இதழ்: 8, நாள்: 15- ஆடி -2013 (July)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 5 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
கோபால் ராஜாராம் - த காமன் மேன் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
திரைமொழி 6 - ராஜேஷ்
--------------------------------

RP அமுதனுடன் ஒரு நேர்காணல் - 2 - - கு. ஜெயச்சந்திர ஹஸ்மி

--------------------------------
தமிழ் ஸ்டுடியோவின் பேச்சரவம் - 1 சினிமா பற்றிய புரிதல் - தினேஷ்

--------------------------------

ராமையாவின் குடிசை - எரிக்கப்படாத உண்மைகள் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

--------------------------------
பிணங்களை அறுப்பவளின் கதை - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
ஒளிப்பதிவாளர் செழியனின் பேசும்படம், நூலின் திறனாய்வு - தினேஷ்
--------------------------------
கனவெனும் குதிரையில் ஏறினேன், இறங்க முடியவில்லை - பிச்சைக்காரன்
--------------------------------
பந்தயப் புரவிகள் - தவறிப் போன பந்தயக் குதிரைகள் - - வருணன்
--------------------------------
தமிழ் ஸ்டூடியோவின் 55ஆவது குறும்பட வட்டம் - தினேஷ்
--------------------------------
 
   

   


கோபால் ராஜாராம் - த காமன் மேன்

- யமுனா ராஜேந்திரன்

குறிப்பிட்ட ஒரு விஷயம் பற்றிப் பேசுகிறபோது, அந்தக் குறிப்பிட்ட விஷயம் பற்றிக் குறிப்பிட்ட ஒருவர் என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் என்பதைத் தேடி அறிந்து கொண்டு, அந்தக் குறிப்பிட்ட ஒருவரை விமர்சிப்பது என்பது விமர்சன ஒழுக்கம். அதனோடு, பேசுகிற விஷயங்கள் குறித்து திசைதிருப்பவோ அல்லது திரிக்கவோ செய்யாமல், தந்திரோபாயமில்லாமல் திறந்த மனத்துடன் பேசுவதும் ஒரு விமர்சன அறம்.

கோ.ராஜாராமுக்கும் வெங்கட் சாமிநாதனுக்கும் இந்த இரண்டும் பொருந்தாது.

சோவியத் யூனியனையும் தலிபான் அமைப்பையும் எந்த விமர்சனமும் இல்லாது நான் ஆதரிக்கிறேன் என்று இருவரும் எப்படி முடிவுக்கு வந்தார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. முந்நூறு பக்கத்தில் அரசியல் இஸ்லாம் பற்றி ஆறு ஆண்டுகள் முன்பு உயிர்மை வெளியிட்ட என் நூலில் முப்பத்து ஐந்து பக்கங்களுக்கு சோவியத் யூனியன், அமெரிக்கா, ஆப்கான், தலிபான்களின் அரசியல், இதனோடு இப்பிரச்சினைகள் குறித்த திரைப்படங்கள் என நான் எழுதியிருக்கிறேன். அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட எனது அரபுப் புரட்சி குறித்த முன்னூறு பக்கநூல் இன்றைய அரசியல் இஸ்லாம் குறித்த எனது பார்வையை முன்வைக்கிறது. இந்து முஸ்லிம் பிரச்சினையும் தேசப்பிரிவினையும் குறித்த திரைப்படங்கள் பற்றிய எனது தனிநூலை உயிர்மை வெளியிட்டிருக்கிறது. குறைந்தபட்சம் என்னை விமர்சிப்பற்கு முன்னால் இவர்கள் பேசுகிற பிரச்சினை பற்றி நான் முன்னமே எழுதியிருப்பதனை வாசித்துவிட்டு விமர்சிப்பதுதான் வாசக அறம். கம்யூனிச வெறுப்பு இருவரதும் கண்களை அடர்த்தியாக மறைத்துக் கொண்டிருக்கிறது. தமது இஸ்லாம் வெறுப்பு இந்துத்துவ மனோநிலையிலிருந்து வெளிவருவார்களானால் இவர்களது கண்கள் கொஞ்சமாகவேனும் திறவுபட வாய்ப்பு இருக்கிறது.

*************************

‘யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும்; இல்லை@ ரசனையும் இல்லை. வங்கதேசப் படுகொலை முதல் இந்தியப் பிரிவினை நாட்களின் படுகொலைகள் வரை பெரிய அளவில் இவை பற்றிப் பேசிய படங்கள் இல்லை. தமிழக முஸ்லீம்களும் இந்தியப் பிரிவினையும் குறித்த வாசிப்பு யமுனா ராஜேந்திரனுக்கு இல்லை. சோவியத் சினிமாவில் சோசலிச யதார்த்தவாதப் பிரச்சாரப் படங்கள் தவிர எதுவும் இல்லை‘. இந்த ‘இல்லைகள்’ எல்லாம் ‘யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலின் கோரமுகம்’ எனத் துவங்கி கோபால் ராஜாராம் தன்னுடைய ‘திண்ணை’யில் ஆறுவாரம் சாவகாசமாக உட்கார்ந்து தீட்டிக்காட்டும் அமெரிக்கச் சார்பு விமர்சன அரசியலின் புனிதமுகம்.

கோ.ராஜாராம் நிஜத்தில் மிகுந்த நம்பிக்கையுடனும் தனது அறிவு குறித்த செருக்குடனும் பேசுகிறார். நல்லது ராஜாராம், பிரச்சினை அவ்வளவு எளிதானது இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இந்தியப் பிரிவினை நாட்களின் வன்முறை குறித்து உங்களுக்கு குஷ்வத்சிங்கின் டிரெயின் டு பாகிஸ்தான் படம் தவிர எதுவும் தெரியவில்லை. மீறினால் தமஸ் பிற்பாடு கரம் ஹாவாவுக்கு அப்பால் உங்களுக்கு ஞானம் இல்லை. என்னுடைய இந்தியப் பிரிவினை சினிமா நூலில் இப்பிரச்சினை பற்றி வந்த தொகையான படங்கள் குறித்து நான் விரிவாக எழுதியிருக்கிறேன். புத்தகத்தின் இறுதியில் ஒரு பட்டியலும் கொடுத்திருக்கிறேன். வங்கதேசம் பற்றி அதனது சினிமா பற்றியெல்லாம் எதுவும் தெரியாது எப்படி ராஜாராமினால் இப்படியெல்லாம் பேசமுடிகிறது? வங்கதேசத்தின் சினிமாவே அதனது விடுதலைப் போராட்டம் மற்றும் அதில் கொல்லப்பட்ட மக்கள், இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது குறித்ததாகத்தான் இருக்கிறது. கிளே பேர்ட் போன்ற படங்கள் உள்பட டிவிடிக்களில் அற்புதமான வங்கதேசப் படங்கள் அமெரிக்காவிலும் மேற்கு நாடுகளிலும் கிடைக்கின்றன. மேற்கில் திரைப்படமான பிரிக்லேன் நாவல் கூட வங்கதேச அடிப்படைவாதமும் படுகொலைகளும் குறித்துப் பேசுகிறது. தீபா மேத்தா மற்றும் ஷல்மான் ருஸ்டியின் திரைப்படமான மிட்நைட் சில்ரனில் கூட வங்கதேசப் படுகொலைக் காட்சிகள் இருக்கிறது. ராஜாராம் கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருட்டு என்று ஆகிவிடாது.

**********************

கோபால் ராஜாராமுக்கு என்ன நடந்தது? அலுமினியப் பறவைகள், தாமரை இதழ் விமர்சனக் கட்டுரைகள், வானம்பாடிக் கவிதைகள், பாதல் சர்க்கார் நாடக மொழிபெயர்ப்புக்கள் மூலம் அறியவந்த ராஜாராம் அல்ல இன்றைய ராஜாராம் என்பது முதலில் பதியப்பட வேண்டிய ஒரு தரவு. இன்றைய ராஜாராம் தனது கடந்த கால இலக்கியம் மற்றும் அரசியல் குறித்த விமர்சன உணர்வு கொண்ட, வேறுவிதமான அரசியலைத் தேர்ந்து கொண்ட ராஜாராம். அவரது விமர்சன அரசியல் அவரை தேர்ந்தெடுத்த இஸ்லாமிய வெறுப்பு, இந்துத்துவச் சார்பு, அமெரிக்க ஆதரவு அரசியல்; கட்டுரைகளை வெளியிடும், எழுதும் திண்ணையின் பொறுப்பாளர்களில் ஒருவராக, எந்த விமர்சனமும் அற்று உலகில் அமெரிக்காவின் நரவேட்டைக் கொள்கையைக் காப்பாற்றப் பாடுபடும் ஒருவராக அவரைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

சற்றொப்ப அவரது கால இலக்கிய மற்றும் அரசியல் நிலைபாடுகளையே கொண்டிருந்து இன்று தமது கடந்த காலத்தை விமர்சனபூர்வமாகப் பார்க்கிற அறிவார்ந்த வேறொரு தமிழக நிலைபாடும் உண்டு. இந்த நிலைபாடு கடந்த கால சோசலிச அனுபவங்களை விமர்சனபூர்வமாகப் பார்த்துக் கொண்டு, இந்திய அளவில் இந்துத்துவத்தை கடுமையாக எதிர்த்துக் கொண்டு, இஸ்லாம், கிறித்தவம் என சகலமதங்களதும் மானுட உள்ளடக்கத்தையும் அடிப்படைவாதத்தையும் அவதானித்துக் கொண்டு, சாதிநீக்க அரசியலைச் சுவீகரித்துக் கொண்டு, விடுதலை அரசியலை நோக்கிய தேடல் கொண்டது இந்த விமர்சன அரசியல். என்னுடையது இந்த விமர்சன அரசியல்தான். ராஜாராமும் நானும் எதிரெதிர் முனைகளில் இருக்கிறோம் என்பது எமது அணுகுமுறைகளில் தெளிவாக இருக்கிறது.

பிரச்சினை எங்கே வந்தது? ஜோர்ஜ் புஸ் அரபுநாடுகள் மீது சிலுவை யுத்தம் துவங்கியதுபோல கோபால் ராஜாராம் இந்துத்துவ எதிர்ப்பு, அமெரிக்க ஆதிக்க எதிர்ப்பு, இடதுசாரிச் சார்பு விமர்சகர்கள் மீது ஒரு யுத்தம் துவங்கியிருக்கிறார். விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாகத் தமிழகத்தில் எழுந்த சர்ச்சை கோபால் ராஜாராமுக்கு அவரது இந்துத்துவ விமர்சன அரசியலுக்கான பின்னணியாக, இடதுசாரி விமர்சன அரசியலின் மீதான தாக்குதலுக்கு முகாந்தரமாக அமைகிறது.

*******************************

கோபால் ராஜாராம் தனது ஆறு கட்டுரைப் பகுதிகளிலும் ‘தத்துப் பித்தென்று தப்புத்தப்பாக’ எனது உளவியல் குறித்து ஆய்வு செய்வதில் ஈடுபட்டிருக்கிறார். சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் குறித்த ‘எனது பார்வை’ என அவர் சிலவற்றைத் ‘தனக்குத்தானே கற்பிதம்’ செய்து கொண்டிருக்கிறார். நிலவிய சோசலிசம் வீழ்ந்துவிட்டது என்றுதான் நான் எழுதி இருக்கிறேன். சீனாவில் சோசலிசம் இல்லை என்றுதான் நான் எழுதியிருக்கிறேன். வடகொரியாவைப் பாராட்டி ஒரு சொல்லும் எங்கும் நான் எழுதியது இல்லை. கியூபாவினது மட்டுமல்ல எந்தநாட்டினதும் வெளிநாட்டுக் கொள்கையும் இன்று கருத்தியலினால் தீர்மானிக்கப்படுவதில்லை என்றும் நான் சொல்லியிருக்கிறேன். அமெரிக்க உலகத் திட்டமான பயங்கரவாத எதிர்ப்பு யுத்தத்தில் பழைய சோசலிச நாடுகள் கூட்டாளிகளாகிவிட்டன என நான் எழுதியிருக்கிறேன். அமெரிக்கா, இந்தியா. மேற்குலகு, ரஸ்யா, சீனா என அனைத்துமே ஏகாதிபத்திய நலன்கள் கொண்டவை என நான் எழுதியிருக்கிறேன். இதுவெல்லாம் கடந்த இருபது ஆண்டுகளாக நான் எழுத்தில் பதிவு செய்தவை. நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை, அரசியல் இஸ்லாம், பாப்லோ நெருதாவின் துரோகம், ஜிப்ஸியின் துயர நடனம், ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், அரபுப் புரட்சி என எனது நூல்கள் அனைத்திலும் இது தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.

கோபால் ராஜாராம் எழுதுகிற அனைத்தையும் நான் படிக்கிறேன். கோபால் ராஜாராம் நான் கடந்த இருபது ஆண்டுகளில் எழுதிய எதனையும் வாசிக்கவில்லை. இன்றைய உலகம், சோசலிச நாடுகள், இந்தியா, ஈழம் என எழுதிக் குவித்திருக்கிறேன். ராஜாராமுக்கு இவை ஏது குறித்த வாசிப்பும் இல்லை, அறிவும் இல்லை. அகந்தையும் ஆணவமும் மட்டும்தான் இருக்கிறது. ‘குட்பை லெனின்” படத்தைக் குறிப்பிட்டுவிட்டு என் தொடர்பாக ராஜாராம் எழுதும் வரிகள் பின் வருமாறு : ‘இவர்கள் இன்னமும் கோமாவில் இருக்கிறார்களா இல்லை, இன்னமும் மலிவுவிலை சோவியத் பதிப்புகளை இவர்களுக்காக மறு பதிப்புச் செய்து இவர்கள் மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொண்டுவிடக் கூடாது என்று இவர்களின் நம்பிக்கைகளைக் காப்பாற்றுகிறார்களா என்று எனக்குச் சந்தேகம் வருகிறது‘. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளில் நான் உயிர்மையில் எழுதிவருவதை வாசித்திருக்கிற எவரும் எனது அரசியல் குறித்த இப்படியான முட்டாள்தனமான முடிவுகளுக்கு வரமுடியாது.

கோபால் ராஜாராமுக்குப் பதில் எழுவது என்பது ஆயாசமாக இருக்கிறது. சோவியத்யூனியன், பழைய சோசலிச நாடுகள், வட கொரியா, கியூபா, சீனா, கம்யூனிஸ்ட் கட்சிகள் என்பன குறித்து ‘நான் கருதிக் கொண்டிருப்பவை என்ன?’ என்பது கோபால் ராஜாராமுக்கு எப்படித் தெரியும்? நான் இவை பற்றி இரண்டாயிரம் பக்கங்கள் எழுதி இருக்கிறேன். ராஜாராம் எதனையுமே வாசிக்கவில்லை. ராஜாராம் இப்பிரச்சினைகளில் என்னைப் பற்றிச்சொல்வது அத்தனையும் அபத்தம், பச்சைப் புழுகுகள். ராஜாராம் சொல்பவை அனைத்துமே அவரது கனவுகள், கற்பனைகள், கற்பிதங்கள். இந்த இலட்சணத்தில் மற்றவர்களின் ‘தர்க்க ஒழுக்கம்’ பற்றி கோபால் ராஜாராம் வெட்கமில்லாமல் எழுதிச் செல்கிறார்.

****************

ஆப்கானில் நடந்தது சோவியத் ஆக்கிரமிப்பு என யமுனா ராஜேந்திரன் சொல்லவில்லை என்கிறார் ராஜாராம். ‘தலிபான் இயக்கம் தன்னளவில் எந்த நோக்கும் இல்லாத ஒரு இயக்கம் என்ற ஒரு பிரமையை இவர்கள் எப்படிப் பெற்றார்கள் என்று தெரியவில்லை‘ என்கிறார் கோபால் ராஜாராம். எங்கே நான் இப்படியான கருத்துக்களை முன்வைத்தேன் ராஜாராம்? திண்ணையில் ஆறுவாரம் ராஜாராம் ‘அளந்து கொண்டிருந்தபோது’ நான் ‘தலிபான் வசமிருந்து தப்பித்தல்’ எனும் கட்டுரையைப் பதிவுகள் இணையதளத்தில் மறுபிரசுரம் செய்தேன். சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு அதனது விளைவுகள் அன்றைய நிலையில் அது செய்திருக்கக் கூடியவை குறித்த எனது பார்வைகள் அக்கட்டுரையில் இடம்பெற்றிருந்தன. அக்கட்டுரை ஆறு ஆண்டுகள் முன்பு இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு உயிர்மை பதிப்பித்த அரசியல் இஸ்லாம் நூலில் இடம்பெற்ற கட்டுரை. நூலில் இடம்பெறும் முன்பாக அக்கட்டுரை உயிர்மை இதழில் வெளியாகியது. ராஜாராம் நூலை வாசிக்காவிட்டாலும் பரவாயில்லை, உயிர்மை இதழிலாவது அதனை வாசித்திருக்க முடியம். உயிர்மை இதழில் வெளியான எனது விஸ்வரூபம் கட்டுரை தொடர்பாக ஆறுவாரம் தொடர் கட்டுரைகள் எழுதுகிறவர் கண்ணில் இக்கட்டுரை படாதது ஆச்சர்யம்தான். நான் இக்கட்டுரையில் தெளிவாக சோவியத் ஆக்கிரமிப்பு குறித்துப் பேசியிருக்கிறேன்.

‘ஐம்பதாண்டுகால ஆப்கான் அரசியல் வாழ்வைத் தொகுத்துக் கொள்வோமானால் நாம் சில நிலைபாடுகளுக்கு வந்து சேரமுடியும். முதலாதாக சோவியத் யூனியன் ஆப்கானை ஆக்கிரமித்ததனால்தான் அமெரிக்கா முஜாஹிதின்களுக்கு அதரவு வழங்கியது என்பது பொய். 1978 ஆம் ஆண்டு ஆப்கான் மார்க்சியர்கள் அரசுக்கு வருவதற்கு ஆறுமாதங்களுக்கு முன்பாகவே முஜாஹிதின் இயக்கம் அமெரிக்க உளவுத் துறையால் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. 1979 ஆம் ஆண்டு செப்டம்பரில்தான் சோவியத் படைகள் ஆப்கானுக்குள் நுழைந்தன. இடையில் அமெரிக்காவுக்குச் சென்ற அமிர் சிஐஏ உதவியுடன் தராக்கியைக் கொன்றதுடன் பல்வேறு மார்க்சியர்களையும் கொன்றொழித்தார். முஜாஹிதின்களுடன் சமரசத்துக்கும் வந்தார். சோவியத் யூனியன் படைகள் முற்றிலும் ஆப்கானைவிட்டுச் சென்றபின் மார்க்சியர்களின் அரசு மூன்று ஆண்டுகள் முஜாஹிதின்களோடு போராடியது. அமெரிக்காவின் கட்டற்ற பொருளியல் ராணுவக் குவிப்பின் முன் நின்றுபிடிக்க முடியாமல்தான் மார்க்சிய அரசு வீழ்ந்தது. அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்டும் பாகிஸ்தானும் முஹாஜிஹிதின்களுக்கு ஆதரவளித்தது எவ்வகையிலும் ஆப்கானை முன்னேற்றத்திற்கு இட்டுச்செல்லவில்லை. மாறாகக் காட்டுமிராணடித்தனத்தையே இவர்கள் பிரசவித்தார்கள். பின்லேடனை அமெரிக்க உளவுத்துறையே வளர்த்தது, பல்வேறு நாடுகளிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் இஸ்லாமிய அடிப்படையவாதிகள் வந்து போராடுவதற்குத் திட்டம் வகுத்ததும் அமெரிக்காதான். சோவியத் அரசின் ஆக்கிரமிப்பு சர்வதேசியச் சட்டங்களுக்கு முரணானது என்பதில் சந்தேகமில்லை. மிருகத்தனமாக அது ஆப்கானியர்களை நடத்தியது என்பதிலும் சந்தேகமில்லை. சோவியத் யூனியன் ஆப்கானுக்குப் படைகளை அனுப்பி ஆக்கிரமிக்காமல், அமைந்த மார்க்சிய அரசுக்கு ஆயுதங்கள் வழங்கியிருந்தாலே ஆப்கானிய மார்க்சிய அரசு நின்றுபிடித்திருக்கும் எனச் சொல்கிறார் கனடிய ஆய்வாளரான ஜான் ரயான். வியட்நாம் கியூபா போன்ற நாடுகள் அவ்வாறு நின்று பிடித்தன எனவும் ரயான் சொல்கிறார்’.

அதே ‘தலிபான் வசமிருந்து தப்பித்தல்’ கட்டுரையில் தலிபான் குறித்த என் பார்வை இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது : ‘தலிபான்கள் போரின் குழந்தைகள் எனக் குறிப்பிடுவார் ஆப்கான் புரட்சிகரப் பெண்கள் இயக்கத்தின் பிதாமகரான மினா. அவர்கள் உறவுகளை இழந்தவர்கள. பாகிஸ்தான் மதப் பள்ளியான மதரஸாக்களில் வளர்ந்தவர்கள். தாய், சகோதரி, காதலியர் எனப் பெண்களை அவர்கள் அறியாதவர்கள். மூடுண்ட உலகத்தில் வளர்ந்த அவர்களுக்கு எந்த உலகப் பார்வையும் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஆப்கானின் கடந்த கால வரலாறு என்பதும் தெரியவில்லை. மத அடிப்படைவாதத்தினால் வழிநடத்தப்பட்ட அவர்கள் மாயையான மனப்பான்மை கொண்ட மனிதர்களாகவே ஆனார்கள். முஜாஹிதின்களை பொறியியல் படித்த தொழில்நுட்ப கொமேனிகள் என்றார் பிரெட் ஹாலிடே. தலிபான்களை பைத்தியநிலையின் சந்தோசத்தில் திளைத்தவர்கள் எனக் குறிப்பிடுகிறது ஹனாவின் விவரணப்படம். உலக வரலாற்றில் தலிபான்களின் பெண் வெறுப்பு, பெண் உடல் மீதான அவர்களது சித்திரவதை உணர்வு என்பது இணைகாணமுடியாத ஒன்றாகும்’

கோபால் ராஜாராமிடம்; எந்தவிதமான விமர்சன அறிவொழுக்கமும் இல்லை என்பற்கான சான்றாக இதனையும் நான் சொல்ல வேண்டும். தலிபான் குறித்த இந்த மேற்கோளை நான் கோபால் ராஜாராம் இன்று விமர்சிக்கும் எனது விஸ்வரூபம் தொடர்பான உயிர்மையில் எழுதிய இரு விமர்சனக் கட்டுரைகளில் ஒன்றில் மறுபடி பாவித்திருக்கிறேன். ஆறு கட்டுரைகளில் என் மீது வலிந்து தாக்குதலைத் தொடுத்து எனது உளவியலைச் சதா ஆய்வுக்குட்படுத்திக்கொண்டிருந்த ராஜாராமுக்கு தலிபான் தொடர்பான எனது இந்தக் கருத்துமட்டும் கடைசிவரையில் கண்ணில் தட்டுப்படவில்லை. தலிபான்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பெண் வெறுப்பாளர்கள் என்பதனை இங்கு நான் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறேன். கோபால் ராஜாராம் தனது அறிவொழுக்கக் கோருதலை நிறுத்திக் கொள்வது நல்லது

*************************
தனது தர்க்கத்துக்கு உட்படாத எதையும் புரிந்துகொள்கிற குறைந்தபட்ச யத்தனம் கூட ராஜாராமுக்கு இல்லை. பனிப்போர் கால கட்டத்தில் சோவியத் யூனியனை அழிவு சக்தியாகவும் அமெரிக்காவை மீட்பராக மட்டுமே ராஜாராம் புரிந்து கொண்டிருக்கிறார். நான் இதனை இப்படிப் புரிந்துகொள்ளவில்லை. காலனியாதிக்க எதிர்ப்பு தேசியவிடுதலை யுத்தத்தில் சோவியத் யூனியனும் சீனாவும் தேசிய விடுதலையை ஆதரித்து நின்றன. ஆப்ரிக்காவிலும் இலத்தீனமெரிக்காவிலும் ராணுவ சர்வாதிகாரிகளை அமெரிக்க மேற்கத்திய அரசுகள் காத்து நின்றன. சோவியத், சீன முரண்பாடுகள் தேசிய விடுதலை மற்றும் இடதுசாரி அரசுகளை நட்டாற்றில் விட்டது. ஐநாறு ஆண்டுகால வரலாற்றில் மேற்கத்திய நாடுகளும் அதனது இன்றைய அதியுருவான அமெரிக்காவும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு எனச் செய்தது ஏதுமில்லை.

ஆப்கானில் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக அந்த நாட்டை விடுதலை செய்வதற்காக அமெரிக்கா தலையிட்டது என விவாதிக்கிறார் ராஜாராம். விடுதலை என்பது என்ன? அது மிகப்பெரும் அர்த்தம் கொண்ட சொல். அமெரிக்கா எந்த நாட்டில் தலையிட்டாலும் அது தனது பொருளியல் மேலாண்மைக்காகத்தான் தலையிட்டிருக்கிறது ஆப்கான் உள்பட பெரும்பாலமான இஸ்லாமிய நாடுகளில் அதனது தலையீடானது எண்ணெய்வளத்தை தன்வசம் கொண்டிருப்பது தொடர்பானது. இல்தீனமெரிக்கநாடுகளில் அதனது தலையீடு என்பது ராணுவசர்வாதிகாரிகளுக்கு ஆதரவானது. கியூபா, நிகரகுவா, பொலிவியா, சிலி என இந்தநாடுகளின் வரலாறு என்பதுவே இதுதான். தலிபான்கள் முஜாஹிதின்களின் அடிப்படைவாதம், பெண்வெறுப்பு, பயங்கரவாதம் என்றெல்லாம் இன்று பேசுகிற அமெரிக்கா அன்று தலிபான்களின் கருத்தியலை எவ்வாறு மதிப்பிட்டது? தலிபான்கள் உருவாக்க விரும்பிய பின்சோவியத் ஆப்கான் எத்தகையது? அடிப்படைவாத முடியாட்சி நாடான சவுதி அரேபியாவை இன்று ஊட்டி வளர்த்தது போலத்தான் அன்று தலிபான்களை, அவர்களது கருத்தியலை சோவியத் எதிர்ப்பு எனும் பெயரில் அமெரிக்கா ஊட்டி வளர்த்தது. செப்டம்பர் 11 இற்குப் பிறகு பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட தலிபான்கள் எப்போதுமே அடிப்படைவாதக் கருத்தியலையே கொண்டிருந்தார்கள் என்பதுதான் எனது தர்க்கம்.

இந்த வரலாற்று நிலையில் தலிபான்கள், சோவியத் என மட்டும் ஆப்கான் பிரச்சினையைப் பார்க்க முடியாது. அங்கு பல்வேறுவிதமான அரசியல் போக்குகளும், சமூக விளைவுகளும் உறவுச் சிதறல்களும் இருந்தன. இதற்காகவே நான் ஆப்கான் தொடர்பாக இஸ்லாமியத் திரைக் கலைஞர்களால் எடுக்கப்பட்ட படங்களைக் குறித்து விரிவாகப் பேசிவிட்டு பிற்பாடு விஸ்வரூபம் படம் பற்றிப் பேசுகிறேன். இஸ்லாமியக் கலைஞர்கள் தமது படங்களில் வெளிப்படுத்திய ஆப்கானிய சமூகம் குறித்த பன்முகத்தன்மை விஸ்வரூபத்தில் இல்லை. வெறுமனே அது பயங்கரவாதம் குறித்துப் பேசும் அமெரிக்க ஆதரவுத் திரில்லர் படம் என்றே நான் விஸ்வரூபம் படத்தை மதிப்பிடுகிறேன்.

ரோமான் போலன்ஸ்க்கி முதல் அல்மடோவர் வரை ஹாலிவுட்டில் இடம்பெறுவார்கள், சோவியத் யூனியனில் சோசலிச யதார்த்தவாதம் தவிர எதுவம் இருக்காது என எனக்கு வகுப்பெடுக்கிறார் ராஜாராம். சோவியத் சினிமா குறித்த ராஜாராமின் அறிவு எனக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது. ஐசன்ஸ்டீன் என்ற ஒரு பெயர் போதும். கூடுதலாக புடோவ்கினையும் சிகா வெர்ட்டோவையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனோடு தாஸ்த்தயாவஸ்க்கி, டால்ஸ்டோய் படைப்புக்களின் ரஸ்யமொழித் திரைவடிவங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தும் சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஆண்டு என அறியப்பட்ட 1989 இற்கு முற்பட்ட படங்கள் என்பதை ராஜாராமுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன். இதனோடு மார்க்சிஸ்ட்டுகள் எனும் சந்கேத்தின் பெயரில் ஹலிவுட் திரைக்கலைஞர்கள் மெக்கார்த்தியச வேட்டைக்கு உட்படுத்தப்பட்டதும், கியூபத் திரைக் கலைஞனான தோமஸ் கிதராஸ் அலியாவுக்கு அமெரிக்கத் திரைவிமர்சனக் கலைஞர்கள் அளித்த விருதைப் பெறுவதற்கு விசா மறுக்கப்பட்ட சம்பவத்தையும் ராஜாராமுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன். ஹாலிவுட்டில் அமெரிக்க அரசின் பார்வை, அது குறித்த விமர்சனப் பார்வை என இருவேறுபட்ட பார்வைகள் மட்டுமல்ல, பாலஸ்தீனக் கலைஞன் எலியா சுலைமான் கூட அமெரிக்காவில் படமெடுத்தார் என்பதையும் நான் அறிந்தே இருக்கிறேன். பிரச்சினை அமெரிக்க அரசுக்கும் அந்நாட்டின் மக்களுக்கும் இருக்கும் பார்வை வித்தியாசங்களைப் புரிந்து கொள்வதுதான். துரதிருஷ்டவசமாக இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் இறக்குமதி செய்யப்படும் படங்கள் இந்த மாற்று அமெரிக்காவைக் காண்பிப்பதில்லை. இதனையே நான் என் கட்டுரையில் வலியுறுத்தியிருந்தேன்.

**********************************

பயங்கரவாதம் என்பது இன்று உலக அரசியலில் செல்வாக்கு வாய்ந்த ஒரு சொல். அமெரிக்க மேற்கத்திய அரசுகளுக்கும் அரபு நாடுகளில் இவர்களது ஆதிக்கத்தை எதிர்ப்பவர்களுக்கும் உள்ள முரண் இவர்களது அகராதியில் பயங்கரவாதம் தொடர்பானது. இஸ்ரேலுக்கு பாலஸ்தீனப் பிரச்சினை பயங்கரவாதம். சீனாவுக்கு ஒய்குர் பிரச்சினை பயங்கரவாதம். இந்தியாவுக்கு காஷ்மீர், நக்சலைட் பிரச்சினைகள் பயங்கரவாதம். ரஸ்யாவுக்கு செச்னியா பயங்கரவாதம். இலங்கைக்கு ஈழத்மிழர் பிரச்சினை பயங்கரவாதம். இவை அனைத்தும் அரசியல் பிரச்சினைகள் அல்லது உரிமை தொடர்பான பிரச்சினைகள் இல்லை. இது வெறுமனே ஆயுதப் பாவனை என்னும் டெக்னிக்கல் பிரச்சினை. இங்கு எதிர்ப்பு அரசியல் செய்பவர்கள் பயங்கரவாதிகள். பிரச்சினை எவ்வளவு எளிமைப்படுத்தப்பட்டவிட்டது பார்த்திர்களா? ஓரு சமூகவியலாளன் இதனை வெறுமனே ஆயுதப் பாவனை தொடர்பான விஷயமாக மட்டும் பார்க்க மாட்டான். இப்பிரச்சினையைச் சிலர்; தமது அடிப்படைவாத மதத்திட்டங்களுக்குப் பாவிப்பதற்கும், இதனது உரிமை அடிப்படைக்கும் இருக்கும் வித்தியாசங்களை விமர்சனபூர்வமாகப் பார்க்கும் ஒருவர் புரிந்து கொள்வார். ராஜாராம் பிரச்சினைகளின் அரசியல் பரிமாணத்தைப் பின்தள்ளி அதனது மத அடிப்படைவாத ஆயதப்பாவனைப் பரிமாண அழிவை மட்டுமே முன்வைக்கிறார்.

செப்டம்பர் 11 இற்குப் பிறகு உலக அளவில் முன்னுக்கு வந்த பயங்கரவாதம் எனும் சொல், இந்தியாவில் பாப்ரிமஜீத் உடைப்பு, மும்பை படுகொலைகள் என்பதனையடுத்து பிரசித்தம் பெற்றது. இந்திய அரசைப் பொருத்து இந்திய பயங்கரவாதத்தின் முகங்கள் இரண்டு. ஒன்று நக்சலிசம். பிறிதொன்று இஸ்லாமிய பயங்கரவாதம். இந்திய இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு சர்வதேசிய முகமும் உண்டு. இங்கு ஒன்றை ராஜாராம் மறந்து விடுகிறார். இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது, இந்துத்துவவவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பாப்ரி மஜீத் உடைப்பையும் மும்பை படுகொலைகளையும் அடுத்து அதற்கு எதிர்வினையாகவே தோற்றம் பெற்றது. இதற்கான புறநிலை அடிப்படையை இந்துத்துவவாதிகளே வழங்கினர். பின்லாடனின் பின் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது உலகு தழுவிய கண்ணிகளைக் கொண்டதாக ஆனது. இந்திய தமிழக அளவில் புறநிலையில் இந்துத்துவவாதிகளால் மும்பையிலும் குஜராத்திலும் இஸ்லாமிய மக்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையின் விளைவுகள சர்வதேசிய இஸ்லாமிய அடிப்படைவாதம் அறுவடை செய்கிறது. இதில் ஈடுபடும் இந்திய நிலம் சார்ந்த இஸ்லாமியர்கள் மிகச் சிறுபான்மையினர். நிஜத்தில் இந்துத்துவவாதிகளால் பெரும்பான்மை இஸ்லாமிய மக்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை அவர்கள் மௌனமாகவே எதிர்கொள்கிறார்கள். குஜராத் படுகொலைகள் அதற்குச் சான்று.

தமிழகத்தில் கோயமுத்தூரில் நடந்த அழிவுகளுக்கு முழு முதற்காரணம் அத்வானியின் கோவை வருகையும் பிஜேபியினரின் வெறிமிக்க இந்துத்துவப் பேச்சுக்களும் இஸ்லாமிய மக்களின் மீது ஆரம்பத்தில் காட்டப்பட்ட நிர்வாக ரீதியிலான பாரபட்சமும்தான். கோபால் ராஜாராம் இது குறித்து தனது கட்டுரைகளில் எங்கும் பேசுவதில்லை. காந்தியின் படுகொலை முதல் மலேகான் குண்டுவெடிப்பு வரை இஸ்லாம் பெயரில் படுகொலைகள் புரிந்தவர்கள் இந்துத்துவவாதிகள் என்பதையும் ராஜாராம் சௌகரியமாக மறந்துவிடுகிறார். ராஜாராமும், கமல்ஹாசனும் செய்கிற இன்னொரு போக்கிரித்தனம் இந்தியப் பிரிவினையின் போது வடமாநிலங்களில் நடந்த படுகொலைகளின் பகுதியாக இன்றைய காஷ்மீர் பிரச்சினையை, கோயமுத்தூர் பிரச்சினையை, தலிபான் பிரச்சினையை, பாலஸ்தீனப் பிரச்சினையை நிறுவிக்காட்ட முயல்வது. இதனைத் தான் ராஜாராம் தனது கட்டுரைகளில் செய்கிறார். இதனைத்தான் கமல்ஹாசன் தனது ஹேராம், உன்னைப் போல் ஒருவன் மற்றும் விஸ்வரூபம் படங்களில் செய்து காட்ட முனைகிறார்.

‘தேசம் என்ற கட்டுக்குள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வருவதில்லை. அவர்களை பொறுத்த மட்டில் தமிழ்நாட்டு பயங்கரவாதம், கர்னாடகா பயங்கரவாதம், மும்பை பயங்கரவாதம், கோரக்பூர் பயங்கரவாதம், காஷ்மீர் பயங்கரவாதம், கராச்சி பயங்கரவாதம், பெஷாவர் பயங்கரவாதம் என்றெல்லாம் தனித்தனியாக இருக்கிறதாக யமுனா ராஜேந்திரன் கருதுகிறார் போலிருக்கிறது‘ என்று எழுதும் கோபால் ராஜாராம் தொடர்ந்து இவ்வாறு கேட்கிறார் ”இது தமிழக முஸ்லீம்களை தமிழக பிராம்மணர்களை தமிழகத்தில் பிறந்த பெண்களை தமிழக நகரங்களான மதுரை கோயம்புத்தூர் போன்றவற்றை சர்வதேச பயங்கரவாதத்துடனும் தாலிபானியத்துடனும் பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்துடனும் இணைக்கும் படம் என்று கவலைப்படுகிறார் யமுனா ராஜேந்திரன். இப்படிப்பட்ட அபத்தத்தை யமுனா ராஜேந்திரன் தவிர வேறு யாரும் எழுதி விட முடியாது. 60 வருடங்ளாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரம் பொய்மை என்பது இதன் பொருளா? பாலஸ்தீனப் பிரசினைக்கும் தமிழ் நாட்டிற்கும் தொடர்பு உண்டு என்றால் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்திற்கும் தமிழகத்திற்கும் தொடர்பு இல்லாமல் போகுமா? இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நிகழும் தனிமைப் பட்ட சம்பவம் அல்ல. உலகு தழுவிய ஒரு நோக்கம் அதற்கு உண்டு. அதனால் தான் கோவை தொடங்கி ஜாவா வரையில் இந்தோனேசியா தொடங்கி ரஷ்யா வரையில் ஸ்பெயின் தொடங்கி அமேரிக்கா வரையில் தொடர்ந்து பயங்கரவாத செயல்கள் நிகழ்கின்றன’

பாலஸ்தீனம,; ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேசியா, ரஸ்யா, ஸ்பெயின் என உலகநாடுகளில் தொடங்கி, கர்னாடகா, மும்பை, கோரக்பூர், காஷ்மீர் என இந்திய நிலப்பரப்பிற்குள் இறங்கி, கோயமுத்தூர் வரை செயல்படுவது ஒற்றை முகம் கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதம் என்கிறார் கோபால் ராஜாராம். ஜோர்ஜ் புஸ்சின் இன்னொரு பெயர் கோபால் ராஜாராம் என்று தெரிகிறது.

பாலஸ்தீனத்தில் இருப்பது பயங்கரவாதம் என ராஜாராம் சொல்வதிலிருந்தே இவரது வரலாற்று அறிவு புரிகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் என இவர் வசைபாடுவதற்கு இடையில் பல காயங்கள் கடந்துபோகப்பட்டுவிட்டது. அரபு மக்களுக்கும் அமெரிக்க மேற்கத்திய அரசுகளுக்கும் இருக்கும் மிகப்பெரும் விரோதம் இஸ்ரேலை அமெரிக்காவும் மேற்குலகும் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கி பாலஸ்தீன மக்களைக் கொன்றொழிப்பதால் நேர்ந்த விரோதம்தான். சோம்ஸ்க்கி, தெரிதா, ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்றவர்கள் இஸ்ரேலின் மனித விரோதக் கொள்கையை எதிர்த்து, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலிய பல்கலைக்கழக அழைப்புக்களை நிராகரித்தார்கள். ராஜாராம் பாலஸ்தீன மக்களைப் பயங்கரவாதிகள் என்கிறார். பாலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ரேலை அவர் சௌகரியமாக மறந்துவிடுவது போல, இந்திய தமிழகப் பிரச்சினைகளில் அவர் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், பாப்ரி மஜீத் இடிப்பு, மும்பை மற்றும் குஜராத் படுகொலைகள், இந்துத்துவ அடிபபடைவாதம் போன்றவற்றை மறந்துவிடுகிறார்.

பயங்கரவாதப் பிரச்சினைக்கு அடிப்படையாக அரசியல் சிக்கல்கள் இருக்கிறது. உலக அளவில் அது பாலஸ்தீனப் பிரச்சினையாக, இந்திய தமிழக அளவில் அது இந்துத்துவமாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இன்னொறு உலக வளர்ச்சிப் போக்கையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாடுகள் இன்று பயங்கரவாதத்திற்கு எதிரான தமது யுத்தத்தில் தமது தேசியங்களை மத அடிப்படைவாத தேசியங்களாகக் கட்டமைக்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தலிபான்கள் முன்வைத்த தேசியம் இஸ்லாமிய அடிப்படைவாத தேசியமாக, மகிந்த ராஜபக்சே முன்வைக்கும் இலங்கை தேசியம் பௌத்த சிங்கள இனவாத தேசியமாக, பிஜேபி முன்வைக்கும் இந்திய தேசியம் கிறித்தவ இஸ்லாமிய எதிர்ப்பு இந்து தேசியமாக இருப்பதை ஒருவர் அவதானிக்க வேண்டும். ஈராக் மீதான யுத்தத்தை ஜோர்ஜ் புஸ் சிலுவை யுத்தம் எனக் குறிப்பிட்டதையும் நாம் இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

*************************

“அரசியல் பயங்கரவாதம் பற்றிப் படமெடுத்த கமல் ஹாசன் இஸ்லாமிய சகோதரகள் என அன்பாக விளித்த கமல் ஹாசன் அதே சகோதரர்கள் முன்வைத்த விமர்சனத்தைக் கலாசார பயங்கரவாதம் என உடனடியாகக் கூசாமல், தயங்காமல் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். ஆங்கிலத்தில் கல்சுரல் டெரரிசம் என்பது எவ்வளவு அழுத்தமான சொல் என்பதை உலக அரசியல் அறிந்த ஒருவர் உணர முடியும் என்கிறார் யமுனா ராஜேந்திரன். மிக சாமர்த்தியமான வாசகங்கள். கமல் ஹாசன் சகோதரர்கள் என்று சொன்னது இஸ்லாமிய சமுதாயத்தினரை. ஆனால் இஸ்லாமியரின் தீவிரவாத அரசியல் குழுக்கள் சில தான் விஸ்வரூபம் தடை செய்யவேண்டும் என்று பிரசினையை எழுப்பின. இவர்கள் “அதே சகோதரர்கள்” இல்லை. ஒட்டு மொத்தமாக இஸ்லாமிய சகோதரர்களை இந்தக் குழுக்கள் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். கமல்ஹாசனின் மக்களை, உறவினரை ஆபாசமாக விமர்சித்தவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள் இல்லை. மனுஷ்யபுத்திரனை அருவருப்பாக திட்டியவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள் இல்லை. இப்படிப்பட்ட குழுக்களை கலாசார பயங்கரவாதிகள் என்று சொல்லாமல் வேறு என்ன பெயர் இட்டு அழைக்க வேண்டும் என்று இந்த வகை குழுக்களை சகோதரர்களாக பாவிக்கும் யமுனா ராஜேந்திரன் தான் சொல்ல வேண்டும். அயொதல்லாக்களை யமுனா ராஜேந்திரன் சகோதரர்களாகவே பாவிக்கட்டும். ஆனால் எல்லா இஸ்லாமியர்களையும் இந்த வேலிக்குள் அடைக்க வேண்டாம்’.

மேலே கண்டது கோபால் ராஜராமின் இன்னொரு அழுகுணி ஆட்டம். கமல்ஹாசனின் தனது மக்களை, உறவினரை ஆபாசமாக விமர்சித்தவர்களைத்தான், கலாச்சார பயங்கரவாதிகள் என்றாராம்! ராஜாராம், அன்றைய தமிழக அரசியல் பற்றிய கொஞ்ச நஞ்சம் அறிவுகூட உங்களுக்கு இல்லை என்பதற்கு இந்தப் புழுகு ஒரு சான்று. விஸ்வரூபம் படத்திற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் ஆட்சேபம் தெரிவித்த வேளையில் (இவர்களே தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விஸ்வரூபம் படம் தொடர்பாகச் சென்று சந்தித்தவர்கள்). கமல்ஹாசன் உடனடியாக வெளியிட்ட அறிக்கையில்தான் அவர் இவர்களது ஆட்சேபனையை கலாச்சார பயங்கரவாதம் என்கிறார். கமல்ஹாசனை ஆபாசமாக விமர்சித்தவர் அந்தக் குறிப்பிட்ட அமைப்பினரோடு இருக்கவில்லை. கமல்ஹாசனை விமர்சித்தவர்தான் மனுஷ்யபுத்திரனையும் விமர்சித்தார். கமல்ஹாசன் இப்படியெல்லாம் வித்தியாசப்படுத்திக் கொண்டு கலாச்சார பயங்கரவாதம் எனும் சொல்லைப் பாவிக்கவேயில்லை. ராஜாராம் இங்கு அவிழ்த்திருப்பது அண்டப் புழுகு. இன்னும் அடிப்படைவாதிகளுக்கும் வெகுமக்கள் அடிப்படையிலான இஸ்லாமியக் கட்சிகளுக்கும் இருக்கும் வித்தியாசத்தை மனுஷ்யபுத்திரனும் சரி நானும் சரி எங்களது கட்டுரைகளில் தெளிவாகக் குறித்துக் காட்டியிருக்கிறோம்.

************************

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த படுகொலைகளை ஹே ராமில் கமல்ஹாசன் காட்சிகளாகச் சித்தரித்தார். பின்வருவது ஹே ராம் படம் குறி;த்த தனது ஜூனயர் விகடன் பேட்டியில் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சகோதரன் கோபால் கோட்சே இவ்வாறு சொல்கிறார் :

ஹே ராம் பட விமர்சனம் மூலம் தமிழ் வாசகர்களின் வீடுகளுக்கு ஜூனியர விகடன் என்னை அழைத்துப் போக என்னிடம் சம்மதம் கேட்டது. கிட்டத்தட்ட எனது தமிழகக் கனவு நிறைவேறிவிட்ட அளவுக்கான சம்மதத்துடன் இதற்கு சம்மதித்திருக்கிறேன். முஸ்லீம்கள் இந்துப் பெண்களைக் குறிவைத்துச் சூறையாட.. இந்துக்கள் முஸ்லீம் கும்பல்களை வேறோடு அறுக்க ஆரம்பித்தார்கள். பிரிவினையால் பெரிதும் பாதிக்கப்பட்டது பெங்காலிகளும் பஞ்சாபிகளும்தான் அதனால் அதன் அடுத்த கட்டப் போராட்டங்களை இந்த இரு மாநிலத்தவர்களும் பார்த்துக் கொள்வார்கள் என அன்றைய தினத்தில் எந்த இந்தியனும் நினைக்கவில்லை. மாநிலவாரியாகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் துவங்கினார்கள்.

அந்த எதிர்ப்புகளையெல்லாம் மாநிலவாரியாகப் பிரதிபலிக்கும் வகையில் தமிழகத்திலிருந்தும் கூட வாழ்க்கையைத் தொலைத்தவன், பிரிவினையை எதிர்க்க வருவான் எனத் தமிழக அய்யங்காராக கமல்ஹாஸன் தன்னை சகேதராமனாகக் காட்டிக் கொண்டது நல்ல சினிமா மூளை. படத்தின் முதல் பாதியில் காந்தியைப் பழிவாங்கத் தேவையான அனைத்துக் காரணகாரியங்களையும் ரசிகர்களின் முன் வைத்துவிடும் கமல்ஹாஸன். பிற்பகுதியில் அத்தனையையும் உடைத்துவிட்ட பக்காவான சினிமாவுக்குள் போய் மாட்டிக் கொள்கிறார். இரண்டாம் பகுதியிலும் முதற்பகுதியில் சொன்ன யதார்தத்தோடு அவர் முன்னேறியிருந்தால் இந்தப்படம் வெளிவருவதற்கான வாய்ப்புக்கள் மிக கம்மி என்பது மட்டும் நிஜம் (ஜீனியர் விகடன் : மார்ச் 12 2000)

‘தமிழகத்திலிருந்தும் கூட வாழ்க்கையைத் தொலைத்தவன்; பிரிவினையை எதிர்க்க வருவான் எனத் தமிழக அய்யங்காராக கமல்ஹாஸன் தன்னை சகேதரானாகக் காட்டிக் கொண்டது நல்ல சினிமா மூளை‘ என்கிறார் கோபால் கோட்சே. நான் சொல்ல வருவது இதுதான் : படுகொலைகள் எனும் அளவில், கோயமுத்தூர் சம்பவங்களை ஒப்பிடும்போது, வடமாநிலங்கள் போல் பிரிவினை நாட்களில் படுகொலைகள் என்பது தமிழகத்தில் இல்லை. அதற்கான சாத்தியமும் இல்லை. நான் படுகொலைகள் பற்றிப் பேசுகிறேனேயல்லாது அதனது அரசியல் பரிமாணம் பற்றிப் பேசவில்லை. அம்பேத்கர், பெரியார், ஜின்னா, காந்தி என அறுதியாகப் பிரிவினையை ஏற்றவர்கள் வேறுவேறு காரணங்களுக்காக அதனை ஏற்றார்கள் என்பது வரலாறு. இன்னும் பிரிவினைக்கும் நடந்த படுகொலைகளுக்கும் முஸ்லீம்களை மட்டுமே காரணமாக்குவது அறிவீனமாகவே இருக்கும். இந்துத்துவம் இந்தியப் பிரிவினையிலும் தனது அழிவுகரமான பாத்திரங்களைக் கொண்டிருக்கிறது. அன்று முதல் இன்று வரையிலும் கிறித்தவர்களையும் இஸ்லாமியர்களையும் சிறுபான்மையினரையும் தமது மேலாண்மையின் கீழ் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டியவர்களாகவே இந்துத்துவம் கருதிவருகிறது.

“தேசப் பிரிவினையின் போது வட இந்திய மாநிலங்களில் நடந்த இந்து முஸ்லிம் கலவரங்களின் விஷம் தமிழ் மனதைத் தீண்டிப் பார்ப்பதற்கான வாய்ப்பே இல்லை. இந்த நிலையில் காந்தியைக் கொல்ல முயற்சிப்பதான தமிழ் பாத்திரத்தை ஹே ராமில் உயிர்ப்பித்ததன் வழி இந்து-முஸ்லிம் வெறுப்பின் ஆதாரங்களை தமிழ் உளவியலுக்குள் அவர் கொணர்ந்தார்” என்று நான் தெளிவாக இந்தக் காரணத்தினால்தான் சொல்கிறேன். இந்து முஸ்லீம் என இரு மதங்களிலும் இருந்து அடிப்படைவாதிகள் கொலைகளில் ஈடுபட்டார்கள.; டிரெயின் டு பாகிஸ்தான் முதல் எர்த் படம் வரை இதனைத்தான் காட்சிப் படுத்துகின்றன. ராஜாராமின் கட்டுரைகளில் இத்தகைய கொலைகளில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என எல்லா இடங்களிலும் இஸ்லாமியர்கள் மட்டுமே இதில் ஈடுபட்டார்கள் என்கிற மாதிரியிலான சித்திரத்தைத் தர முயல்கிறார். அதனோடு இப்பிரச்சினையை உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதப் பிரச்சினையுடன் இணைக்கவும் அவர் முயல்கிறார்.

‘வரலாற்றினை அறியாவிடில் வரலாற்றின் கொடூர சம்பவங்கள் மீண்டும் நிகழும் என்று சொல்வார்கள். அதனால் யமுனா ராஜேந்திரனை தமிழ் நாட்டின் வரலாற்றை இன்னும் ஒரு முறை பயிலுமாறு கேட்டுக் கொள்கிறேன். முஸ்லிம் லீகின் பிரிவினை கோரிக்கையும் எப்படி மதராஸ் பிரதேச முஸ்லிம் லீக் இந்தக் கோரிக்கையை ஆதரித்தது என்பதையும், எப்படி ஈ வே ரா பெரியார் ஜின்னாவிடம் திராவிடஸ்தன் கோரிக்கையை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார் என்பதையும், எப்படி அவர் மறுத்தார் என்பதையும், பாகிஸ்தான் கோரிக்கைக்கு எப்படி திராவிட இயக்கம் ஆதரவு அளித்தது என்பதையும் குறித்து ஏராளமான வரலாறு உள்ளது…. என்கிறார் கோபால் ராஜாராம்.

வரலாற்றைப் பயில்வது என்பது எப்போதுமே நிகழ்காலத்தைப் புரிந்து கொள்வற்கும் செயல்படுவற்கும்தான் என எப்போதும் நான் நம்புகிறேன். இந்துத்துவமும் சரி எந்த மத மற்றும் சாதிய அடிப்படைவாதமும் சரி தமிழகத்தில் ஒரு வெகுமக்கள் அரசியலாக வரமுடியாது. பிஜேபி மற்றும் பாமக விஷயத்தில் அதனை தமிழக மக்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். இதற்கான காரணம் பெரியாரிய மரபுதான் என நான் உறுதியாக நம்புகிறேன்.

*********************

கோபால் ராஜாராமின் ஒரு கட்டுரைக்கு வெங்கட் சாமிநாதன் கலைரசனைப் பின்னூட்டமல்ல, ஒரு அரசியல் பின்னூட்டம் போடுகிறார்.

‘ஒரு விதத்தில் நான் கமலஹாஸனுக்கும் யமுனா ராஜேந்திரனுக்கும் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை. கமலஹாஸன் எடுக்கும் நிலைப்பாடுகள் தன்னை முன்னிறுத்திக் கொள்ள. யமுனா ராஜேந்திரனும் அதே அச்சு. ஒருத்தருக்கு தகவல் அனைத்தையும் கொட்டவேண்டும். இன்னொருவருக்கு தனக்குத் தெரியவந்த தொழில் நுட்பம் அனைத்தையும் கொட்டி பார் பார் ஜால வித்தை பார் என்று வித்தை காட்ட வேண்டும். இரண்டு பேருக்கும் ஏதும் நேர்மை, உண்மை, பற்றிக் கவலை கிடையாது. ஒருத்தருக்கு எப்போதும் தன் மதத்தை, தன் நாட்டை இழிவு படுத்தி, முஸ்லீம்கள் காலில் விழுந்து கொண்டே என் இனிய முஸ்லீம் குடும்பத்தினர் என்று தன்னை இழிவு படுத்திக்கொண்டே அதில் தன் பெருமை இருப்பதாக டமாரம் அடிக்க வேண்டும். அதேசமயம் அதையும் சம்பாத்திய வழிமுறையாக ஆக்கிக்கொள்ளவேண்டும். இது ஒருபுது யுக்தி. இன்னொருவருக்கு உலக சரித்திரத்தில் எந்த அதள பாதாளத்திற்கு தன் கொள்கை வீழ்ந்து அழுகினாலும், அதைக் கொண்டாடுவதில் தானே தனக்குள் கற்பித்து மாய்ந்து போகும் தன் விரிந்த அறிவையும் புத்திசாலித்தனத்தையும் டமாரம் அடித்துக்கொள்ளவேண்டும். இரண்டு பேருக்கும் அவரவர் தளத்தில் உலக நாயகர்களாகத் தான் நினைப்பு. இருப்பினும் வேடிக்கை, யமுனா ராஜேந்திரனுக்கு கமலஹாஸனிடம் தான் கற்பித்துக்கண்ட தாலிபானிஸத்தை வைத்து கடுப்பு. கமலஹாசனுக்கும் தாலிபான்களுக்கும் என்ன சம்பந்தம். ஓருத்தரிடம் சினிமா நடிக வீறாப்பு மறைக்கும் கோழைத் தனம். தாலிபான்களிடம் தன்னுயிரையே மாய்த்துக்கொண்டு காஃபிர்களைக் கொன்றால், ஜன்னத்தில் மதுக்குடங்களுடன் மஸ்லீன் உடைகளே அணிந்த கன்னிகைகள் காத்திருப்பார்கள் என்ற மயக்கம். மடையர்களேயானாலும் கோழைகள் அல்ல அவர்கள். மடத்தனம் வெறியாகி தன் உயிரை மாய்த்துக் கொள்கிறவர்கள். கமல்ஹாஸன் சும்மா ஒரு கூச்சல் போட்டால் போதும் “என் இனிய இஸ்லாமியத் தோழர்கள், என் குடும்பத்திரை ஒத்தவர்கள்” என்று உடனே காலில் விழும் ஜீவன். இந்தக் கோழை எப்படி தாலிபானாக முடியும்?’

ராஜாராமும், வெங்கட் சாமிநாதனும் தலிபானுக்கும் கமல்ஹாசனுக்கும் என்ன சம்பந்தம், கமல்ஹாசனை எப்படி தலிபான் எனக் குறிப்பிட முடியும் என கேட்கிறார்கள். பின்வருவது ஈரானியப் பெண் இயக்குனர் சமீரா மக்மல்பாவ்வின் கூற்று :

‘தலிபான் எமது காலத்தின் பிற்போக்குத் தனத்திற்கு சாட்சி. சிலவேளைகளில் தலிபான் என்பது நம் சமகாலத்தின் அரசியலைத் தெரிவிக்கும் வரலாறு. தலிபான் என்பது நாம் பெற்ற கல்வியையும் பயிற்சியையும் எமக்கு ஞாபகமூட்டுவது. எமது வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தும் சட்டங்களுக்கு மற்றொரு பெயர் தலிபான். சொர்க்கத்தினை அடையும் ஆசையின் பொருட்டும,; கடவுள் நம்பிக்கையின் பொருட்டும் நாம் சுமந்து திரியும் பயத்தில் விளைந்த எழுதப்படாத சட்டத்தின் பெயர் தலிபான். மதவெறிகொண்ட எந்த அரசும் தலிபானின் தன்மை படைத்ததுதான். அமெரிக்க ஜனநாயக சமூகத்தில் பாசிசவாதியான ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸினைச் சுற்றியிருக்கும் குழவினர் தலிபான்கள்தான். பின்லேடன் ஒரு தலிபான். ஜார்ஜ் புஸ் ஒரு தலிபான். ஸமீரா மக்மல்பாவ் ஒரு தலிபான். தலிபான் எனும் வார்த்தையைப் பிறவற்றுடன் இணைத்துப் பொறுத்திச் சொல்ல என்னை அனுமதியுங்கள். நான் தலிபான். நீங்கள் தலிபான். அவர் தலிபான். நாங்கள் தலிபான்கள். அவர்கள் தலிபான்கள். நாம் எல்லோரும் தலிபான்கள்’.

இது ஒரு சமூக மற்றும் மதத்தை நம்பும் தனிநபர் மனநிலை. நிகழ்வுகளைத் தட்டையாக, ஓருண்மையாகப் புரிந்து கொள்ளும் மனநிலை. ராம ரதயாத்திரை நடத்திய அத்வானியின் மனநிலை இது. பாப்ரி மஜீத்தை இடித்த கரசேவகர்களின் மனநிலை இது. மும்பை நகரின் பற்பல இடங்களில் படுகொலை நிகழ்த்திய கசாப்பின் மனநிலை இது. பூர்வகுடி தென்னமெரி;க்க மக்களைக் கொன்றொழித்த கிறித்தவ மதபோதகர்களின் மனநிலை இது. பொருளாதார யுத்த அரசியலுக்கு சிலுவை யுத்தம் எனப் பெயரிட்ட ஜோர்ஜ் புஸ்சின் மனநிலை இது. செப்டம்பர் படுகொலையை நியாயப்படுத்திப் பேசிய பின்லாடனின் மனநிலை இது. பூஜ்ய வருடத்திலிருந்து தொடங்கும் கருத்துநிலையாக போல்பாட்டிடம் இது செயல்பட்டது. இனத் தூய்மையாக இது இட்லரிடம் செயல்பட்டது. ‘சொர்க்கத்தினை அடையும் ஆசையின் பொருட்டும,; கடவுள் நம்பிக்கையின் பொருட்டும் நாம் சுமந்து திரியும் பயத்தில் விளைந்த எழுதப்படாத சட்டத்தின் பெயர் தலிபான்’ என்கிறார் சமீரா. மத்ததின் பெயரில் மட்டுமல்ல கருத்தியல், அரசியலின் அழகியலின் பெயரிலும் தலிபானியம் தோன்ற முடியும். இந்தத் தோற்றத்திற்குப் பருண்மையான வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. இந்தப் பருண்மையான வரலாற்றுக் காரணங்களை அறிந்து அதிலிருந்து விடுபடுவது சுயவிமர்சன உணர்வு கொண்டவர்களுக்கு மட்டுமே சாத்தியம். அமெரிக்க அல்லது இந்திய தேசபக்தியின் பெயரில் அனைத்து நிகழ்வுகளையும் ஓருண்மையாகக் குறுக்கிப் பார்ப்பது ஒரு வகையிலான தலிபானியம்தான். அவ்வகையில் பயங்கரவாதம் குறித்த அமெரிக்கப் பார்வையை, உள்ளபடியே சுவீகரித்த கமல்ஹாசனும் ஒரு தலிபான்தான். பாலஸ்தீனப் பிரச்சினை முதல் கோயமுத்தூர் பிரச்சினை வரை இஸ்லாமிய பயங்கரவாதம் என ஓருண்மையாகக் குறுக்கும் கோபால் ராஜாராம் கூட தலிபான்தான், இந்துத்துவ தலிபான்.

‘கமல்ஹாஸன் சும்மா ஒரு கூச்சல் போட்டால் போதும் “என் இனிய இஸ்லாமியத் தோழர்கள், என் குடும்பத்திரை ஒத்தவர்கள்” என்று உடனே காலில் விழும் ஜீவன். இந்தக் கோழை எப்படி தாலிபானாக முடியும்?’ என்கிறார் வெங்கட் சாமிநாதன். வெங்கட் சாமிநானின் பார்வையில் கமல்ஹாசன் எப்படி தலிபான்கள் போன்ற ‘வெறியற்ற, மடத்தனமற்ற’ வீரனாவது? கோபால் ராஜாராம் போல கமல்ஹாசனும் இஸ்லாமியர்களைப் பொத்தாம் பொதுவாக பயங்கரவாதிகள் எனப் போட்டுத் தாக்க வேண்டும். சினிமா வியாபாரம் பற்றிக் கவலைப்படாமல் பாலஸ்தீனம் முதல் கோயமுத்தூர் வரை இருப்பது பயங்கரவாதம் தான் என்று அம்மணமாகவும் கோரமாகவும் போட்டுத்தாக்க வேண்டும். கடந்த முப்பது ஆண்டுகளாக நானும் வெங்கட் சாமிநாதனை வாசிக்கிறேன். அவரது அறிவும் அனுபவமும் அவர் அறிமுகப்படுத்தும் படைப்புகளும் எனக்கு உலகை மேலும் புரிந்து கொள்ள உதவுகிறது. அவரது ரசனைக்குள்ளும் கலை அனுபவத்துக்குள்ளும் வராத எத்தனையோ படைப்புக்கள் இருக்கின்றன. அவரது விமர்சனப் பார்வையே படாத உன்னதக் கலைப்படங்களும் இருக்கின்றன. மார்க்சியர்கள், நக்சலைட்டுகள், அவர்களது வாழ்வு, இந்துத்துவத்தின் கீழும் இந்திய அரசின் கீழும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு, சாதியப் படுகொலைகள், குஜராத் படுகொலைகள் என இவர்கள் குறித்து நூற்றுக் கணக்கான திரைப்படங்கள் இருக்கின்றன. நிஹ்லானி, நந்திதா தாஸ், ஜாபர் பட்டேல், பெனிகல் எனக் கலாச்சாரக் கடப்பாடு கொண்ட இயக்குனர்கள் இத்தகைய படங்களை எடுத்திருக்கிறார்கள். இத்திரைப்படங்கள் குறித்த எனது முழுநூல் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகிறது. இவை குறித்தெல்லாம் ஏன் வெங்கட் சாமிநாதனால் அக்கறை கொள்ள முடியவில்லை? மௌனத்தின் இடையிலும் வார்த்தைகளின் இடையிலும் அர்த்தம் பொதிந்திருக்கிறது. இவை குறித்துத்தான் நான் எழுதி வருகிறேன். ராஜாராமுக்கோ வெங்கட் சாமிநானுக்கோ எனது ரசனையும் தர்க்கமும் பிடிபடவில்லை எனில் அது குறித்துக் கவலைப்படுகிற மனநிலையில் நான் இல்லை.

********************

கோபால் ராஜாராம் ஏன் இப்போது இந்த விமர்சனக் கடமையைத் தலைமேல் ஏற்றுக்கொண்டார்?

‘விஸ்வரூபம் பற்றிய விமர்சனங்களை இங்கு விமர்சிக்க காரணம் ஒரு போக்கு தமிழ் அறிவுஜீவிப் பத்திரிகைகளில் உருவாகியிருப்பைதைச் சுட்டிக் காடுவது தான். இன்னொரு காரணம் தமிழில் உள்ள சினிமா விமர்சனங்களின் இரு வேறு போக்குகளையும் அலசுவதும், வெகுஜன சினிமாவின் விமர்சனம் எந்தப் புள்ளியில் இயங்க வேண்டும் என்ற ஒரு விவாதத்தைத் தொடங்குவதும் தான். ஒரு முனையில் வெங்கட் சாமிநாதன், சிறு பத்திரிகை வட்டத்தினரின் தூய்மைவாத விமர்சனங்கள். இவை கலைப் படங்களை இனங்காணவும் ரசிக்கவும் பெரும் உதவி புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்னொரு புறம் நாயக வழிபாட்டில் தோய்ந்த வெகுஜன ஏடுகளின் விமர்சனங்கள். இரண்டுமே வெகுஜன சினிமாவின் கலைப் பண்புகளையும், சமூக தளத்தினையும் புரிந்து கொள்ள உதவாது. ராஜன் குறை, சுந்தர் காளி போன்றோர் முயன்றால் இதை முன்னெடுத்துச் செல்லலாம். துரதிர்ஷ்ட வசமாக யமுனா ராஜேந்திரன், முத்துகிருஷ்ணன் பாணி விமர்சனங்கள் தவறான அரசியல் நோக்கில் வெகுஜன சினிமாவின் சிறப்புகளை புறக்கணித்து தம் செல்ல அரசியல் நோக்குகளை இவை ஏற்றுக் கொள்ளவில்ல என்பதை மட்டுமே மையப்புள்ளியாக்கி சிதைந்துள்ளன’.

‘வெகுஜன சினிமாவின் கலைப் பண்புகளையும், சமூக தளத்தினையும்’ புரிந்து கொள்ளாது, ‘தவறான அரசியல் நோக்கில் வெகுஜன சினிமாவின் சிறப்புகளை புறக்கணித்து தம் செல்ல அரசியல் நோக்குகளை இவை ஏற்றுக் கொள்ளவில்ல என்பதை மட்டுமே மையப்புள்ளியாக்கி சிதைந்துள்ளன‘ என்று எனது விமர்சனப் பார்வை குறித்துப் பேசுகிறார் கோபால் ராஜாராம். தமிழ் சினிமா பற்றி நான் எழுதி இதுவரை தொகுக்கப்பட்ட நூல்கள் தமிழில் மாற்றுச் சினிமா, சினிமா சித்தாந்தம் கலை, மணிரத்னத்தின் சினிமா, திரைப்படம் வன்முறை பாலுறவு போன்றன. இதுவன்றி தொகுக்கப்படாத கட்டுரைகள் என ஐம்பது கட்டுரைகள் இருக்கும். ராஜாராம் ஒழுங்காக என் கட்டுரைகளை வாசித்திருப்பாரானால் பாலுமகேந்திரா, ருத்ரய்யா, மகேந்திரன், ஹரிஹரன், பாலாஜி சக்திவேல், தங்கர்பச்சான் போன்றவர்கள் ‘தமிழ் சினிமாவின் சிறப்பு’ என நான் எழுதியிருப்பதை அறியமுடியும். மணிரத்னம், கமல்ஹாசன் போன்றோரது படங்களை சமூக உறவுகள் குறித்த படங்கள் எனவும், அரசியல் பிரச்சினைகள் குறித்த படங்கள் எனவும் நான் இரு வகைகளில் பகுத்துக் கொள்கிறேன். அரசியல் குறித்த படங்களில் திரைப்பட அழகியலை மட்டுமே பேசிக்கொண்டிருப்பது மோசடியான விமர்சனப் பார்வை என்பது எனது கருத்து. வெங்கட் சாமிநாதன், கோபால் ராஜாராம் போன்றவர்கள் சினிமா விமர்சனம் எனும் பெயரில் செய்து கொண்டிருப்பது அதுதான். இவர்களது ரசனையும் தர்க்கமும் என்னுடைய ரசனையும் தர்க்கமும் ஒத்துப் போகவேண்டும் என அடிமுட்டாள் கூடக் கருதமுடியாது. திரைப்பட அழகியலும் ரசனையும் குறித்த எனது பார்வையை அறிய வேண்டுமானால் பாலுமகேந்திரவுடனான என்னுடைய உரையாடலின் பகுதிகளை ராஜாராம் படித்துப் புரிந்துகொள்ள முயற்சிப்பது நல்லது.

ராஜன்குறை, சுந்தர்காளி போன்றவர்கள் கல்வித்துறைசார் மரபுகளுடன் விமர்சனங்கள் எழுதுபவர்கள். எம்.எஸ்.எஸ்.பாண்டியன், செல்வராஜ் வேலாயுதம், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, தியோடர் பாஸ்கரன், கா.சிவத்தம்பி போன்றவர்களும் இப்படித்தான் எழுதுகிறார்கள். இவர்களைத் தொடர்ந்து நான் இரு மொழிகளிலும் வாசிக்கிறேன். பெரும்பாலுமான இவர்களது ஆங்கில எழுத்துக்கள் தமிழ் சினிமா குறித்த நுண்ணுர்வும் நுண்ணறிவும் அற்ற தமிழ் அல்லாத உலகப் பொதுவாசகர்களுக்கு எனவே எழுதப்படுகிறது. வெகுஜனத் திரைப்படம் என்பது இன்று ஒரு சமூகச் செயல்பாடு, அதனோடு அது சமகால சமூகவரலாறு என்று பார்க்கும் விமர்சனப் பார்வை அதிகரித்து வருகிறது. இச்சூழலில், இவர்களது அணுகுமுறைகள் சமகால சமூகத்தில், அரசியலில், கருத்தியலில், நடைமுறைகளில் ஏதும் இடையீடு செய்வதில்லை. இவர்கள் வெளிப்படையான சார்புநிலைகளையும் மேற்கொள்வதில்லை.

கல்வித்துறைசார் மரபு என்பது சில நெறிமுறைகளுக்குள் எழுத்தைத் திட்டமிடுதலும் நடைமுறையிலிருந்து ஒதுங்கிநிற்றலும் என்பதாகவே உலகெங்கிலும் இருக்கிறது. இதுவன்றி நடைமுறை அரசியல் நடைமறைப் பண்போடும் கருத்தியல் சார்புநிலைகளை முன்வைப்பதாகவும் ஒரு நிலைபாடு உலகின் திரைக்கலைஞர்களிடமும் விமர்சகர்களிடமும் உண்டு, கோதார்த், த்ரூபோ, கிதராஸ் அலியா, செம்பென் உஸ்மான், மிருணாள் சென், நிஹ்லானி, ரித்விக் கடக் போன்ற கலைஞர்களிடம் இதனைக் காணலாம். இவர்களது தொடர்ச்சியாகவே ஒரு விமர்சன மரபும் உலக அளவில் உள்ளது. மந்த்தியா திவாரா, கிளாபர் ரோச்சா, ராஜாதியக்சா போன்றவர்களது இந்த மரபிலிருந்தே நான் இந்திய, தமிழக சினிமாவை அணுகுகிறேன். இத்தகையதொரு மரபு குறித்த அறிவு கோபால் ராஜாராமுக்கு இல்லை என்பது கல்வி துறைசார் ஒதுக்கவிமர்சன மரபுடன் எனது விமர்சனங்களை ஒப்பிடுவதிலிருந்து எனக்குத் தெரிகிறது.

ராஜாராம் தர்க்கத்துக்கான மொத்தக்குத்தகையைத் தானே வைத்துக் கொண்டிருப்பதைப் போலப் பேசுகிறார். தர்க்கம் என்பது உலகு குறித்த ஒருவரது பார்வை, கடந்த காலம், நிகழ்காலம், அதனோடு அவரவரளவில் எதிர்காலம் குறித்த ஒருவரது விமோசனப் பார்வை. ஜோர்ஜ் புஸ், புக்குயேமா, ஹன்டிங்டன், வெங்கட் சாமிநாதன், கோபால் ராஜாராம் ஆகியோரைப் பொறுத்து மார்க்சியம் கல்லறைக்குப் போய்விட்டது. சோசலிசம் மடிந்துவிட்டது. நோம் சாம்ஸ்க்கி, ஹீவர்ட் ஜின், ஜிசாக், அலைன் பதியு, பிரெடரிக் ஜேம்சன், தெரிதா, அந்தோனியோ நெக்ரி, யமுனா ராஜேந்தின் என இவர்களுக்கு சோசலிசம் என்பது அது குறித்த பலவித விமர்சனங்களோடு இன்னும் அடையத்தக்க ஒரு சமூகத்திட்டம். அமெரிக்காவுக்கு மாற்றாக, முதலாளித்துவத்திற்கு மாற்றாக ஒரு உலகு சாத்தியம் என இதனால்தான் வோர்ல்ட் சோசியல் போரம் சார்ந்தவர்கள், ஏன்ட்டி கேபிடலிஸ்ட் மூவ்மென்ட் சார்ந்தவர்கள், கம்யூனிஸ்ட்டுகள், அனார்சிஸ்ட்டுகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சோவியத் யூனியன் வீழ்ந்தது என அறிவிக்கப்பட்ட 1989 முதல் இந்தக் கால்நூற்றாண்டில் எழுதப்பட்ட கோட்பாட்டு எழுத்துக்களில் பெரும்பான்மையானவற்றை இவர்கள்தான் எழுதியிருக்கிறார்கள். இது குறித்த அறிவு கோபால் ராஜாராமுக்கும் வெங்கட் சாமிநாதனுக்கும் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை.

கலைஞன் என்றும் கலைஞனின் சுதந்திரம் என்றும் பொத்தாம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்த காலத்தை நாம் கடந்துவிட்டோம் என்றுதான் நம்பகிறேன். சுயாதீனமாகக் கலைத்தன்மை இருக்கிறது, கலைஞன் இருக்கிறான். உடலியல் ரிதியில் பிளவுபடாதவன் எனும் அளவில் கலைஞன் வலதுசாரியாகவும், இடதுசாரியாகவும், பாசிஸ்ட்டாகவும், மார்க்சிஸ்ட்டாகவும், மதவாதியாகவும், சாதியவாதியாகவும், மத சாதிய சார்புகளைக் கடக்க முயல்பவனாகவும் ஆகவே இருக்கிறான். எஸ்ரா பவுண்ட், சார்ல்ஸ் டிக்கின்ஸ், மயக்காவ்ஸ்க்கி, எமிலி ஜோலா, தாஸ்தயாவ்ஸ்க்கி, ரோக் டால்டன், ஆரியல் டார்ப்மென், ருஸ்டி, நைபால், அருந்ததி ராய், சரமாகோ, லெனி ரீப்சந்தால் என இவர்களை வேறுவகையில் என்னால் புரிந்துகொள்ள முடியாது.

‘மீண்டும்; மீண்டும் கலைஞனின் முன்னுள்ள கேள்வி எதைச் சொல்வது எதை விடுவது என்பது பற்றித்தான். இந்தக் கேள்வி கலைஞனின் முன்னாள் மட்டுமல்ல ஒரு சமூகத்தின் முன்னாலும் உள்ளது. ஒரு விமர்சகனின் அணுகுமுறை ஏன் இது சொல்லப் பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதும் அதன் பின்னால் உள்ள மனநிலையை செய்தியை வெளிக்கொணர்வதும் தான். ஆனால் தேர்ந்த விமர்சகர்கள் தன் மனதில் ஆழப்புதைந்துள்ள முன்முடிவுகள் வெறுப்புகள் விருப்புகள் ஆதாரமற்ற புறக் காரணிகள் இவற்றைத் தாண்டிப் படைப்பினை அணுகவேண்டும்’ என்று எழுதுகிறார் கோபால் ராஜாராம். வெற்றுச் சொற்கள். பாலஸ்தீனப் பிரச்சினை பயங்கரவாதம் என்பது என்னவகையிலான புறநிலை உண்மை? காலனிய மதம் பற்றிப் பேசுகிற ராஜாராமின் கட்டுரையில் இந்துத்துவம் குறித்து எதுவும் இல்லை. இந்திய தமிழகநிலையில் இது என்னவிதமான விருப்பு வெறுப்பற்ற பார்வை? படைப்பும் படைப்பாளியும் குறித்த ஒளிவட்டப் பார்வை எனக்கு இல்லை. விமர்சகனும் ஒரு வாசகனாக படைப்பை அணுகும்போது மற்றொரை படைப்பைத்தான் அவன் முன்வைக்கிறான். ‘ஒரு விமர்சகனின் அணுகுமுறை ஏன் இது சொல்லப் பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதும,; அதன் பின்னால் உள்ள மனநிலையை செய்தியை வெளிக்கொணர்வதும் தான்’ என்கிறார் ராஜாராம். இதில் எனக்கு உடன்பாடில்லை.

படைப்பு என்பது ஒரு மூடுண்ட அமைப்பு, அதற்குள்ளேயே அது எழுப்பும் பிரச்சினைகளுக்கான வேர்குறித்த தேடலை மேற்கொள்வது சாத்தியமில்லை. படைப்பு குறித்து இருவிதமான விமர்சனங்கள்தான் உண்டு. ஏற்புடன் விமர்சிப்பது அல்லது நிராகரிப்புடன் கடந்து போவது. இதன் மூலம் மட்டுமே ஒரு மனிதனாக வாசகன் தனது சுதந்திரத்தை மீட்டுக் கொள்கிறான் என நினைக்கிறேன். நான் விடுதலையை அவாவும் சுதந்திர மனிதன்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </