தமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது 2015
|
பாலுமகேந்திரா விருதை அறிமுகப்படுத்தும் திருமதி. அகிலா பாலுமகேந்திரா |
24-05-2015(ஞாயிறு) நடைபெற்ற தமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது வழங்கும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. மாலன் சொன்னதுபோல, ஒரு மாநாடு போல கூட்டம் இருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு நிகழ்வு முடிந்தது. ஆனாலும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து வந்திருந்த அத்தனை நண்பர்களும் இறுதிவரை நிகழ்வில் பங்கேற்று நிகழ்வை சிறப்புற செய்தார்கள். நிகழ்வில் சிறு சிறு குழப்பங்களும், பிரச்சனைகளும், கருத்து வேறுபாடுகளும் இருந்தது. இருந்தாலும் பாலுமகேந்திரா எனும் ஆளுமைக்கு நாம் செலுத்தும் மரியாதை என்பதை மனதில் நிலைநிறுத்திய நண்பர்கள் அதற்காக பொறுமை காக்கவும் செய்தார்கள். முதல் சுற்றுக்கு 16 குறும்படங்கள்தான் தேர்வு செய்யப்பட்டது. இறுதி நேரத்தி இரண்டு குறும்படங்களை சேர்க்க நினைத்து, நேரமின்மையால் இயலவில்லை. அதற்காக தொடர்புடைய அந்த இரண்டு நண்பர்களும் கோபிக்க வேண்டாம். நிச்சயம் தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டத்தில் திரையிட்டு விவாதிப்போம். தவிர நடுவர்களின் தேர்வு குறித்தும் பலருக்கும் மாறுபட்ட கருத்துகள் இருந்தன. ஒருவரது தேர்வில் எப்போதும் இன்னொருவருக்கு சில மாற்றுக் கருத்துகள் இருக்கும். அதையெல்லாம் தாண்டிதான் நண்பர்கள் தங்கள் ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். சில நண்பர்கள் இடமில்லாமல் திரும்பி செல்ல நேரிட்டது. நண்பர்களே நீங்கள் இல்லாமல் தமிழ் ஸ்டுடியோ இல்லை. உங்கள் ஒவ்வொருவரின் பங்கேற்பும்தான் தமிழ் ஸ்டுடியோவின் முதல் வெற்றி. எனவே நேற்று உங்களுக்கு ஏதேனும் மனக்குறை இருக்குமாயின் என்னிடம் பேசுங்கள். ஆனால் தொடர்ந்து தமிழ் ஸ்டுடியோ நிகழ்விற்கு வாருங்கள்.
பாலுமகேந்திரா பெயரில் விருது வழங்க அனுமதி கொடுத்த அவரது மகன் ஷங்கி மகேந்திராவிற்கும், பாலுமகேந்திரா விருது விழாவிற்கு விருதை அறிமுகம் செய்து வாழ்த்தி சென்ற திருமதி. அகிலா பாலுமகேந்திரா அவர்களுக்கும் தமிழ் ஸ்டுடியோவின் என்றும் உரித்தானது.
|
நிகழ்வில் பங்கேற்ற பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் |
நேற்று நிகழ்வில் திரளாக பங்கேற்று நிகழ்வை மாபெரும் வெற்றியடை செய்த அத்தனை பார்வையாளர் நண்பர்களுக்கும், குறும்பட படைப்பாளிகளுக்கும், குறிப்பாக வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்துக்கொண்ட நண்பர்களுக்கும், நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற லெனின், மாலன், சாரு நிவேதிதா, லீனா மணிமேகலை, கார்த்திக் சுப்பராஜ், தனஞ்செயன் ஆகியோருக்கும், நிகழ்விற்காக அருமையான சிற்றுண்டியை வழங்கிய நண்பர் கவிஞர் குறிஞ்சிப் பிரபாவிற்கும், நிகழ்வை சிறப்பாக நடத்தி முடிக்க உதவி புரிந்த BOFTA கல்லூரி நிர்வாகத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும் குறிப்பாக யோகேந்திரன், சரவணன், முகுந்தன், பூங்கொடி, ஆகியோருக்கும், இரண்டாம் பரிசு கொடுத்து நிகழ்வு சிறக்க இடத்தையும் கொடுத்து என்னுடைய பெரும்பாலான பொருளாதார சுமையை குறித்த தனஞ்செயன் அவர்களுக்கும், வேறு வேலை காரணமாக வந்திருந்தபோதும் இடையில் விருது விழாவிற்கு வந்து சில மணித்துளிகள் செலவழித்த நடிகர் நாசர் அவர்களுக்கும் தமிழ் ஸ்டுடியோவின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன், பார்வையாளர்களே தமிழ் ஸ்டுடியோவின் முதல் வெற்றி. எனவே அவர்களுக்கு எனது பணிவான நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த படச்சுருள் தொடக்க விழாவில் சந்திப்போம். நன்றி.
நேற்றைய தமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விழாவில் பரிசு பெற்றவர்களின் விபரங்கள்:
|
முதல் பரிசு: கங்கானிக்கும் மரணம் - ஹரி |
|
இரண்டாம் பரிசு: ஆயா - மகாவிதூரன் |
|
நடுவர் தேர்வு: ஆர்ட்டிக்கில் 39 - பாலா |
|
சிறப்பு பரிசு: ஞமலி - விஜய் ஆனந்த் |
இனி நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்கள் பேசியதன் சுருக்கம்:
தயாரிப்பாளர் கோ. தனஞ்செயன்:
தமிழ்ஸ்டுடியோ நிறைய நல்ல நல்ல விஷயங்களை முன்னெடுத்து செய்துவருகிறார்கள். முதலில் லெனின் சார் பெயரில் ஒரு விருது. பிறகு பாலு மகேந்திரா சாரின் பெயரில் ஒருவிருது. லெனின் சார் இப்போதுதான் பேசிக்கொண்டிருக்கும்பொழுது சொன்னார், இங்கு (குறும்படங்கள், யதார்த்தப்படங்கள்) காட்டப்படுகிற படங்கள் தான் நிஜ சினிமா, மாற்று சினிமா என்பது கமர்ஷியல் சினிமா. அப்படி நிஜ சினிமாவை பாராட்டுவதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம்.
|
சினிமா நல்லாயிருக்கவேண்டுமெனில் இரண்டு கருத்துக்களும் இருக்க வேண்டும். பாராட்டுகிற கருத்தும் இருக்க வேண்டும், அதை எதிர்த்துப் பேசுகிற கருத்தும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நல்ல சினிமா உருவாக வாய்ப்பிருக்கிறது. நல்ல படைப்பாளிகள் உருவாவார்கள். அதற்காக தமிழ்ஸ்டுடியோ அருண் ஆக்கப்பூர்வமாக பல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார். அவருக்கு என்னுடைய ஆதரவு எப்போதுமே இருக்கும். என்னால் இயன்ற உதவிகளை அவ்வப்போது செய்து வருவேன். பின்னர் நாங்கள் BOFTA ஆரம்பித்த பிறகு ஒரு நாள் அருண் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். பாலு மகேந்திரா பெயரில் ஒரு விருது விழா நடக்கவிருக்கிறது, அதிக அளவிலான பார்வையாளர்கள் வருவார்கள், அதற்காக ஒரு இடம் எங்களுக்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்கையில், அதனை BOFTAவிலேயே செய்யலாம் என்று சொன்னேன். ஆனால், இந்த அளவிற்கு திரளான பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இதன் மூலமாக எந்த அளவிற்கு குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன, எந்த அளவிற்கு தமிழ்ஸ்டுடியோவின் இயக்கச் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்பது தெரிகிறது.
அருணுக்கு எப்படி தமிழ்ஸ்டுடியோ ஒரு கனவோ, அதேபோலத்தான் எங்களுக்கும் BOFTA ஒரு கனவு. Learn from masters என்று வைத்திருக்கிறோம். இங்கிருந்து அவர்கள் வெளியேச் செல்கையில் ஒரு masterஆகவே வெளியேச்செல்ல முடியும். உதாரணத்திற்கு பட்த்தொகுப்பு என்றால் அதற்கு பீ.லெனின், இயக்கம் என்றால் அதற்கு மகேந்திரன் சார், அவருக்கான குழு , திரைக்கதை என்று வருகிற பொழுது அதற்கு பாக்யராஜ், கார்த்திக் சுப்புராஜ் போன்றோர் இருக்கின்றனர். இவர்கள் மூலமாக எதிர்கால சினிமாவிற்கு நல்ல மாணவர்களை உருவாக்குவதுதான் குறிக்கோள். அந்தப்பாதையில் நன்றாக பயணித்து வருகிறோம். அருணிடம் கூட சொன்னேன், இந்தக் குறும்பட்த்தில் தேர்வு செய்யப்படுகிற சிறந்த குறும்பட்த்தினை எடுத்தவர்க்கு இந்த BOFTA வழங்குகிற குறுகிய கால படிப்பில் தன்னையும் இலவசமாக இணைத்துக்கொள்ளலாம். அனைவருக்கும் வாழ்த்துகள்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்:
பெங்களூரிலிருந்து வந்து என் குறும்பட்த்தை திரையிடுவதற்காக அருணைச் சந்தித்தேன். அப்போது அவரும் ஐ.டி. கம்பெனியில் தான் வேலையிலிருந்தார். அப்போது நான் எடுத்த குறும்பட்த்தை நிராகரித்துவிட்டார். அதன் பிறகு நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பல படங்கள் எடுத்த பின்பு அப்போதும் தமிழ்ஸ்டுடியோவில் என் பட்த்தை திரையிட முடியுமா? என்று கேட்டேன். நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கும் தமிழ் ஸ்டுடியோவிற்கும் நிறைய கருத்து வேறுபாடு இருக்கிறது என்று அப்போதும் மறுத்துவிட்டார். ஆக, தமிழ்ஸ்டுடியோவில் என் குறும்படம் எதுவும் இதுவரையிலும் திரையிடப்படவில்லை. அந்தக் குறையொன்றுதான். அத்தோடு இன்று என்னை பாலு மகேந்திரா விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தமைக்கு முதலில் நன்றி.
|
நான் குறும்படங்களிலிருந்துதான் பெரிய திரைக்கு வந்தேன். நாளைய இயக்குனர் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட போதே, இந்நிகழ்வில் கலந்துகொண்டு வெற்றிபெற்றால் உங்கள் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பார்கள் என்று சொல்லி சேர்க்கப்பட்ட ஒன்றுதான். நானும் அதைக்கேட்டுத்தான் அதில் பங்கு பெற்றேன். அங்கு குறும்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும்பொழுதே என்னைப் போன்ற சில படைப்பாளிகளின் எண்ணம் கூட இந்தப்படங்களின் வாயிலாக தயாரிப்பாளரை சம்மதிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணமட்டுமில்லாமல் குறும்படங்களை, சுயாதீனத் திரைப்படங்களின் ஒரு வடிவமாகத்தான் பார்த்தோம். குறும்படங்கள் எடுத்தோம் அதை நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் மட்டும் ஒளிபரப்பினோம் என்பதோடல்லாமல் நிறைய திரை விழாக்களுக்கும் எங்கள் படங்களை அனுப்பினோம். ஆகையால் என்னைச் சந்திக்கிற புதிய குறும்பட இயக்குனர்களிடம் கூட நான் சொல்வதுண்டு. குறும்படங்கள் தன்னிச்சையாக எவ்வித நிர்ப்பந்தங்களுமின்றி எடுக்க முடிந்த வட்ட்த்திற்குள் நிற்கின்றன. அவற்றை தயாரிப்பாளர்களின் சம்மதம் வாங்கவும், பெரிய திரைக்குச் செல்ல பயன்படும் நுழைவுச்சீட்டாக மட்டுமே பயன்படுத்த வேண்டாம். அந்த நோக்கத்திற்காகத்தான் படமெடுப்பார்களேயாயின் அவற்றிற்கு குறும்படங்கள் என்ற பெயரினைத் தவிர்த்து வேறு ஏதேனும் ஒரு பெயரை புதிதாக சூட்டிக்கொள்ளலாம். இந்த மாதிரியான விஷயங்களில் தமிழ் ஸ்டுடியோ அருண் தீர்க்கமான கொள்கைகளையே பின்பற்றி வருகிறார். அவர் முகநூலில் எழுதுபவைகளையும் நிறைய படிக்கிறேன். அதன்மூலம் நானும் கற்றுக்கொண்ட்துண்டு. அதிலும் பாலு மகேந்திரா அவர்களின் பெயரில் ஒரு விருது என்பதையே நான் பெரிய விஷயமாகத்தான் கருதுகிறேன். பாலு மகேந்திராவினது படங்களை முற்றிலும் பார்த்து அதிலிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டாலே ஒரு வக்கிரமற்ற சினிமாவினை உருவாக்க முடியும். ஆனால், அவரது படங்களைப் படிப்பதற்கே வெகுகாலம் ஆகும். நான் முதற்கொண்டு அந்த முயற்சியில் தான் இருக்கிறோம். அவர் பெயரில் ஒரு விருது, அதுவும் குறும்படங்களுக்கு என்பதில் மிகுந்த நல்ல விஷயம்.
நாங்களும் ஸ்டோன்பென்ச்சில் குறும்படங்கள் திரையிடுகிறோம். அதில் நாங்கள் சிறு முயற்சிகளையும் முன்னெடுத்திருக்கிறோம். குறும்படங்கள் எடுப்பவர்களுக்கும் வருவாய் கிடைக்கவேண்டும், அதே வேளையில் அவர்களது படங்களும் எல்லோராலும் பார்க்கப்பட வேண்டும் என்பதுதான். இதற்கு முன்பு கூட பென்ச் டாக்கீஸிலிருந்து நான்கு படங்கள் திரையிட்டோம். இதில் என்ன பிரச்சனையென்றால், குறும்படங்களில் நல்ல களம் (கதை) தேர்ந்தெடுக்கப்படாத்து எங்களுக்கு மிகவும் கஷ்டமாகயிருக்கிறது. வருகிற படங்களுக்கு ஒரு ஆறு படங்கள் தேர்ந்தெடுப்பது கூட கடினமாகயிருக்கிறது. உங்களிடம் நல்ல குறும்படங்கள் இருந்தால் அதனை ஸ்டோன்பென்ச்சிற்கும் அனுப்பலாம். அதனை பல முறைகளில் கொண்டு சேர்த்து அதிலிருந்து வருகிற பணத்தைக் கூட நாங்கள் பிரித்துத்தான் தரப்போகிறோம். உங்கள் குறும்படங்களையும் அனுப்பலாம்.
எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மாலன்:
நான் இந்நிகழ்ச்சிக்கு சற்று முன்னதாகவே வந்துவிட்டேன். காத்திருந்தேன். அப்போது இந்த வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன், அவ்வானின் வண்ணங்கள் மாறுவதைப்பார்த்துக் கொண்டிருந்தேன். பல வண்ணங்களிலும் வானம் தன் நிறத்தை மாற்றிக்கொண்டு கடைசியாக கருமையில் முடிந்த்து. இது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்த்து. பல ஆண்டுகளுக்கு முன்னால் சத்யஜித்ரேயின் ஒரு படம் Distant Thunder இந்தியாவிலிருந்து நம்மை ஆண்டவர்களால் செயற்கையாக பஞ்சம் உருவாக்கப்பட்ட்து. அதைப்பற்றின ஒரு படம். சத்யஜித் ரே யும் கூட கறுப்பு வெள்ளை படங்களிலிருந்து, வண்ணப்படங்களுக்கு வந்த முதல் படமும் அதுதான். அதில் ரே நான் சொன்னது போன்ற இந்த வானத்தைப் பயன்படுத்தியிருப்பார். அதன் காரணம் என்னவென்றால் கதை நிகழும் பருவம் என்ன பருவம், கோடையா, குளிர் காலமா, வசந்தமா என்பதையெல்லாம் வானத்தைப் பார்த்தே அறிந்துகொள்ள இயலும் என்ற சூட்சுமத்தை அவர் அதில் பயன்படுத்தியிருப்பார்.
|
நான் இந்த மாதிரி மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தைப் பார்த்து பல காலங்கள் ஆகிவிட்டன. ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்து, அதை சரியாக காகித்த்தில் எழுத முடியாமல் போகையிலும் ஒரு மாதிரியாக சிந்தனை நெரிகட்டிக்கொண்டு இருக்கையில் முதிர்ச்சி அடையாத, இன்னும் பேப்பருக்கு போக தகுதி அடையாத நிலையில் ஒரு அவஸ்தை ஏற்படும். இந்த மாதிரியான தருணங்களில் நான் என் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தைப்பார்த்துக்கொண்டிருப்பேன். என் வீடு கடற்கரைக்கு அருகில் இருக்கிறது. நல்ல காற்று வரும். ஆனால் வானம் இதுபோல ஏதாவதொரு அரிய தருணத்தில்தான் வண்ணங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும். பெரும்பாலும் மேகங்கள் நகர்கிற சாதாரண நீல வானமாகத்தான் அது இருக்கும். அந்த அனுபவத்தை மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பெருகிற வாய்ப்பைக் கொடுத்த அருணுக்கும் இந்த வானுக்கும் நன்றி.
அதேபோல தயாரிப்பாளர் தனஞ்செயனைப் பற்றியும் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அவரது புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். அந்த புத்தகம் வெளிவருவதற்கு முன்பே அம்ஷன் குமார் எனக்கு போன் செய்து அந்த புத்தகத்தைப் பற்றி வெகுநேரம் பேசினார். ஆனால், அப்பொழுதும் அந்தப் புத்தகம் வாங்கிப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. ஆனால், சமீபத்தில் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தேன். மிகுந்த திறமையான வேலையாக அது செய்யப்பட்டிருந்த்து. அதைப்போல அச்சுவடிவத்திற்குள் சினிமாவினைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மிக்க் குறைவாக தமிழில் நடந்திருக்கிறது. அதை ஒரு தொகுப்பாக முழுதாக படிப்பதென்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அருணோடு நிறைய முறை பேசியிருக்கிறேன். புத்தக கண்காட்சிக்கு முன்பு என்ன புத்தகங்கள் வாங்கலாம் என்றெல்லாம் அவரது அலுவலகத்தில் கூட்டம் போட்டு பேசுவார்கள். அதில் நானும் பங்கெடுத்துக்கொண்டு சில புத்தகங்களை பரிந்துரைத்திருக்கிறேன். அவைகளெல்லாம் என் தனிப்பட்ட சாயல்கள் எதுவுமின்றி அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். உதாரணத்திற்கு பூமணியின் அங்காடியைப் பற்றியும், ஜோடி க்ரூஸின் ஆழி சூழ் உலகு பற்றியும் பேசினேன். ஆனால் அவையெல்லாம் ஒரு குறுகிய அறைக்குள் ஒரு பத்துபேர் முதல் இருபது பேர் வரை அமர்ந்துகொண்டு பேசுகிற வழக்கமாக இருந்த்து. இன்றைக்கு இந்நிகழ்ச்சி ஒரு பொதுக்கூட்டம் போல நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
இந்த குறும்படங்கள் எடுப்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான் இந்த குறும்படங்களின் முக்கியத்துவத்தை நான் எப்படி உணர்கிறேன் என்று சொன்னால், அது இளைஞர்களுக்கு சினிமாவைக் கைக்கெட்டும் தூரத்தில் கொண்டு சேர்த்துவிட்ட்து. அதனை நான் வெகுஜன சினிமாக்களை மட்டும் கருத்தில்கொண்டு சொல்லவில்லை. குறும்படம் என்பதே ஒரு தனிப்பட்ட வகைமை. அதில் எங்களைப் போன்ற சிறுபத்திரிக்கைகளின் வாயிலாக உருவாகி வந்தவர்களுக்கு, எப்படி நாங்கள் சிறுபத்திரிக்கைகளை ஒரு ஊடகமாக நாங்கள் நினைத்தோமோ, எப்படி இலக்கியப் பத்திரிக்கைக்கான சாதனமாக நினைத்தோமோ அந்த மாதிரியான சூழ்நிலையில் குறும்படங்கள் இருக்கிறது. அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம்முடைய இளமைப் பருவத்தில் சமூகத்தின் மீதான நம்முடைய பார்வைகள் கூர்மையாகவும் ஒரு கொதிப்பாகவும் இருக்கிற நேரத்தில் அவர்களுக்கு சரியான ஊடகம் கிடைக்காமல் போனால், இந்த சமூகம் மழுங்கிப் போகும் என்பது அப்பட்டமாக எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு உண்மை.
எங்களுக்கு அந்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எழுபதுகளில் பெங்களூரில் அஸிமா என்றொரு அமைப்பு இருந்த்து. அப்போது நாங்கள் ஃப்லிம் சொசைட்டிக்கெல்லாம் சென்றுதான் இந்த மாதிரியான படங்களையெல்லாம் பார்ப்போம். சத்யஜித் ரேயின் படங்களையெல்லாம் பிரபலப் படுத்த வேண்டும் என்கிற நோக்கில் சில பல குழந்தைத்தனமான செய்கைகளையெல்லாம் கூட செய்திருக்கிறோம். தி நகரில் பேருந்து நிலையத்திற்கு எதிர்புறமாக கிருஷ்ணவேணி என்றொரு திரையரங்க இருக்கிறது. முன்பெல்லாம் ஞாயிறுகளில் பகல் காட்சிகள் திரையிட மாட்டார்கள். நானும் ஜெயபாரதியும் ரேயின் படங்களை எல்லீஸ் ரோட்டிலிருந்து காசு கொடுத்து வாங்கி அந்த திரையரங்கில் திரையிட்டிருக்கிறோம். அதைப் பார்ப்பதற்கு ஒரு பத்து பேர் வருவார்கள். அந்த அரங்கத்தில் அவ்வளவு பேர் தான் இருப்பார்கள். இது மாதிரி தோ பீக்கா ஜமீன் போன்ற படங்களையும் திரையிட்டிருக்கிறோம். பின்னர் தான் ஃப்லிம் சொசைட்டியில் படம் பார்க்க ஆரம்பித்தோம். அதில் படம் பார்த்த்தன் விளைவாக எனக்குள் ஏற்பட்ட விஷயங்களை, பெங்களூரிலிருந்து அஸிமா என்கிற அமைப்பு இதே குறும்படங்களின் கான்செப்டுகளை இதே போல ஐந்து நிமிட படங்கள் ஆறு வெவ்வேறு படங்கள், இவை வெவ்வேறு நபர்கள் தயாரித்த, இயக்கிய, வெவ்வேறு கதையம்சங்கள், அணுகுமுறைகள் கொண்ட படங்களை தொகுத்து முப்பது நிமிட்த்திற்கு ஒன்றாக அதனை திரையிடுவார்கள். அதைப்பார்த்தவுடன் இதே போல இங்கு நாமும் இதனைச் செய்யவேண்டும் என்று நினைத்தேன். 35எம்.எம் என்பது மிகப்பெரும் கமர்ஷியல் மீடியம் என்பதுதான் என் மனதில் நின்றிருந்த விஷயம். 8 எம்.எம்மிற்கு பெரிய மரியாதை இல்லை. ஆக, இரண்டிற்கும் இல்லாமல் 16 எம்.எம்மில் ஒரு படம் எடுத்தோம்.
ஆனால் அதை பட்த்தொகுப்பு செய்வதற்கு அரும்பாடு பட்டோம். ஏனென்றால் அந்த 16 எம்.எம்மினை பட்த்தொகுப்பு செய்வதற்கான வசதிகள் இங்கு இல்லை. பின்னர் நான் தஞ்சாவூருக்கு குடிபெயர வேண்டிய கட்டாயம் வந்த்து. அப்போது திருச்சியிலிருந்த செயிண்ட் ஜோசப் கல்லூரிக்கு இத்தாலியில் இருந்து வந்திருந்தவரை வைத்துக்கொண்டு எங்கள் பட்த்தை திரையிட்டு எந்த இட்த்தில் வெட்ட வேண்டுமோ அந்த இட்த்தை ஒரு பென்சிலால் குறித்துவைத்துக்கொண்டு வெட்டி ஒட்டி படம் உருவாக்கியிருக்கிறோம். குடிசைத்தொழில் போல இந்த முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம்.
அப்போது திரைப்படம் என்பது சாதாரண நடுத்தர வர்க்க இளைஞனுக்கு அவனுடைய செய்தியை அவனுடைய கோபத்தை அவனுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்திக்கொள்வதற்கான சாதகமான சூழ்நிலை இல்லையென்பதுதான் ஒரு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை.
இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் திரைப்படங்கள் மட்டுமல்ல, எந்தவொரு ஊடகமும் இளைஞர்கள் தொட்டுவிடக்கூடிய தொலைவில், அதை ஆக்கிரமித்துக்கொள்ளக்கூடிய தொலைவில் அதை வசப்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரு நெருக்கத்திற்கு வந்திருக்கிறது. இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால், இதை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்கிற சிந்தனை இல்லை என்றுசொன்னால் இந்த வாய்ப்புகள் சிதறடிக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆக, இந்த வாய்ப்புகளை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்ற அந்த உணர்வை அந்த பிரக்ஞையை எது கொடுக்கும் என்று யோசித்துப் பார்த்தீர்களேயானால் அதை உங்களுக்கு இலக்கியம் கொடுக்கும்.
இலக்கியத்தில் அடிப்படையான அம்சங்கள் இரண்டு. முதலாவது ”இருப்பதை மாற்று” என்பது. சமூகத்தை மாற்றுவது , இலக்கியம் எழுதப்படுகிற மொழியை மாற்றுவது , சிந்தனைகளை மாற்றுவது எல்லாவற்றிற்கும் அதுதான் அடிப்படை. அதை குறும்படங்களும் செய்ய முடியும். இதற்கான கூர்மையை நீங்கள் பெற வேண்டுமாயின் உங்களுக்கு நிறைய இலக்கிய வாசிப்பு வேண்டும்.
என்னுடைய நண்பர் பாலுமகேந்திராவிடம் எனக்கு மிகப் பிடித்த அம்சமே, உங்களுக்கெல்லாம் அவரை திரைப்பட இயக்குனராக, மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக தெரியும். ஆனால் எனக்குத் தெரிந்த பாலு மகேந்திரா இலக்கியப் பிரக்ஞை உள்ள வாசகர். அவர் என்னிடம் பேசும்போதெல்லாம் நிறைய புத்தகங்களைக் குறித்துத்தான் பேசியிருக்கிறோம். அவரிடம் பேசும்போது நான் அறிந்துகொண்ட்து யாதெனில், ஒரு கதையை நான் படிப்பதற்கும் பாலு மகேந்திரா படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்களை காண முடிந்த்து. அவர் படிக்கின்ற பொழுதே இந்தக்கதை படமாக்குவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா, என்கிற பார்வையில் தான் அவர் இருப்பார். அவரும் நிறைய அரிய புத்தகங்களை சேகரித்தும் வைத்திருப்பார். ஆக இலக்கியத்திற்கும் , சினிமாவிற்கும் ஒற்றுமை என்னவென்றால் படைப்பு என்பதுதான். அந்த வாய்ப்பை வைத்துக்கொண்டு ஒன்றிலிருந்து மற்றொன்றை மாற்றுவதற்கான உத்திகளையும், உற்சாகத்தையும் பெற வேண்டும். அப்படிப்பெற்று நீங்கள் குறும்படங்கள் செய்யும்பொழுதுதான் உங்கள் குறும்படங்களுக்கும் அர்த்தம் கிடைக்கும்.
இல்லையென்றால் எல்லோரும் கவிதை எழுதுவதைப் போல, எல்லோரும் இலக்கிய சிற்றிதழ் நட்த்துவது போல , எல்லோரும் குறும்படங்கள் எடுத்துக்கொண்டிருப்பார்கள். குறும்படம் என்பது பெரிய எழுச்சியாக, மாற்றமாக உருவாக வேண்டிய ஒன்று, சாதாரண சம்பவமாக முடிந்துவிடக் கூடாது என்பது என் கவலை. அதற்கான முயற்சிகள் உங்களிடமிருந்துதான் வரவேண்டும். அதற்கான தூண்டுகோல்கள் இலக்கிய வாசிப்புதான். அது அமையும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. வாழ்த்துக்கள்.
தொடர்ச்சி அடுத்த இதழிலும் வெளியாகும்…
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamoli |