயிரையும் ஆன்மாவையும் தந்தவர்கள் சிங்களக் கலைஞர்களும் சிங்கள ஊடகவியலாளர்களும்தான். ஏன் முள்ளிவாய்க்கால் பேரழிவை முழுமையாகக் கவிதையில் பதிவு செய்த கலைஞன் சிங்களக் கவிஞனான மஞ்சுள வெடிவர்த்தனதான். இந்த அடிப்படையிலிருந்துதான் பிரசன்ன விதானகேவின் படங்கள் அணுகப்பட வேண்டும்.

II

இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து நூற்று ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், தேயிலை உற்பத்தியில் பிரசித்தபெற்ற குறு மலைநகரம் பகுவந்த்தல. தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலுமான தொழிலாளர்கள் தமிழர்கள். படத்தில் வரும் சென்ட்ரல் அடகுக் கடையின் பெயர்ப்பலகையில் பார்த்துத் தெளிவாக கதை நடக்கும் இடம் பகுவந்த்தல என எவரும் புரிந்து கொள்ள முடியும். செல்வி தற்கொலை செய்து கொள்ளும் முன்பு வீட்டின் மாடிச் சன்னலில் நின்று மலைக்குன்றுகளைத் தழவிச் செல்லும் மேகத்தைப் பார்க்கிறபோது அருகாமைக் காட்சியிலும், படத்தில் அடகுக் கடை அமைந்திருக்கும் தெருவைக் காண்பிக்கும் பல காட்சிகளிலும் இது தெளிவுபடுத்தப்படுகிறது. திரைப்படம் என்பது வசனங்களால் நகர்த்தப்படுவது எனும் திரைகாண் பயிற்சி கொண்டவர்களால் இதனைப் புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமமாகவே இருக்கும். படத்தில் சிங்கள ராணுவத்தினனாக வரும் சரத்சிறியின் வேலைக்காரப் பெண் பகுவந்தலவின் மிக ஏழ்மையான மலையகத் தமிழர்களின் குடியிருப்பில் வாழும் பெண் என்பது செல்வியின் பாடலைக் கேட்டு சரத்சிறி அதிர்ச்சிற்று வேலைக்காரப் பெண்ணைத் தேடிச்செல்லும் காட்சியில் தெளிவாக இருக்கிறது. அதிகமான, வறிய தமிழ் ஏழைத்தோட்டத் தொழிலாளர் வாழும் இடம்தான் வித் யூ விதவுட் யூ படத்தின் கதைநிகழும் களம் என்பது இத்தகைய காட்சிகளில் உறுதிப்படுத்தப்படுகிறது.

கதைநிகழும் காலம் என்ன என்பது படத்தின் காட்சி அமைப்புகளில் இருந்து நாம் தெளிவுபடுத்திக் கொள்ள முடியுமா? முடியும். படத்தின் கதை பின்முள்ளிவாயக்கால் பேரழிவின் பின் நடக்கிறது. முள்ளிவாய்க்கால் பேரிவு 2009 ஆம் வரும் மே 18 ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டதுடன் முடிவுக்கு வருகிறது. 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்து ஏழு மாதங்களின் பின் செல்வி திருமணம் முடிந்து முதல் முதல் பார்க்கும் படமான வேட்டைக்காரன் வெளியாகிறது. வேட்டைக்காரன் படத்தை முள்ளிவாய்க்கால் பேரழிவுக் காலத்தின் முன்பாக நிச்சயமாக செல்வி பார்த்திருக்க முடியாது. படத்தில் மன்னிப்பாயா? என்றொரு பாடலை திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருக்கிறாள் செல்வி. அப்பாடல் இடம்பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா? 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகிறது. ஆகவே படம் நிகழும் காலம் பின்முள்ளிவாய்க்கால் காலம். 2009 ஆம் ஆண்டு இறுதிக்கும் 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் இடையிலான காலம் எனக் கொள்ள முடியும். காட்சி அமைப்புகளுக்கிடையிலும், இசைத் துணுக்குகள், பாடல்களுக்கு இடையிலும் படம் நிகழும் இடம் மற்றும் காலம் என்பன இவ்வாறு படத்தில் உறுதிப்படுத்தப்படுகிறது.

தாஸ்தயேவ்ஸ்க்கியின் கண்ணியமான ஆன்மா அல்லது ஜென்டில் கிரீச்சர் எனும் 1876 ஆம் ஆண்டுச் சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, அதனை இலங்கை உள்நாட்டு யுத்தச்சூழலுக்குப் பெயர்த்து உருவாக்கப்பட்ட திரைப்படம் வித் யூ விதவுட் யூ. இச்சிறுகதைக்கு பத்துக்கும் மேற்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் இருக்கின்றன. த ஜென்டில் ஸ்பிரிட் என்றும் த மீக் வொன் என்றும் வேறு இரு தலைப்புகளிலும் இக்கதை மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தாஸ்தயாவஸ்க்கியின் குற்றமும் தண்டனையும், த அன்டர்கிரவுன்ட் நோட்ஸ் போன்றவற்றைப் படித்திருப்பவர்களுக்கு அவரது படைப்புகளில் திரும்பத்திரும்பப் பேசப்படும் வட்டிக்கடைத் தொழில் சுரண்டலும் பொருளாசையும் ஒரு மனிதனின் ஆன்மாவை எவ்வளவு இழிந்தநிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதை உணர்ந்து கொள்ளமுடியும்.

த ஜென்டில் கிரீச்சர் சிறுகதையும் வட்டிக்கடை நடத்தும் 41 வயதான ஒரு மத்தியதரவயது மனிதனைப் பற்றிய கதைதான் என்றாலும், அவனது 16 வயது மனைவியின் தற்கொலையை அடிப்படையாக வைத்து இக்கதை சொல்லப்படுகிறது. தற்கொலை செய்துகொண்ட மனைவி சவப்பெட்டியினுள் மேசை மீது வைக்கப்பட்டிருக்க, தான் ஐந்து நிமிடம் முன்னால் வந்திருந்தால் இந்தத் தற்கொலை தவிர்க்கப்பட்டிருக்கும் என்ற வட்டிக்கடைக்காரனின் தன்னிலை விவரிப்பாகத் துவங்கும் கதை, இறுதியில் சுயஇரக்கமாகவும் சுயமோகமாகவும், தனிமைக்கான தனது சுயஇரங்கலாகவும் முடிகிறது. நீதிபதிகளும் அறநெறியாளர்களும் தன்னை எப்படியும் மதிப்பிட்டுக் கொள்ளுங்கள் நான் தனியன் என்று அவன் சொல்வதுடன் கதை முடிகிறது.

வாழ்க்கையின் அர்த்தம் குறித்த தேடலில் தத்துவவிசாரத்தைக் கலையாக்கிய கலைஞன் தாஸ்தயேவ்ஸ்க்கி. பௌதீகரீதியில் தேர்ந்து கொள்ளும் புறநிலையில் இருந்து தாஸ்தயாவஸ்க்கியின் பாத்திரங்களை கறுப்பு வெள்ளையாக நிறுத்தி நாம் புரிந்து கொள்ள முடியாது. மனித நடத்தையின் பின்னுள்ள தனித்த உளவியல் பிரபஞ்சங்களை அவரது கதைகூறுமறை பற்றிப் பிடிக்க முனைகிறது. மனிதர்கள் தொடர்பான இருதுருவப் பார்வையை மறுத்து சிக்கலான உளவியல் புதிர்களை அவரது கதைகள் சொற்களுக்குள் கொணர முயல்கின்றன. குற்றம், பாவம், கையறுநிலை, பாவமீட்சி என்பன அவரது அனைத்துப் படைப்புகளினதும் அடிநாதம்.

த ஜென்டில் கிரீச்சருக்கும் வித் யூ விதவுட் யூ படத்திற்கும் பாத்திரக் கட்டமைப்பு எனும் அளவில் நூறுசதம் பொருத்தமுள்ளது. ஆறு பாத்திரங்கள். முன்னால் ராணுவத்தினான மத்தியதரவயது வட்டிக்கடைக்காரன், அவனது வீட்டு வேலைக்காரப் பெண், அவனது முன்னாள் ராணுவ நண்பன், அவனை விடவும் ஒப்பீட்டளவில் பாதி வயதேயுள்ள அவனது மனைவி, த ஜென்டில் கிரீச்சரில் அவளது வயது 16, வித் யூ விதவுட் யூவில் நாயகனை நாற்பதுக்கு மேற்பட்டவனாகவும், பெண்ணை 25 வயதுக்கு உட்பட்டவளாகவுமே மதிப்பிடலாம். இரண்டு கதைகளிலும் பெண்ணின் பெற்றோரும் நாயகனின் பெற்றோரும் இறந்து விடுகிறார்கள். இரண்டு கதைகளிலும் கையறுநிலையில் இருக்கும் பெண்ணை மிக வயது முதிர்ந்த ஒரு கடைமுதலாளிக்கு, அப்பெண்ணின் பொருளாசை பிடித்த இரு உறவினப்பெண்கள் விற்க முயல்கிறார்கள். வறுமைநிலையில் இருக்கும் அப்பெண்ணின் கையறுநிலையை, போக்கிடமில்லாத நிலையை இரு கதைகளதும் வட்டிக்கடைக்காரர்கள் பெண்ணை வெற்றி கொள்ளப் பாவிக்கிறார்கள்.

இரண்டு கதைகளுக்கும் மிகப்பெரும் வித்தியாசமே ஒன்று உண்டு. தாஸ்தயேவ்ஸ்க்கியின் கதை ஒரு உளவியல் நாடகம், ஆண் பெண் காதல் உறவு குறித்த தத்துவ விசாரம். வித் யூ விதவுட் யூ திரைப்படம் தாஸ்தயேவ்ஸ்க்கியின் ஆண் பெண் காதலுறவு குறித்த நிரந்தரத் தத்துவ விசாரம் என்பதைத் தவிர்த்து, இலங்கையின் இனப் பிரச்சினை அரசியலை முன்வைத்து, ஆண்பெண் உளவியல் பிரச்சினையின் ஆதர அம்சமாக அரசியல் முரண்பாட்டை முன்வைத்திருக்கிறது. பெண் இங்கு சிறுபான்மையினத் தமிழர்களுக்கான உருவகமாகவும், ஆண் சிங்களப் பெரும்பான்மையினத்தவர்க்கான உருவகமாகவும் ஆகிறார்கள்.

வித் யூ விதவுட் யூ கதையை பின்முள்ளிவாய்க்கால் அரசியல் பின்னணியில் வைத்துப்புரிந்துகொள்ள முயலுவோம். முள்ளிவாய்க்கால் சம்பவம் முடிந்து மூன்று ஆண்டுகளின் பின் வித் யூ விதவுட் யூ 2012 ஆம் ஆண்டு வெளியாகிறது. இதற்கு ஓராண்டு முன்னால் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐநா அறிக்கையும் இலங்கையின் கொலைக்களங்கள் எனும் சேனல் நான்கு ஆவணப்படமும் வெளியாகிறது. இன்று வரையிலும் இலங்கையின் போர்க்குற்றங்களும் வல்லுறவுகளும் மனித உரிமை மீறல்களும் ஊடகவியலாளர்களின் படுகொலைகளும் கருத்துச் சுதந்திரப் பறிப்பும் குறித்து உலக அளவில் பத்துக்கும் மேற்பட்ட ஆவணப்படங்கள் வெளியாகிவிட்டன. 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுதில்லி இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட வித் யூ விதவுட் யூ திரைப்படம் 2014 ஆம் ஆண்டு மத்தியில்தான் தமிழகத் தமிழர்கள் பார்க்க முடிவதாக இருக்கிறது. இலங்கையில் அதுவும் சாத்தியமில்லாமல் இருக்கிறது.

2012 இக்கும் 2014 இக்கும் இடைப்பட்ட காலததில் இலங்கை அரசு மிக மூர்க்கமாகத் தனது ராணுவத்தின் மீதான எந்தவிதமான விசாரணைகளையும் நிராகரித்து வருகிறது. ராணுவம் பாலியல் வல்லுறவுகளை நிகழ்த்தவில்லை எனவும் தெரிவித்து வருகிறது. ஐநா சபை 2012 துவக்கத்தில் இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க ஐநா விசாரணைக்குழவை அமைத்துவிட்டது.

தமிழகத்தில் வாழ்பவர்களைப் பொறுத்து இந்த உணர்வுநிலைகளின் அடிப்படையில்தான் வித் யூ விதவுட் யூ திரைப்படத்தினை அணுகுகிறார்கள். அதுவும் இலங்கைப் படையினரின் வல்லுறவு குறித்துப் பேசும் படத்தை அந்த உணர்வு நிலையிலிருந்துதான் அணுகுகிறார்கள். படம் இனக்கொலை புற்றிப் பேசவில்லை எனும் கடுமையான விமர்சனம் அதன்மீது வைக்கப்படுகிறது. இனக்கொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அரசியல் விவாதங்களை படம் கொண்டிருக்கவில்லை எனும் விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன. இனக்கொலை குற்றச்சாட்டு என்பது சர்வதேச மட்டத்தில் ஒரு அரசியலாக உக்கிரம் கொண்ட காலம் என்பது 2014 ஆம் ஆண்டு டப்ளின் மக்கள் பேராயத்தின் பின்தான் உக்கிரம் பெற்றது. இந்தப் பின்னணிகளோடும் நாம் வித் யூ விதவுட் யூ படத்தினை அணுகுவோம்.

தாஸ்த்தயேவ்ஸ்கியின் கதைபோலவே பெண்பாத்திரத்தின் மரணத்தின் பின்பான ஆண் பாத்திரத்தின் நினைவுகூரலாகவே வித் யூ விதவுட் யூ படத்தின் கதையும் துவங்குகிறது. தேயிலைத் தோட்ட நகரான பகுவந்த்தலவில் வட்டிக்கடை வைத்திருக்கும் முன்னாள் ராணுவத்தினன் சரத்சிறி. அவனது வீட்டு வேலைக்காரப் பெண் தேயிலைத் தோட்டத் தமிழர்கள் குடியிருப்பில் வாழம் முதியவயதுத் தமிழ்ப்பெண். சரத்சிறியின் வட்டிக்கடைக்கு வரும் பெரும்பாலுமானவர்கள் வறிய நிலையிலுள்ள தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள்தான். அவர்களில் ஒரு இளம்பெண்தான் 25 வயதுக்கும் கீழாக மதிப்பிடத்தக்க செல்வி. சரத்சிறி தோற்றத்தில் நாற்பதுகளின் மத்தியில் இருப்பவராக மதிப்பிடலாம். தாஸ்தயேவஸ்க்கியின் நாவலில் முக்கியத்துவம் தரப்படும் குறிப்பிட்ட வயது போல இந்தப்படத்தில் எந்த இடத்திலும் வயது தொடர்பான குறிப்பீடுகள் இல்லை. பள்ளி மாணவர்களான செல்வியின் இரு சகோதரர்களும் சிங்கள ராணுவத்தினால் படுகொலை செய்படபட்டவர்கள். தனது பெற்றோரைப் போரில் தொலைத்தவள் அவள். அவர்கள் இறந்தவர்களா உயிருடன் இருக்கிறார்களா என்பது அவளுக்குத் தெரியாது. இப்போது அவளுக்கு ஆதரவு தருபவர்கள் சதா அவளை உடலளவிலும் பொருளியல் அளவிலும் சுரண்டும் பொருளாசை பிடித்த இரு தமிழ்பெண்கள்.

தன்னிடம் உள்ள அனைத்து ஆபரணங்கiயும் அடகுக்கடையில் வைத்து அந்தப் பணத்தை அந்தப் பெண்களுக்குத் தரும் செல்வி தனக்கென ஒரு வேலை தேடவும் செய்கிறாள். இந்த நிலையில் அந்த இரு பெணகளும் ஒரு வயதான பலசரக்குக் கடைக்காரர் ஒருவருக்கு மூன்றாவது தாரமாக செல்வியை விற்க முனைகிறார்கள். இவை அனைத்தையும் தனது வேலக்காரப்பெண் மூலம் தெரிந்து கொள்ளும் சரத்சிறி, அவளையே தூதுவிட்டு, செல்வியைத்தான் மணந்துகொளள் விரும்புவதாகச் சொல்கிறான். வறுமை, கையறுநிலை, போக்கிடம் இல்லாத நிலைமை என எல்லாவும் செல்வியை சரத்சிறியை மணக்கத் தூண்டுகிறது. பதிவுத்திருமணம் நடந்துமுடிகிறது.

விஸ்தாரமான ஒரு உடலுறவுக் காட்சியும் தொடர்ந்து வரும் உடலுறவுக் காட்சியும் காதலற்ற, சடவயமான திருமணத்தின் உடன்விளைவாக இருக்கின்றன. அவள் அவனோடு உரையாடவும் தன்னைக் குறித்து அவனுக்குச் சொல்லவும் அவனைக் குறித்தும் அவனது கனவுகள் குறித்தும் தெரிந்து கொள்ளவும் விரும்புகிறாள். அவன் அவளைக் குறித்தோ அவளது கனவுகள் குறித்தோ தெரிந்துகொள்ளவோ தன்னைக் குறித்து அவளிடம் பகிர்ந்துகொள்ளவோ விரும்புவதில்லை.

அவளது கனவுகள் அவனது கனவுகளுக்கு இடையூறு செய்யும் என அவன் தனக்குத்தானே சொல்லிக் கொள்ளவும் செய்கிறான். அவனது இலட்சியமெல்லாம் கறாராக வட்டித்தொழில் செய்து அதில் காசு மிச்சம் பிடித்து ஒரு சிறிய தேயிலைத் தோட்டம் வாங்குவதுதான். அதற்கு தனது மனைவியைத் தயார் செய்கிறான். வட்டிக்கடை நிர்வாகத்தைக் கற்றுத்தருகிறான். கடன்தொகைக்கு ஈடாக ஓரு தாலிக்குப் பதில் காதுத்தோட்டை ஒரு முதிய தமிழப்பெண்ணிடம் வாங்கும் செல்விக்கும் சரத்சிறிக்கும் பிணக்கு உருவாகிறது. சரத்சிறி மனைவியிடம் இனி நீ வட்டிக்கடைக்கு வரமுடியாது என கடுமையாகச் சொல்லிவிடுகிறான். தாஸ்தயேவ்ஸ்க்கியின் கதையில் இந்தத்தொழில் பிணக்குதான் அவர்களது உறவின் முறிவுக்கான காரணமாக ஆகிறது.

பணம் உன்னுடையதல்ல என் பணம் என வட்டிக்கடைக்காரன சொல்லிவிட மனைவி அவனைக் காலால் உதைத்து எழுகிறாள். அவனோடு ராணுவத்தின் உடன் பணிபுரிந்த ஒருவனிடம் சென்று இவன் ராணுவ வீரமரபு ஒன்றைக் காப்பாற்றாமல் ஓடிவந்துவிட்டான் என்பதனை அறிந்துகொண்டு இவனை ஏளனம் செய்கிறாள். முரண்பாடு உச்சமடைகிறபோது அவள் அவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சிக்கிறாள்.

விதானகேவின் படத்தில் வட்டிக்கடைத் தொழில் பிரச்சினை அவர்களது உறவு முறிவுக்கான காரணம் இல்லை. சரத்சிறியின் நண்பனால் யதேச்சையாகச் செல்வி அறிகிற, சரத்சிறி சிங்கள ராணுவத்தினன் என்கிற பிரச்சினையே முறிவுக்கான காரணமாகிறது. அவர்களுக்கிடையில் அதன் பின் சரீர உறவும் இல்லாது போகிறது. தாஸ்தயேவ்ஸ்க்கியின் கதையில் தொழில்முறை பிணக்கின் பின், அவள் கொல்ல முயற்சித்ததன் பின, அவன் அவளுக்கென தனியே கட்டில் வாங்கிப்போட்டு பிரிவை உறுதிபபடுத்துதுகிறான். அன்று முதலே பெண் நோய்வாய்ப்படுகிறாள். பிரசன்னவின் படத்தில் சரத்சிறி ராணுவத்தில் இருந்ததை அறிந்தவுடன் பிரிவுவருகிறது, செல்வி அவனைத் துப்பாக்கியினால் சுட்டுக் கொல்ல முயல்கிறாள். அதன் பின்பாகவே அவள் நோயில் வீழ்கிறாள்.

இரண்டு கதைகளிலும் மனமுறிவு ஏற்பட்ட பின் இரண்டு சம்பவங்கள் நடக்கின்றன. பெண், தூக்கத்திலிருக்கும் ஆணைக் கொல்வதற்கு முயற்சிப்பதை ஆண் அனுமதிக்கிறான். மனைவியினால் கொல்லப்படுவதை தன் குற்றவுணர்வினால் விருப்புடன் அவன் ஏற்கிறான். மனைவிக்கு இது கணவன் மீதான காதலுணர்வையும் தொடர்ந்து குற்றவுணர்வையும தருகிறது. பிறிதொரு நிகழ்வு கணவன் தனது கடந்தகாலம், தனது அவமானமான நடவடிக்கை குறித்து மனைவியிடம் மனம் திறந்து பேசுவதன் மூலம் பாவன்னிப்பைக் கோருகிறான். இதுவும் மனைவியிடம் கணவன் மீpதான காதலுணர்வையும் தான் கணவனிடம் கடுமையாக நடந்து கொண்டுவிட்டோம் எனும் குற்றவுணர்வையும் தூண்டுகிறது.

தாஸ்தயவேஸ்க்கியின் படைப்புகளில் கிறித்தவ அறவியலின் அடிப்படைகளான பாவம், பாவமன்னிப்பு, பாவமீட்சி என்பன திரும்பத் திரும்ப பேசும் கருத்துக்களாக இருக்கின்றன. பிரசன்னாவின் படத்தில் பெண் ஜெபமாலையை உருட்டி கர்த்தரை யாசிக்கும் கிறித்தவப் பெண். ஆண் தினசரியும் தனது தொழில் துவங்கும் முன்பாக புத்தபெருமானை வணங்குபவன். பெண்ணின் மனநிலையைத் தகவமைப்பதாக மன்னிப்பாயா, மன்னிப்பாயா என்ற விண்ணைத்தாண்டி வருவாயா படப்பாடலை பல சந்தர்ப்பங்களில் அவள் பாடுகிறாள். பிரசன்ன விதானகேவின் படத்தில் அதனது இரு பிரதான பாத்திரங்களின் கறாரான அரசியல் பின்னணியில் சோகவயமான மானுட நாடகம் என்பதிலிருந்து பிரச்சினை அரசியல் நாடகமாகவும் முக்கியத்துவப்பட்டு விடுகிறது.

ராணுவத்தில் சரத்சிறி இருந்தான் என்பது செல்விக்குத் தெரியவந்ததை அடுத்து அவர்களுக்கிடையில் நடக்கும் உரையாடலும், அவன் திருகோணமலையில் நிலை கொண்டிருந்த ராணுவக்கும்பலால் ஒரு 16 வயது இளம்பெண் வல்லுறவின் பின் கொல்லப்பட்ட பின், அவர்கள் சம்பவத்தின் போது தம்முடன் இருந்ததாக வழக்குமன்றத்தில் பொய்சாட்சி சொல்லி அவர்கள் விடுதலையாகத் தான் காரணமாக இருந்தேன் என சரத்சிறி அழுதபடி குற்றவுணர்வுடன் சொன்ன பின் செல்வி ஹிஸ்டீரியா நிலைக்குச் செல்வதும் மிகமிக அரசியல் முக்கியத்துவம் கொண்ட காட்சிகளாகும். “எவ்வளவு அப்பாவி இஞைர்களை நீங்கள் கொன்றிருப்பீர்கள்? எவ்வளவு தமிழ்ப் பெண்களை நீங்கள் வல்லுறவு புரிந்தீர்கள், இந்த அடகுக் கடை நடத்த எத்தனை தங்கத்தை தமிழ் மக்களிடமிருந்து களவாடினீர்கள்?” ஏன சரத்சிறியிடம் கோபத்துடன் கேட்கும் செல்வி, அவன் சிங்கள ராணுவத்தினன் என்று தெரிந்திருந்தால் அவனை மணந்திருக்க மாட்டேன் என்றும் சொல்கிறாள். அவள் கோபத்துடன் எழுப்புகிற இக்கேள்விகளை சரத்சிறி எதிர்கொள்ளவும் முடியாது. அற்கான பதில்களும் அவனிடம் இல்லை.

இதற்கான பதில்கள் இல்லாதபோது அந்த முரண் இருவருக்கிடையிலும் என்னாளும் நிரவமுடியாத முரணாகவே இருக்கும். பாலியல் வல்லுறவில் சரத்சிறி நேரடியாக ஈடுபடவில்லை எனும் ஆறுதல் உடலளவில் அவளை அவனிடம் நெருங்கச் செய்தாலும், அவனும் பகுதியாக இருந்து அவளது கூட்டு நினைவின் பகுதியாக இருக்கிற தனது சகதமிழ்ப் பெண்களின் மீதான வல்லுறவுகள், படுகொலைகள், சூறையாடல்களின் கொடுங்கனிவிலிருந்து மீண்டு அவள் மனத்தளவில் அவனை நெருங்குவதென்பது சாத்தியமேயில்லை. உடலளவில் அவனை நெருங்கும் ஒவ்வொரு நொடியும் அது அவளது உயிரைப் பிழிந்துகொண்டே இருக்கும். அவன் அவளிடம் பாவமன்னிப்புக் கோரியபிறகும், அவன் மீதான பரிவும் அன்பும் அவளிடம் மீளத்துளிர்த்த பின்னும் அவனை முழுமையாக அவள் நேசிக்க முடியாமைக்கு அதுவே காரணமாகிறது. இந்த நிரவவே முடியாத இரண்டக மனநிலையிலிருத்து விடுதலை பெறுவதாகவே அவளது தற்கொலை அமைகிறது.

சரத்சிறி, செல்வி தொடர்பான உரையாடல் காட்சியிலும், சரத்சிறியுடன் அவனது ராணுவசகா காமினி உரையாடும் காட்சியிலும் என மூன்றுறை டெரரிரிஸ்ட் எனும் சப்டைட்டில் தோன்றுகிறது. சிங்கள மொழியில அது கொட்டியா எனவே வருகிறது. அதன் நேரடி அர்த்தம் புலி என்பது. அதனைத் தமிழ் சப்டைட்டிலாக புலி என்றே பதிவுசெய்ய முடியும். படம் சிங்களத் தமிழ்மொழிப்படம் எனும் அளவில் அச்சொல் பயங்கரவாதி எனும் ஆதாரஅர்த்தத்தில் இல்லை. புலி எனும் சொல் விடுதலைப்புலிகள் தொடர்பாக இந்தியாவில், தமிழகத்தில் வந்த எந்தப் படத்திலுமே நேரடியாகப் பாவிக்கப்படுவதில்லை. தணிக்கையில் நிச்சயம் அது அகற்றப்படும். மேலும், உரையாடலில் ராணுவத்தினரான இருவரும் கொட்டியா எனும் சொல்லைப் பாவிக்கிறார்கள். ராணுவ இயந்திரத்தின் பகுதியான அவர்கள் வேறுவிதமாக அச்சொல்லைப் பாவித்திருக்க முடியாது. செல்வி சரத்சிறி சொல்லும் கொட்டியா எனும் சொல்லுக்குப் பதிலிறுக்கவே மீளவும் அச்சொல்லைப் பாவிக்கிறாள். செல்வியின் பாத்திரப்படைப்பு எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசியல் பிரக்ஞை கொண்ட பெண்ணாகச் சித்தரிக்கப்படவேயில்லை. நடிகர் விஜயின் பிம்பத்தை அருகாமையில் பார்த்ததை புளகாங்கிதத்துடன் கொண்டாடும், சதா தமிழ் சினிமா பாடல்களில் ஆழ்ந்துபோகும், எடுப்பார் கைப்பிள்ளையாக வாழநேர்கிற கையறுநிலையில் வாழம் பெண்ணே செல்வி. அரசியல் பிரக்ஞையுடன் இவர்களுக்கிடையிலான உரையாடலைக் கொண்டு செல்லும் வாய்ப்பேயில்லை.

வெளிநாடுகளுக்குச் செல்லும் படங்களின் சைப் டைட்டில்களில் குறிப்பான தன்மை அகற்றபட்டு தொடர்பாடலின் பொருட்டு ஆங்கில பொதுவழக்குகள் பாவிக்கப்படுவதே வழமை. டெரரிஸ்ட் என ஆங்கில சப்டைட்டில் வருவதை இவ்வாறு அல்லாமல் வேறு வகைகளில் விளக்குவது கடினம். படத்தின் சப் டைட்டிலில் இன்னொரு பிரச்சினையும் இருந்ததை படத்தைக் கூர்ந்து பார்த்தவர்கள் அவதானித்திருக்க முடியும். செல்வியைப் பெண் பார்க்க வந்த பலசரக்குக் கடைக்காரனிடம் வீட்டுக்கார எஜமானி செல்வி யாழ்ப்பாணப் பெண் எனவே தமிழில் சொல்கிறாள். சப் டைட்டிலில் யாழப்பாண மேல் சாதிப் பெண் என வருகிறது. யாழ்ப்பாண மேல்சாதிய மனநிலையை வியாக்யானப்படுத்தியதாக அந்த சப்டைட்டில் இடம்பெறுகிறது. சப் டைட்டில்தரும் அர்த்தத்தை வைத்துக் கொண்டு ஒரு மூலமொழிப் படத்தை அணுகுவது பலசமயங்களில் பிழைபட விளங்கிக் கொள்வதாகவே முடியும் வாய்ப்புக்கள் அதிகமுண்டு.

படத்தினுள் பார்வையாளன் தீர்த்துக் கொள்ள வேண்டிய இன்னொரு அடிப்படைச் சிக்கல், தனது படையினர் மீது சுமத்தப்படும் எந்தவிதமான போர்க்குற்றச்சாட்டுக்களையும், பாலியல் வல்லுறவுக் குற்றங்களையும் துப்புரவாக இலங்கை அரசாங்கம் மறுத்துவருகிறது. இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் கூட பாலியல் வல்லுறவு தொடர்பான எந்தக் குறிப்புகளும் இடம்பெறவில்லை. இடம்பெறும் ஒரேயொரு குறிப்பும் சேனல் நான்கின் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம் சுட்டும் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவதாகவே உள்ளது. இச்சூழலில் பிரசன்ன விதானகேவின் படம் சொல்வது போல பாலியல் வல்லுறவு புரிந்த படையினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடப்பது என்பது சாத்தியமா? இப் பிரச்சினையை நாம் முள்ளிவாய்க்காலின் முன்பின் எனப் பிரித்தே அணுகவேண்டியிருக்கிறது. முள்ளிவாய்க்காலின் பின்னான பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றச்சாட்டு சர்வதேசிய விசாரணையைக் கோருகிறது. முள்ளிவாய்க்காலின் முன் படையினரின் இத்தகைய செயல்பாடுகளைத் தனித்த நிகழ்வுகளாக ஏற்று இலங்கை அரசு சிறிய அளவில் கண்துடைப்பு விசாரணைகளை நிகழ்த்தியே வந்திருக்கிறது. சரத்சிறி தொடர்பான விசாரணை அத்தகையதொன்றாக இருக்கும் சாத்தியம் இருக்கிறது.

சரத்சிறி படையிலிருந்து விலகி நிற்கிறானேயொழிய அவன் படையினரிடம் முற்றிலும் உறவற்றவனாக இல்லை. செல்வியின் பெற்Nறாரைத் தனக்கு படைத்தரப்பினுள் இருக்கும் உறவை வைத்து கண்டுபிடிக்க முடியும் என செல்வியிடம் அவன் சொல்கிறான். திரிகோணமலையில் நிலை கொண்டிருந்த ராணுவம் என்றுதான் அவன் சொல்கிறான். படத்தின் கதை நிகழ்கிற 2009 இறுதி 2010 மத்திய காலம் எனப் பார்க்கிறபோது முள்ளிவாய்க்கால் மோதலின் முன்பாகவே அவன் தொடர்புபட்ட பாலியல் வல்லுறவு நிகழ்ந்திருக்கிற சாத்தியங்கள் உண்டு. முள்ளிவாய்க்கால் பேரழிவின் முன்பாகவே அத்தகைய சம்பவங்கள் தமிழ் பிரதேசங்களில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன.

III

ஓரு திரைப்படத்தில் தான் என்ன சொல்ல விரும்பினார் என்பதை திரைப்பட இயக்குனர் தவிர எவரும் அறியமாட்டார்கள் எனச் சொன்னார் இந்தியத்திரைப்பட இயக்குனரான காலஞ்சென்ற சத்யஜித்ரே. புடைப்பாளி இறந்துவிட்டான் என்றும், படைப்பும் படைப்பாளியும் முற்றிலும் வேறு வேறு இரு வகைமைகள் என்றும், வாசகனே அல்லது பார்வையாளனே படைப்பை உருவாக்குகிறான் என்றும் வேறு வேறு சிந்தனைப் பள்ளிகள் இருந்தாலும், படைப்பு குறித்து படைப்பாளி முன்வைக்கும் கருத்துக்களை நாம் படைப்புக்கு வெளியில் நின்றே அணுகவேண்டும்.

வித் யூ விதவுட் யூ படத்தின் இயக்குனர் பிரசன்ன விதானகே இந்திய ஆங்கிலப் பத்திரிக்கையான இந்துப் பத்திரிக்கைக்கு மின்னஞ்சலில் அளித்த பதிலில் போருக்குப் பின்னான இலங்கையின் உருவகமே இரு பாத்திரங்கள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இந்த நிருபர் அடுத்து, ராணுவ அதிகாரி மற்றும் தமிழ்ப்பெண் இருவரில் உங்களது அனுதாபம் யார்மீது அதிகமாக இருக்கிறது எனும் கேள்வியைக் கேட்கிறார். இது மிகமோசமான ஒரு அரசியல் கேள்வி. பிரசன்ன விதானகே “ஒரு படைப்பாளியாக எனது இரு பாத்திரப்படைப்புகளினதும் ஆன்மாவை நான் முன்வைத்திருக்கிறேன். குறிப்பிட்ட இரண்டு பாத்திரங்களில் ஏதாவதொரு பாத்திரத்தின் மீதும் பார்வையாளர்கள் அனுதாபம் செலுத்த வேண்டும் என நான் விரும்பவில்லை. இந்த இரு பாத்திரங்களையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவே விரும்புகிறேன்” என்கிறார்.

இந்த அனுதாபம் எனும் சொல்லாடலை பிரசன்ன விதானகே உருவாக்கவில்லை. ஓரு எதிர்விணையாகவே அவர் இந்து நிருபரின் கேள்விக்குப் பதிலாக அனுதாபம், புரிந்துகொள்ளல் எனும் கருத்தாக்கங்களைப் பாவிக்கிறார். ஓரு வகையில் இது இந்து நிருபரின் பொறி. ஓரு படைப்பாளி நிஜத்தில் தீமையின் உருவங்களான பாத்திரங்களைக் கூட மனிதாயப்படுத்தவே செய்வார். டவுன்பால் படத்தில் இட்லர் மனித உணர்வுகள் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறார். இனப்பிரச்சினை பற்றிய அ.சிவானந்தனின் 'வென் மெமரி டைஸ்' நாவலில் சிங்களப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தமிழர் 83 கலவரத்தின் பின் தனது மனைவியை ஒரு சிங்களப்பெண் எனும் வெறுப்புடனும் சந்தேகத்துடனுமே நடத்துகிறார். அப்போது அப்பெண் வைத்துக் கொள்ளும் குங்குமம் அவருக்குப் போலித்தனமாகப் படுகிறது. அதே குங்குமம் அவளைத் தமிழ்ப்பெண்ணாக அடையாளப்படுத்தி சிங்கள இனவெறியர்களால் அவள் கொல்லப்படவும் காரணமாகிறது. அரசியல் உற்பவங்களின் போது மனித உறவுகள் எவ்வாறு மாற்றமடைகிறது என்பதைச் சித்தரிக்க வேண்டிய கடப்பாடு ஒரு படைப்பாளிக்கு என்றும் உண்டு. தனது பாத்திரப் படைப்புகளின் ஆன்மாவை உள்ளபடி சொல்ல வேண்டிய பொறுப்பும் ஒரு படைப்பாளிக்கு இருக்கிறது.

திரைப்பட வரலாறு நெடுகிலும் மூன்றுவிதமான கலைப்பார்வை கொண்ட படைப்பாளிகள் இருந்துவருகிறார்கள். சார்புநிலைகளைத் தெளிவாக முன்வைத்து படமெடுக்கும் படைப்பாளிகள். கோதார்த், கென்லோச், பொன்டே கார்வோ போன்றவர்களை இப்படிக் குறிப்பிடலாம். மூன்றாம் உலகின் தேசிய விடுதலைப் போராட்ட மரபாளர்களான கிதராஸ் அலியா, செம்பேன் உஸ்மான் போனறோரை இப்படிக் குறிப்பிடலாம். பிறிதொரு வகையினர் அரசியல் சார்புநிலைகளைக் கறாராக எடுக்காமல் ஒடுக்கப்பட்ட மனிதரின்பால் பரிவுடன் நின்று பேசுபவர்கள். சத்யஜித்ரே, குரசோவா போன்றோர் இத்தகைய படைப்பாளிகள். இலங்கையின் லெஸ்ட்டர் ஜேம்ஸ் பிரீஸ், தர்மசிறி பன்டார நாயகே, பிரசன்ன விதானகே போன்றோர் இந்த வகையினர். மூன்றாம் வகையினர் முழுமையாக அரசு சார்புப் படங்களையும் வணிகப்படங்களையும் எடுப்பவர்கள். இலங்கையின் இன்றைய ராணுவமயச் சூழலில், உயிராபத்து மிகுந்த தணிக்கைச் சூழலில் கென்லோச் போலவோ, பொன்டே கார்வோ போலவே ஒரு திரைப்படக் கலைஞன் எழுந்து வருவதற்கான சூழல் முற்றிலும் இல்லை.

தாஸ்தயேவ்ஸ்க்கியின் த ஜென்டில் கிரீச்சர் சிறுகதையை வாசிப்பவன் இரண்டு பாத்திரப் படைப்புகளையும் புரிந்து கொண்டாலும், அவனது மனம் தற்கொலை செய்து கொண்டு மரணமுற்ற அந்தப் பதினாறு வயதுப் பெண்ணிடமே சென்று நிற்கும். பிரசன்ன விதானகேவின் வித் யூ விதவுட் யூ படத்தின் இரண்டு பாத்திரங்களையும் ஒரு பார்வையாளன் புரிந்து கொண்டாலும் அவனது அறுதித் தேர்வு பாதிக்கப்பட்ட தற்கொலைசெய்து கொண்ட தமிழ்ப் பெண்ணுடன்தான் சென்று நிற்கும்.

பிரசன்ன விதானகேவின் வித் யூ விதவுட் யூ படத்தின் முதல் காட்சியிலும் இறுதியிலும் செல்வி “நான் நேசித்தால் முழுமையாக நேசிப்பேன். உன்னை என்னால் முழுமையாக நேசிக்க முடியவில்லை. நீ விரும்புகிற மனைவியாக நான் இருக்க முடியாது” என்கிறாள். சிறுபான்மையினத்தை கண்ணியமான பெண்ணாக உருவகித்து அவளது கையறுநிலையை தன் வலைக்குள் கொணர்ந்து அவளைச் சுரண்டிவாழம் நிராகரித்தால் காலில் வீழும் பெரும்பான்மையினமாக ஆணை உருவகித்து கதை சொல்லியிருக்கிறார் விதானகே. தாஸ்தயேவ்ஸ்க்கியின் கதைக்கருவும் இதுபற்றியதுதான். இங்கு ஜென்டில் கிரீச்சர் என்பவர் ஆணல்ல, பெண். வித் யூ விதவுட் யூ படத்தின் முதல் மற்றும் இறுதிக் காட்சியில் சரத்சிறி சொல்கிறான் : “என்னை நீ தேர்வு செய்யாமல், எனக்கு நீ முதுகு காட்டிச் சென்றிருந்தால், பிறிதொருவரைத் தேர்ந்திருந்தால் நீ சந்தோஷமாக இருந்திருக்கலாம்”. அரசியல் மொழியில் அந்தத் தமிழ்ப்பெண் தேர்வு செய்து செய்திருக்கக் கூடிய பிறிதொருவர் அல்லது பிறிதொன்று யார் அல்லது எது?

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </