இதழ்: 10, நாள்: 15- புரட்டாசி -2013 (September)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 7 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
திருத்தப்பட வேண்டிய பதிவுகள் - தியடோர் பாஸ்கரன்

--------------------------------

எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் விருட்சம் - யமுனா ராஜேந்திரன்

--------------------------------
தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது வழங்கும் விழா - 2013 - II - தினேஷ்
--------------------------------
மாசுற்ற தாமரைக் குளத்தின் வாசனை - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
தமிழ் ஸ்டூடியோவின் 57ஆவது குறும்பட வட்டம் - தினேஷ்
--------------------------------
முதல் சிறகடிப்பு - கோவா சர்வதேசத் திரைப்படவிழா – 2004 - கார்த்தி
--------------------------------
மீதி வெள்ளித்திரையில்... - தியடோர் பாஸ்கரன் - அருண் மோ.
--------------------------------
மார்த்தாண்ட வர்மா (1933) - மௌனப்படம் - அருண் மோ.
--------------------------------
   

   


தமிழ் ஸ்டூடியோவின் 57ஆவது குறும்பட வட்டம்

- தினேஷ்


ஒரு குறும்படத்தைப் போற்றவும், அதனின் நிறைகளை மட்டும் பொறுக்கியெடுத்து மூட்டையாகக் கட்டிக்கொண்டு, எடையிழந்த அவ்வெற்று மூட்டையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடவும் நிறைய கூட்டங்கள் காத்துக்கொண்டிருந்தாலும், அப்படத்தை ஒரு நேர்மையானயொதொரு திறனாய்விற்கு உட்படுத்துவது இந்த குறும்பட வட்டமாகத்தான் இருக்கும். ஒரு திறமையான கலைஞன் உருவாகவேண்டுமானால் அவனது குறைகளை சுட்டிக்காட்டுங்கள் என்றோர் கூற்று வழக்கில் உள்ளது. இதனை நடைமுறைப்படுத்தி வரும் தமிழ்ஸ்டூடியோவின் குறும்பட வட்டம், இம்முறை 57 ஆவது மாதத்தையும் பெட்டகக்கைகளுக்குள் இழுத்துக்கொண்டது. இவ்வட்டத்தில் சினிமா ரசனைக்காக ஒரு குறும்படமும், விமர்சனத்திற்காக ஒரு குறும்படமும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்படியாக சினிமா ரசனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட குறும்படம் Ambrose Bierce ன் சிறுகதையை Robert Enrico இயக்கிய “An occurrence at Owl creek Bridge”, முதலில் இப்படம் திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்ட பின்பு அடுத்ததாக அன்பு ராஜசேகர் இயக்கிய ”தாகபூமி” குறும்படம் திரையிடப்பட்டது.

குறும்பட வட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே விருந்தினர்கள் எவரும் பங்கேற்காமல் நடைபெற்றுவருகின்றது. காரணம் வருகின்ற மக்கள், படத்தை பார்த்து விவாதித்து மகிழ்வதை விடுத்து, விருந்தினர்களை பொறுத்து பங்கேற்க பழகிக்கொண்டனர். இதன் காரணத்தினால் அரங்கமானது போலி சினிமா விரும்பிகளை தவிர்த்து உண்மையான மாற்று சினிமா ஆர்வலர்களாலும், தன் கருத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆர்வம் உடையவர்களாலும், வணிக சினிமாவைக் குறைத்து நல்ல சினிமாவை வளர்த்தெடுக்கின்ற விருப்பமுடையவர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்களே விருந்தினர்களாகக் கொண்ட அலங்காரம் இருக்கின்ற பொழுது, நாங்கள் வழக்கமாக அறையின் முன்னால் கட்டும் பேனர் கூட இன்று கட்டவில்லை. அத்தனை எளிமையாக இந்த வட்டம் சிறப்பாக அரங்கேறியது.

மேலும், அரங்கிற்கு திரு. அறந்தை மணியன் அவர்கள் வருகை தந்திருந்தார். இவ்வருகை வந்திருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியை தரவே, அறந்தை மணியனையே தமிழ்ஸ்டூடியோவின் 57 ஆவது குறும்பட வட்டத்தின் சிறப்பு விருந்தினர் ஆக்கிக்கொண்டோம். விருந்தினர்களைப் பார்த்து வருகின்ற நபர்களுக்கும், வந்து விட்ட நண்பர்களுக்கு எதிர்பாரா விதமாக விருந்தினர்கள் கிடைப்பதற்கும் மாறுதல்கள் உண்டுதானே.

திரு. அறந்தை மணியன் அவர்கள் பூனே பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்தவர். நிறைய படங்களில் வேலை பார்த்த பின்பு, இப்பொழுது ஞானராஜசேகர் இயக்கிக்கொண்டிருக்கின்ற “ராமானுஜர்” வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருக்கின்றார். சினிமா சம்பந்தமான நிறைய புத்தகங்களை எழுதியிருக்கின்றார். அவரது புத்தகங்களை நீங்கள் எந்தப் புத்தக விற்பனையரங்குகளிலும் பார்க்கலாம். அவர் இன்று வந்திருப்பது எதிர்பாரா, இன்ப அதிர்ச்சிதான். அவர் இன்று திரையிட்ட இரு படங்களையும் பற்றி நண்பர்களோடு பல விஷயங்களை பகிர்ந்துகொள்வார், என்று தமிழ்ஸ்டூடியோ அருண், அறிமுகப்படுத்திய பின்பு முதலாவதாக பிரஞ்சு படம் “An occurrence at Owl creek Bridge” திரையிடப்பட்டது.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படம். பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளது. மரணக்கயிறின் முன் நிற்கின்ற ஒருவனது மனநிலையை அழகாகவும், ரணமாகவும் எடுத்துரைக்கும் படம். மனிதர்கள் எப்பொழுதுமே சிந்தித்துக்கொண்டேயிருப்பவர்கள். மனிதப்பிறவிகளின் சிந்தனையோட்டத்தை ’அசுரகணம்’ நாவலில் க.நா.சு விரிவாக விவரித்திருப்பார்.

1962ல் எடுக்கப்பட்ட படம்தான் “An occurrence at Owl creek Bridge” . கருப்பு வெள்ளையில்தான் எடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அக்காலத்திலேயே பல பரிட்ஷார்த்த முயற்சிகளைக் கையாண்டிருக்கும் இப்படத்தைப் பார்க்காத அன்பர்களும் பார்த்துவிடுவது சிறப்பு. பார்த்திருக்கின்ற நண்பர்களும் இன்னொரு முறை பார்க்கலாம் தப்பில்லை.

படம் முடிந்த பின்பு, தமிழ் ஸ்டூடியோ அருண் தன் கருத்தினை பார்வையாளர்கள் முன்னிலையில் பகிர்ந்துகொண்டார்.

தமிழ்ஸ்டூடியோ அருண்:

நான் இப்படத்தை முன்னமே உயிர்மையில் பேசாமொழியாக வெளிவருகின்ற எனது தொடரில் எழுதியிருக்கின்றேன். அப்பொழுதும் நாளிதழ்களில் தூக்கு தண்டனை சம்பந்தமான செய்திகள் வெளிவந்தன. இன்றும், இங்கு திரையிடுகின்றோம், இன்றைய நாளிதழ்களிலும் தூக்கு தண்டனை சம்பந்தமான செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், இது எல்லாமே எதேச்சையாக நடப்பதுதான், எதுவுமே திட்டமிடப்பட்டதில்லை.

நமக்கு நடக்கின்ற சில பிரச்சனைகளும் இப்படித்தான். அது அந்த நொடியில்தான் பெரிய கசப்பான சம்பவமாக இருக்கும். ”இதற்கு மேல் எப்படி வாழப்போகின்றோம்?”, என்றமாதிரியான சூழ்நிலையை தந்துவிடும்.ஆனால், சில நாட்கள் கடந்து பார்த்தோமேயானால், அதே நிகழ்ச்சி நண்பர்களுடன் மகிழ்ச்சிக்காக பகிர்ந்துகொள்ளப்படுகின்ற சம்பவமாக மாற்றப்பட்டிருக்கும். இது எல்லாமே அனுபவம்தான். இந்த மாதிரியான அனுபவங்களைக் கொண்ட ஆட்களையே பிறரும் அதிகமாக விரும்புவார்கள். இது போன்ற அனுபவங்கள்தான் “An occurrence at Owl creek Bridge” போன்ற சிறந்த படைப்புகளை வெளிக்கொண்டுவர ஆயத்தமாக இருக்கும்.

இப்படம் யாருடைய பார்வையிலிருந்து சொல்லப்பட்டிருக்கின்றது?, என்பதைச் சொன்னால் ஆச்சரியமாகயிருக்கும், காரணம் யாதெனில்?, இப்படம் பார்க்கின்ற ரசிகர்களின் பார்வைக்கோணத்திலிருந்து சொல்லப்பட்டுள்ள படம். முழுக்க முழுக்க ரசிகர்களைப் படத்தினுள் இழுக்கின்ற உத்தியை இயக்குனர் கையாண்டிருக்கின்றார்.

முதல் காட்சியிலேயே தூக்கு மேடையுள்ள அந்தப் பாலத்தைக் காண்பித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் சுற்று வட்டாரத்தை பேன்ஷாட்டின் உதவியோடு, பதிவுசெய்த பின்பு தூக்குப் போட தயாரகயிருக்கின்ற காட்சியினையும், காவலர்களையும் காண்பிக்கின்றார்கள். இதன்மூலமாக பார்வையாளர்களை பொறுமையாகப் படத்தினுள் அழைத்துச்செல்கின்றனர். மேலும் தப்பித்து ஓடுபவனைக் காவலர்கள் துரத்துகின்ற பொழுது முன்னால் ஓடுபவன் விழுந்துவிடுவான். ஆனால், கேமிரா அந்த இடத்திலேயே நின்றுவிடாமல் சில அடிதூரம் தள்ளிச் சென்று நிற்கும். நீங்கள் ஒருவரை துரத்திச்செல்கின்றீர்கள் என்றால், அவன் நின்றவுடனேயே நீங்களும் அப்பொழுதே நின்றுவிடமாட்டீர்கள். சில அடிகள் முன்நகர்வீர்கள் அல்லவா.? அதைத்தான் இப்படம் கடைப்படித்திருக்கின்றது. அதுதான் பார்வையாளர் கோணம் என்கின்றோம். ஒரு படத்தை சாதாரணமாக தனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையிலிருந்து பார்ப்பதற்கும், படத்தில் தப்பித்து ஓடுகின்ற குற்றவாளியுடனேயே பயணித்து படம் பார்ப்பதற்கும் உள்ள அனுபவம் அலாதியானது. இதன் ஒவ்வொரு காட்சியை வைத்தும் படத்தை விளக்கலாம், உதாரணமாக, காவலர் ஒருவர் தன் இருகைகளையும் கோர்த்து பிடித்தார்போல வைத்திருப்பார். அது அதிகார வர்க்கத்தின் ஆளுமையை பிரதிபலிப்பதற்கான காட்சி. அக்காவலரிடம் இன்னொருவரை தூக்கில் ஏற்றுகின்றோமே என்கிற மாதிரியான அனுதாபங்கள் எல்லாம் இருக்காது. தனக்கு கொடுக்கப்பட்ட ஆணையை நான் நிறைவேற்றுகின்றேன் என்பது மாதிரியான தோற்றத்தில்தான் அவர் அங்கு நின்றிருப்பார். இப்படி படம் முழுவதையும் சிறு சிறு காட்சிகளாக்கி கதை சொல்லலாம். ஆனால் அப்படி படம் யாருக்கும் புரியாதபடியாக இல்லை. அனைவருக்கும் புரியும்படியாக காட்சிகளின் மூலமாகவே கதைசொல்லப்பட்டிருக்கின்றது.

இப்படத்திற்கான இசையும் சிறப்பு வாய்ந்த ஒன்றுதான். தூக்கில் மாட்டப்பட்டிருப்பவன் தன் காதலியை நினைத்துப்பார்ப்பான். காதலியை கட்டியணைக்கின்ற நேரத்திலெல்லாம் பின்னணியிலான இசையானது கடிகார ஓசையுடன் ஒத்திருக்கும். அந்த கடிகார ஓசையானது அவனது இதயத்துடிப்பை நிர்ணயிக்கின்றது. அதேபோல அவன் தண்ணீரில் நீந்திச் செல்லும் சமயத்தில் இசையானது வேறுவிதமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். இம்மாதிரியான இசையை நுணுக்கமாகப் பயன்படுத்திய ஒருபடத்தை தமிழ்சினிமாவினால் சுட்டிக்காட்ட இயலாது.

நீங்களும் இப்படத்தை பார்த்தோம், சென்றோம் என்றல்லாமல், உங்களுக்குள்ளேயே நிறைய கேள்விகள் கேட்டுக்கொள்ளலாம்.. இப்படத்தையும், நீங்கள் வாழ்வின் உன்னதம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற ஒரு சில படங்களையும் ஒப்பிட்டு பார்க்கலாம். இதுதான் இத்தகைய குறும்பட வட்டத்தின் நோக்கம்.

அறந்தை மணியன்:

இப்படத்தில் நீங்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம். கால நேரத்தை பயன்படுத்துதல். நான் பார்த்து ரசித்தக் காட்சியை இந்த கால மேலாண்மையை விளக்குவதற்காக பயன்படுத்திக்கொள்கின்றேன்.

ஒரு பெண் தன் கணவன் வந்துவிட்டாரா? என்று இரயில் நிலையம் நோக்கி பார்க்க வருவாள். நின்றுகொண்டிருக்கின்ற ஒவ்வொரு இரயில் பெட்டிகளையும் அலசுவாள். பின்னர் கணவன் வராத காரணத்தினால் பின்வாங்கி சென்றுவிடுவாள். இதை இயக்குனர் எவ்வாறு காட்சிப்படுத்தியிருப்பாரென்றால்., தொடர்வண்டி ஒன்று வரும், ஆனால் அதில் நான்கு பெட்டிகள் மட்டுமே இருக்கும். கணவன் வராத சோகத்தில் இவள் திரும்பி நடைபாதையில் நடக்கின்ற பொழுது, நின்றிருந்த தொடர்வண்டியானதும் நகரத்துவங்கும், இவளின் துக்கமான மனநிலையை, எதிர்பார்ப்பை, ஏமாற்றத்தை பிரதிபலிக்கும் படியாக தொடர்வண்டி வேகமாகச் செல்லும், அது தண்டவாளத்தில் செல்லும் சப்தம், மன அதிர்வை மையப்படுத்தியதாக இருக்கும், அப்பொழுது நீங்கள் கவனித்தீர்களேயானால், அந்த தொடர்வண்டியில் மொத்தம் 4 பெட்டிகளாக இருந்தது, இவள் திரும்பி நடக்கின்ற பொழுது 40 பெட்டிகளுக்கும் அதிகமாக கடந்து செல்லும், இக்காட்சியானது தர்க்க ரீதியாக தவறாக யிருந்தாலும், அவளது மனநிலையை வெளிபடுத்த இத்தகைய காட்சிகளை அழகாக பயன்படுத்தலாம்.

இதே உக்தியைத்தான் “An occurrence at Owl creek Bridge”படமும் பயன்படுத்தியிருக்கின்றது. ஆனால், மாற்று வழியில். அதாவது காவலர் தூக்குப்போடும் முன்பு பத்து நிமிட கால அவகாசம் தரப்படுகின்ற வேலையில்தான், அவனுக்கு இத்தகைய கற்பனைகள் வருகின்றன. ஆனால், படமோ 28 நிமிட படமாகயிருக்கின்ற வேளையில் இந்த பத்து நிமிடம் எப்படிசாத்தியமெனில்? கால மேலாண்மை/ விரிவாக்கம் மூலம் சாத்தியம். உண்மையான நேர அளவு எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் சினிமாவிற்கான நேர அளவு ஒன்று உள்ளது. இப்படியான அதிகாரம் சினிமாக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
*******

“An occurrence at Owl creek Bridge”,பற்றிய இவ்விருவரது உரைக்கு பின்பு “தாக பூமி”குறும்படம் திரையிடப்பட்டது. காதலையும், காதல் சார்ந்த சூழலையும், நண்பர்களையும், நண்பர்களுக்கான பிரச்சனைகளையும் பிரதானமாக்காமல், மாறிவருகின்ற அறிவியல் தொழில்நுட்பத்தில், மழையும் பொய்த்துவிட, விளை நிலங்களெல்லாம் கட்டிட வசதிக்காக விருத்திக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இச்சூழலில் விவசாயிகள் நிலை என்னாவாகயிருக்கின்றது, என்ற பதிவினை உறுதிசெய்திருக்கின்றது திரு.அன்பு ராஜசேகரின், “தாகபூமி”குறும்படம். இப்படம் குறித்தும் திரு. அறந்தை மணியன் விமர்சனத்தை முன்வைத்தார்., இவரையடுத்து பார்வையாளர்கள் ஒவ்வொருவராய் வந்து தன் கருத்துக்களையும், அன்பு ராஜசேகரின் அடுத்த படத்திற்கான ஆக்கப்பணிகளுக்காக இலவசமாக கொடுத்துவிட்டுச் சென்றனர்.

திரு. அறந்தை மணியன்;
விவசாயிகளின் பிரச்சனைகளை மையப்படுத்தியிருப்பதற்கு வாழ்த்துக்கள். இப்படம் தஞ்சாவூர் பகுதியைக் களமாகக் கொண்டுள்ளது. இப்படத்தைப் பார்க்கின்ற சமயத்தில் என் சிறு வயது ஞாபகம் தான் வருகின்றது.

நான் சிறுவயதாக தஞ்சாவூரில் சுற்றித்திரிகின்ற காலத்தில் முப்போகம் விளைகின்ற நிலமாக காட்சி தந்ததுதான் இப்பூமி. ஆனால் அதில் இன்று ஒருபோகம் விளைவதில் கூட பிரயோசனமில்லாமல் இருக்கின்றது. இப்பதிவை பதிவுசெய்திருக்கின்றார் இயக்குனர்.

எனினும் இப்படம் ஆவணப்படத்திற்குண்டான தொனியிலும் உள்ளது, அதனை கொஞ்சம் மாற்றி குறும்படத்திற்குண்டான இலக்கணங்களை கொஞ்சம் பின்பற்றியிருக்கலாம். பின்னர் படத்திற்கு ஆங்கில சப்டைட்டில் கொடுப்பதிலும் பல்வேறு இடங்களில் பிழையாக இருக்கின்றது. நீங்கள் ஒரு சர்வதேச விழாவிற்கெல்லாம் இம்மாதிரியான படங்களை அனுப்புகிறீர்கள் என்றால், அவர்கள் ஆங்கில சப்டைட்டிலைத்தான் முக்கியமாக கவனிப்பார்கள், இவற்றில் பிழையென்றால் வார்த்தையே மாறி , கதையும் மாறிப்போக வழியுள்ளது.

முதல் காட்சியில் தண்டோரா வாசிப்பவர், கிராமத்திற்கேயுரிய தோற்றத்தில் இல்லை, அதேபோல கிராமமும் துடைப்பத்தால் பெருக்கி வைத்திருப்பது போல சுத்தமாக உள்ளது. நீங்கள் கிராமங்களில் சென்று பார்த்தீர்களேயானால் அப்படியெல்லாம் சுத்தமானதாக கிராமங்கள் காட்சியளிப்பதில்லை. கிராமத்தை கிராமமாகவே காட்டியிருக்கலாம்.

இதனையெல்லாம் சரிசெய்திருந்தால் இன்னும் கொஞ்சம் பிரமாதமாக இப்படம் வந்திருக்க அநேக வாய்ப்புகள் உண்டு.

இதுவொரு பதிவு தானே தவிர, இதில் ஏன் விவசாயி தற்கொலை செய்துகொள்கின்றான்? ஏன் அவனுக்கு வேறு தீர்வு கிடையாதா? என்றெல்லாம் நீங்கள் இயக்குனரைப் பார்த்து கேள்வி கேட்பதில் நியாயமில்லை. இந்தக்குறும்படம் என்பது தஞ்சாவூரில் வாழ்கின்ற மக்களின் நிலையைக்குறித்த பதிவு மாத்திரமே. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனரெனில் அதற்கான தீர்வை நீங்கள்தான் கவனிக்க வேண்டும்.

கர்நாடக மாநிலத்தவர்கள் நம் தமிழகத்தை பார்த்து சிரிக்கின்றனர். காரணம் அவர்கள் தடுப்பணை கட்டி வைத்து மழைநீரை தேக்கி வைத்துக்கொண்டு அதனை விவசாயத்திற்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால், நம் தமிழகத்தில் தடுப்பணைகள் இல்லாமல் மழை நீர் அவ்வளவும் கடலில் வீணாக கலக்கின்றது. அதனைக் கேட்பதற்கோ, தடுப்பணைகள் அமைப்பதற்கோ எவரும் வருவதில்லை.

முன்பெல்லாம் காவேரி பொன்னி அரிசி தான் நாம் சாப்பிட்டது, சந்தைகளிலும் அவைகளே வரும், ஆனால், இன்றோ கர்நாடகா பொன்னியை சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றோம். அதுவும் இன்றுவரை அரிசியின் விலை 50 ரூபாயைத் தொட்டிருக்கின்றது. இன்னும் இரண்டே ஆண்டுகளில் ஒரு கிலோ அரிசி 100 ரூபாயைத் தாண்டிவிடும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

இந்தக் காலக்கட்டத்தில்தான் ’நம்மாழ்வார்’ போன்ற இயற்கை விவசாயிகள் அதிக எண்ணிக்கையிலான கருத்தரங்கங்கள் நடத்தி வருகின்றனர். வறட்சியைத் தாங்க கூடிய நெல்விதைகளை விவசாயிகளுக்கு கொடுத்து, இயற்கை விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்கப்படுத்துகின்றனர். இந்நிலையில் பூச்சிக்கொல்லி மருந்திற்கும், ரசாயன உரத்திற்கும் ஆகும் செலவானது இல்லாமலாகி, அந்தப் பணம் சேமிக்கப்படும். விவசாயிகள் நஷ்டக்கணக்கு லாபமாக மாறலாம். தக்க சமயத்தில் எடுக்கப்பட்டிருக்கும் “தாக பூமி” என்ற குறும்படம் எடுத்த அன்பு ராஜசேகருக்கு எனது பாராட்டுக்கள்.

திரு. அறந்தை மணியனை அடுத்துவந்த பார்வையாளர்கள் அனைவருமே தன் கருத்தினை ஒலிப்பெருக்கியின் முன்னால் அனைவருக்கும் பொதுவாக பகிர்ந்துகொண்டனர். அவர்களது கருத்துக்கள் ஒவ்வொன்றுமே நல்ல விமர்சனத்திற்கான அடிநாதமாக இருந்தது.

தற்கொலை செய்துகொள்பவரின் மனைவியை ஊமைப்பெண்ணாக அமைத்துக்கொண்டதன் அவசியம் என்ன?

படத்தில் நடிப்பவர்களது பாவனைகளும், செயல்களும் இயல்பானதாகயில்லை, இதற்கான காரணம்?

ஊர் மக்கள்தான் நிலத்தை விற்கின்றனரே தவிர, கார்மேகம் நிலத்தை விற்காமலிருப்பது அவனது உரிமைதானே, பின்பு ஏன் அவன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?

சாவதற்கு முன்பு வாங்கிய கடனையெல்லாம் அடைத்துச்செல்லும் ஒருவன், ஏன் சாவதற்கு துணிய வேண்டும், அதற்கு பதிலாக நிலத்தையே விற்றிருக்கலாமே.?

இந்தப்படத்தை பார்க்கும் பொழுது எங்கள் சொந்த ஊரில் உள்ள நிலத்தை விற்றதுதான் ஞாபகம் வருகின்றது. முதலில் ஒரு செண்ட் 500 கேட்டதும் தர மறுத்த நாங்கள், பின்பு ஒரு நாள் ஒரு செண்ட் விலை 900 ரூபாய் என்றதும் விற்று விட்டோம்.

நிலத்தின் மதிப்பு எண்பதாயிரமாக யிருக்கின்ற பட்சத்தில் தற்கொலை செய்துகொள்வதை விட நிலத்தை விற்று விட்டு அந்தப்பணத்தில் சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாமே.?

அந்தச் சிறுமி தேநீர் கடையில் நின்றுகொண்டு “எங்கப்பா டீ வாங்கீட்டு வரச்சொன்னாங்க” என்று மூன்று முறை சொல்கின்றாள். அதன் பின்பே அவர் அவளுக்கு டீ ஊற்றுகின்றார், இதனைப்பார்க்கும்பொழுது எனக்கு அக்குடும்பத்தின் வறுமையை நினைத்து பரிதாபமாக இருந்தது. மிக மிக சிறப்பான காட்சியாக இதனைச் சொல்லலாம்.

All India radioவில் மத்திய அரசை ”நடுவண் அரசு”, என்று உச்சரிக்க மாட்டார்கள், ஆனால் டீக்கடையில் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற வானொலியில் நடுவண் அரசு என்று செய்தி வாசிப்பாளர் உச்சரிப்பதாக வருகின்றது, இது தவறானதொரு பதிவு. அடுத்த படங்களில் இதனை சரிசெய்துகொள்ளுங்கள்.

உழவுத்தொழில்தான் பிரதானம் என்பதனை ஆசிரியர் மாணவர்களுக்கு போதிக்கும் இடம் உழவின் மகிமையை உணரச்செய்வதாக யிருக்கின்றது.

என்பதுபோன்ற நிறைகளும் குறைகளும் அடுத்தடுத்த பார்வையாளர்களின் பார்வையிலிருந்து வேறுபட்டது. இவர்களின் கருத்துகள் அனைத்தும் கேட்டபின்பு ”தாகபூமி” படத்தின் இயக்குனர் ‘அன்பு ராஜசேகர்’ தன் எண்ணத்தினை பகிர்ந்துகொண்டார்.

அன்பு ராஜசேகர்:

இப்படம் இதுவரை பதின்மூன்று இடங்களில் திரையிடப்பட்டு பரிசுகள் பலவும் வாங்கியிருக்கின்றது. ஆனால், தமிழ் ஸ்டூடியோவில் ஒருமுறையேனும் திரையிட்டால்தான் இந்தப்பயணம் முடிவுறும், என்று நினைத்துக்கொண்டிருப்பேன். அது இன்று நிறைவேறிவிட்டது.

இதனை நிறைவேற்றிக்கொடுத்த தமிழ் ஸ்டூடியோ அருணுக்கு நன்றிகள். இது எனது முதல் படம். அதற்காக வந்த விமர்சனங்களையும் நான் வரவேற்கின்றேன். வெறுமனே பாராட்டுதலுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை.

இதற்கு முன்னர் நடந்த குறும்பட வட்டத்திலெல்லாம் திரையிட்ட குறும்படங்களை விமர்சித்த பொழுது, நானும் சேர்ந்து விமர்சிப்பவன் தான், அதனால் இந்த விமர்சனங்களையும், இங்கு சுட்டிக்காட்டப்பட்ட குறைகளையும் நான் வரவேற்கின்றேன்.

கார்மேகத்தின் மனைவியை ஊமைப்பெண்ணாக வைத்திருப்பது, கதையின் வசதிக்காகத்தான். அவரும் பேசுவது மாதிரியாக இருந்தால் அவருக்கும் சேர்த்தே வசனங்கள் வைக்க வேண்டி வந்திருக்கும். மேலும் , ஊமைப்பெண்ணாக இருக்கின்ற சமயத்தில் கார்மேகம் இறந்தவுடன் இவர்கள் குடும்பம் மேல் ஒரு பரிதாபம் ஏற்படலாம்.
இதில் நடித்த நடிகர்களைப்பற்றி சொன்னார்கள். இவர்கள் யாருமே இதற்கு முன்பு நடித்து பழக்கமானவர்கள் அல்ல. கிராமத்து மக்களையே நடிகர்களாக்கி அவர்களை அக்களத்திற்கு அழைத்துச்சென்று நடிக்க வைத்த காரணத்தினால், நடிப்பதில் குறைகள் இருக்கின்றது.

ஊரிலுள்ள அனைவருமே நிலத்தை விற்க அவர்களை எதிர்த்து தனியொருவனாக கார்மேகத்தால் எதுவுமே இயலவில்லை, என்பதற்காகத்தான் அவன் தற்கொலை செய்துகொள்கின்றான். அதே சமயம் அவனுக்கு நிலத்தை விற்கவும் மனசில்லை. டீக்கடையில் அவன் கடனை திருப்பிக்கொடுக்கின்ற சமயத்திலெல்லாம் அவன் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தோடுதான் இருக்கின்றான். இது தஞ்சாவூர் போன்ற விவசாயிகளின் நிலைதான். இதுவரை மூவாயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கும் இதுபோன்றதொரு பிரச்சனைகள் இருந்திருக்கத்தான் செய்யும். இதனை ஆதாரமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமே ”தாக பூமி”.
இந்த திரையிடலுக்கு உதவிய தமிழ் ஸ்டூடியோவிற்கும், என் படத்தை விமர்சனம் செய்த நண்பர்களுக்கும் உண்மையான நன்றிகள்.

அன்பு ராஜசேகரையடுத்து தமிழ் ஸ்டூடியோ அருண் வந்திருந்த நண்பர்களுக்கும், விருந்தினராக சிறப்பித்த திரு.அறந்தை மணியன் அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்கிக்கொண்ட பின்பு கூட்டம் கலையத்தொடங்கியது.

பயிருக்கு ஊட்டுகின்ற பூச்சிக்கொல்லியானது, மனிதர்களையே பூச்சிகாளாக்கி கொன்றுகொண்டிருக்கின்றது. ரசாயனங்களையே நம்பிக்கொண்டு கண் அவிந்துபோய் தடவிக்கொண்டிருக்கின்ற விவசாயிகளுக்கு, கண்களைக் குணமாக்குகின்ற இயற்கை விவசாயம் என்றோர் மாற்று விவசாயம் உள்ளது, என்று புரிந்துகொண்டு உழவர்கள் நலமாக வாழ்ந்தால் அது “தாக பூமி", க்கு கிடைத்த பரிசு.

வணிகசினிமாவையே, உண்மையான சினிமா என்று கண்களை இறுக மூடிக்கொண்டிருக்கின்ற மக்களுக்கு நல்ல சினிமா என்னும் மாற்று சினிமா இதுவென கண்களைத்திறந்து அடையாளம் கண்டுபிடிக்கின்ற ஆற்றல் வாய்த்தால் அது தமிழ்ஸ்டூடியோவிற்கு கிடைத்த வெற்றி.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </