டி.வி. விளம்பரப் படங்கள்
சினிமா கதை சொல்பவரின் சாதனமாகி விட்டது. கதை சொல்பவர் வியாபாரியா? கலைஞரா? என்பது விசேஷப்படுத்தலுக்குரிய அம்சம் என்ற போதிலும் அது பின் தங்கியதாய் கதை சொல்லல் என்னும் அதன் இயல்பு பிரதானமாகி விட்டிருக்கிறது. தளர்த்தப்பட்ட விதிகளுடன் பார்த்தால் சரித்திர குணம் கொண்ட டாகுமெண்டரிப்படமும் ‘கதை சொல்லல்’தான். ஆனால் டெலிவிஷன் வித்தியாசமான சாதனம்.
அது தனக்கென ஒரு நேரத்தை வரையறுத்துக்கொள்வதில்லை. அது உலகத்துடன் விழித்தெழுந்து உலகத்துடன் கண் அயர்கிறது. குறிப்பிட்ட ஆடுகளமும் அதற்கில்லை. ஒரு பெட்டியாக எங்கெல்லாம் அது ஒளி-ஒலி தருகிறது.
டெலிவிஷன் ஒரு தயாரிப்பாளரின் சாதனம். ரேடியோவும் தயாரிப்பாளரின் சாதனம்தான். அது ஒலி நிகழ்ச்சியாளரின் சாதனம். டி.வி. தயாரிப்பாளர் அதாவது நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒளி-ஒலியாக தரப்படுவதற்கு சாத்தியமான அனைத்தையும் நிகழ்ச்சியாக டெலிவிஷனில் இடம்பெற வைத்து விடுகிறார். கலை, வியாபாரம் ஆகியனவற்றை டெலிவிஷன் கடந்து விட்டது. அதன் ரங்கராட்டின சுழற்சியில் அவைகள் வெறும் நிகழ்ச்சிகளேயன்றி வேறில்லை. ஆனாலும் கூட டி.வி. விளம்பரப்படம் கமர்ஷியல் என்று அழைக்கப்படுகிறது. இப்படங்களைக் காட்டுவதால் டி.வி.க்கு வருவாய் கிட்டுகிறது. தூர்தர்ஷனுக்கு விளம்பரப் படங்களினால் கடந்த வருமானம் ரூ.350கோடி. பண்ட விற்பனையை முழுதாகக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுவதாலும் விளம்பரப் படம் கமர்ஷியல் ஆகிறது. இருந்தும் கூட விளம்பரப் படம் என்னும் பிரிவு டி.வி.யைப் பொறுத்தவரை நிகழ்ச்சிதான். டி.வி. விளம்பரப்படங்களை எடுப்பவர்கள் அதில் தோன்றுபவர்கள் ஆகியோர் விலாசமற்றுப் போகின்றனர். மக்கள் மத்தியில்.
|
விளம்பரப் படம் டி.வி.யின் கவர்ச்சியான நிகழ்ச்சிகளில் முதலிடம் வகிக்கிறது. இது டி.வி.க்கென்றே அவதரித்த ஒன்று. பெரிய திரையில் விளம்பரப்படம் கிட்டத்தட்ட அருவருக்கப்பட்டது. இந்தியாவில் பிலிம்ஸ் டிவிஷன் செய்திப்படங்களைப் பொறுத்துக் கொண்ட மக்களும் விளம்பரப் படங்களை பார்த்த மாத்திரத்திலேயே விளம்பரம் தலைவலியைக் கொடுத்தது. வலி, ஜலதோஷம் ஆகியவற்றின் நிவாரணத்திற்காக தடவப்பட்ட லோஷனின் அளவு. சோப்பின் வெண்மை குணம் பற்றி பிரலாபம் ஆகியன பரிகாசத்தைத் தூண்டின. பிரதான திரைப்படத்தைக் காட்ட விடாது நேரந்தாழ்த்தப்பயன்படும் தடை கற்களென விளம்பரப் படங்கள் உணரப்பட்டன. ஜலக்கன்னியை வைத்து எடுக்கப்பட்ட லீரில் சோப்பு விளம்பரம் போன்ற ஒரு சில, விதிவிலக்குகளாகும்.
டி.வி.யில் நேர்மாறாக விளம்பரப் படங்கள் மிகவும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. சோப், ஹேர் ஆயில், ப்ளேட். போன்றவற்றின் பிரஸ்தாபங்களை நிமிடக்கணக்கில் பார்க்க வேண்டும் என்னும் அத்தியாவசியம் சினிமா விளம்பரங்கள் கொண்டிருப்பதால் அவை பொறுமையை சோதிக்கின்றன. முப்பது வினாடிகளுக்குத் தயாரிக்கப்படும் ஒரு முழு நிகழ்ச்சியாக டி.வி. விளம்பரம் சுவாரஸ்யம் கொள்கிறது. நேரம் பெரிதென மதிக்கும் மக்களின் மனோபாவத்தை டி.வி. விளம்பரம் அலங்காரத்துடன் அங்கீகரிக்கிறது. மேலும் டி.வி.யின் பிற நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடும் பொழுது இது இன்னும் விரைவாக வந்து போகின்றது. ஒவ்வொரு ஷாட்டும் இரண்டு அல்லது மூன்று விநாடிகள் பதினாறு அல்லது பதினெட்டு ப்ரேம்கள் நீளமே கொண்டுள்ளன. அதாவது விநாடிக்கும் குறைவான நேரம்.
வார்த்தைகளின் வழியாக இல்லாமல் காட்சி மூலமாக கருத்தை உணர்த்த வேண்டிய கட்டாயம் இதனால் ஏற்பட்டு விடுகிறது. எனவே மெளனப் படங்களின் குணங்களை டி.வி. விளம்பரங்கள் கொண்டு விடுகின்றன. பார்த்தறிதல் என்பது திரைப்படங்களை விட விளம்பரப் படங்களில் அதிகம் நடக்கிறது. சிறந்த திரைப்படங்களில் பார்த்தறிதல் என்பது அகழ்ந்தெடுப்பது என்னும் அளவிற்கு சென்று விடுகிறது. விளம்பரப் படங்களில் அது நடப்பதில்லை என்ற போதிலும் பார்த்தல் முக்கியப்படுத்தப்படுகிறது. முப்பது வினாடிகளும் வசனமாக இருந்தால் அதை மனதில் கொள்ள முடியாது என்பதும் ஒரு காரணம். காட்சிகள் விரைவாக வந்து செல்வதால் ஒரே தடவையில் எந்த ஒரு விளம்பரப் படத்தையும் முழுதாக மனதில் விளங்கிக் கொள்ள முடியாது. திரும்பத் திரும்ப அவற்றைப் பார்க்க வேண்டும். அவை டி.வி.யில் அடிக்கடி காட்டப்படுவதால் நாளடைவில் மனதில் தானே நன்கு பதிந்து விடுகின்றன. ஆனால் முதல் தடவையிலேயே அவை மனதில் குடிகொள்ளத் தொடங்கி விட வேண்டும்.
இதனால் தான் விளம்பரப் படங்களில் வரும் மாடல்கள் தாங்கள் என்னவாகத் தோன்றுகிறார்களோ அதுவாகவே மனதிற்கு உடனே தென்பட வேண்டும். டாக்டர், சேல்ஸ்மேன், குடும்பத் தலைவி போன்றோராய் வரும் மாடல்கள் அவ்வாறே மெய்யாகவே இருப்பவர்கள் போன்று எடுத்த எடுப்பிலேயே தோன்றிவிடுகிறார்கள்.
விளம்பரப் படங்களின் வெற்றிக்கு மாடல்களின் வேஷப் பொருத்தமும் ஒரு முக்கிய காரணம். திரையில் வரும் நடிகர் தனது ஆளுமையினால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுகிறார். ‘காபுலி வாலா’ வங்கப்படத்தில் முறுக்கற்ற தசைகள் கொண்ட சாபி பிஸ்வாஸ் ஒரு மோட்டாவான ஆப்கானியனைப் போல் தோற்றத்தைக் கொடுக்க முடிந்ததற்குக் காரணம் அவரால் தனது ஆளுமையைக் காட்ட முடிந்தது என்பதால். முப்பது விநாடிகளில் டி.வி. மாடல் ஒரு ஆளுமையை உருவாக்க முடியாது. தனது தோற்றத்தைத்தான் விற்க முடியும். கலாச்சார சமிக்ஞைகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இத்தோற்ற உருவாக்கலை விளம்பரப் படங்கள் செய்து முடிக்கின்றன. சினிமாவிற்கு இச்சித்தாந்தம் புதிதல்ல. ஐஸன்ஸ்டீன் ‘மாதிரி’க் கதாபாத்திரங்களை (Types) இவ்வாறுதான் உருவாக்கினார். (விளம்பரப் படங்களைப்போல் மேலெழுந்த வாரியாக இல்லாது மேதமையுடன் ஒரே ஷாட்டில் ஒரு ஆலைத் தொழிலாளியைக் காட்டி அவனுக்கு ஒரு சரித்திரத்தையே உருவாக்கித் தந்து விடுவார் அவர்.)
பிரபலங்கள் டி.வி. மாடல்களாக வரும் பொழுது சிக்கல் ஏற்படத் துவங்கி விடுகிறது. விளம்பரப் படத்தின் பண்ட்த்தை தெரிந்துகொள்ளு முன்னரே பிரபல ஆசாமியை மக்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் விளம்பரம் பாதிக்கப்படுகிறது. தங்களது அபிமான நட்சத்திரங்களின் (சினிமா, விளையாட்டு போன்ற துறை சார்ந்தவர்கள்) அசைவுகளைப் பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படும் ஆர்வம் விளம்பரத்தின் கூர்முனையை மழுங்கவைக்கிறது. மேலும் பிரபலங்கள் உண்மையிலேயே விளம்பரப்படுத்தப்படுவனவற்றை உபயோகிக்கிறார்களா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. உண்மையில் பூஸ்ட் பானத்தை கபில்தேவ் சக்திக்காக அருந்துகிறாரா? விளம்பரப் படம் இப்பிரச்சனையை நூதனமாகத் தீர்த்து வைக்கிறது. கபில்தேவுடன் ஒரு சிறுவனும் சேர்ந்து கொள்கிறான். சிறுவன் பிரபலமற்றவன். அவன் மூலம் விளம்பரம் புதிய கோணம் கொள்கிறது.
சில சமயங்களில் விளம்பரம் ஒரு குறிப்பிட்ட பிரபலத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்டு புதிய ஆளுமையைத் தோற்றுவிக்கிறது. பெப்ஸி கோலா மைக்கேல் ஜாக்ஸனை இவ்விதம் பயன்படுத்துகிறது. மைக்கேல் ஜாக்ஸனைப் போல் பெப்ஸியும் தவிர்க்க முடியாத சக்தி மிகுந்த ஜீவன் என்ற எண்ணத்தை வலுவடையச் செய்கிறது. குவாலியர் ஷீட்டிங் படோடியின் குடும்பத்தை ஒரு புராணக்கதை போல் காட்டுகிறது. ஆனால் லக்ஸ் சோப் வெளிப்படையாகவே சினிமா நட்சத்திரங்களின் அழகு சாதனம் லக்ஸ் என்று அறிவிக்கிறது.
|
முப்பதுகளில் ஹாலிவுட் நடிகை ஜிஞ்சர் ரோஜர்ஸ் லக்ஸ் விள்ம்பரத்திற்கு பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்நிலைப்பாடு நீடிக்கிறது. சினிமா நடிகை அழகின் பெட்டகம் என்ற மாயை மக்களின் மனதிலிருந்து நீங்கி விட்ட போதிலும் இத்தகைய விளம்பர உத்தி காலாவதி ஆகிவிடவில்லை. ஏனெனில் சினிமா நடிகை என்னும் கனவு மக்களை வசீகரப்படுத்துகிறது. விளம்பரம் எப்போதும் பகட்டான கனவையே பிரதானப்படுத்துகிறது. வறுமை, சோகம், திண்டாட்டம் ஆகியவை விளம்பரப் படங்களின் பாடுபொருளாவதில்லை.
விளம்பரப் படங்களின் கனவு நகர வயப்பட்டதாகவும் இருக்கிறது. கிராமங்களில் பகட்டான கனவுக்குரிய அம்சங்கள் இல்லை என்பதால், 63 கோடி மக்கள் கிராமங்களில் வசித்த போதிலும் இந்திய டி.வி. விளம்பரப் படங்கள் நகரத்தையே முன் நிறுத்துகின்றன. கிராம மக்களை மையம் கொண்ட விளம்பரப் படங்கள் தயாரிக்கப்படுவதில்லை என்ற நியாயமான குற்றச்சாட்டு ஒரு புறம். ஆனால் கிராமமே நகரமயமாதலை விரும்புகிற யதார்த்தம் இன்னொரு புறம் எனவே கிராமத்தினருக்கான விளம்பரப்படங்கள் எத்தகைய பிரத்யேகக் கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது சிந்திக்க வேண்டியது.
இந்திய சினிமா போன்றில்லாது இந்திய டி.வி. விளம்பரப் படங்கள் நகரத்தைக் குறிவைத்ததில் சில நிச்சயமான அனுகூலங்கள் கிடைத்துள்ளன. இந்திய சினிமா கிராமத்தைக் குறி வைத்ததால் புராணக்கதை, குடும்பக் காட்சிகள், நாடக பாணி போன்றவற்றில் புதைந்துவிட்டது. இந்தியத் தன்மைக்கான சினிமா என்ன என்னும் பொறுப்பு மிகப் பெரும் சினிமா மேதைகளிடம் விடப்பட்டது. தேசிய அளவிலான இந்திய குணம் கொண்ட சினிமா ஒரு பெரும் அவதூறாகப் பின்னடைந்து விட்டது. இந்திய சினிமா நகரத்தைப் பழித்து வாழ்கிறது. ”பட்டிக்காடா? பட்டணமா?”, என்னும் போட்டியில் நகரம் வீழ்ச்சியடைவதாகக் கதைக்கப்படுகிறது.
டி.வி. நகரங்களில் பிறவி எடுத்ததால் டி.வி.விளம்பரங்களும் நகர மேல் தட்டு வர்க்கத்தினரை கவர்ந்திழுக்கும் வகையில் தோன்றின. சினிமாவைப் போல டி.வி.க்கு விநியோக பரிபாஷையில் சொல்லப்படும் ஏ.பி.சி செண்டர்கள் இல்லை. இதனால் விளம்பரப் படங்களின் தரம் ஆரம்பத்திலிருந்தே வியக்கவைப்பதாக இருந்தது. எலக்ட்ரானிக் சாதனங்களின் பலமும் டி.வி.க்கு கிடைப்பதால் அவற்றைவிளம்பரப் படங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன, ரோடோஸ் கோபி, க்ரோமாகீ, டிஜிடல் வீடியோ எபெக்டுகள் போன்றவை விளம்பரப் படங்களை அதிசயப் பொருட்களாக மாற்றிவிட்டன. இந்த வளர்ச்சிகளை சினிமாவில் சுலபமாகப் பயன்படுத்த முடியாது.
இந்தியர்கள் டி.வி. விளம்பரம் சினிமா ஆகிய இரண்டினையும் வெவ்வேறான மனோபாவத்துடன் அணுகுகின்றனர். உண்மையில் இங்கே டி.வி.சினிமா இரண்டும் ஒன்று தான். டி.வி.யின் பிரபல நிகழ்ச்சிகள் அனைத்தும் சினிமா சம்பந்தப்பட்டவையாகத்தான் உள்ளன. ஆனால், டி.வி.விளம்பரப் படம் மட்டும் மிகவும் வித்தியாசமாகவும் தரமானதாகவும் விளங்குகிறது. சினிமாவில் இன்னின்னவெல்லாம் இருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகளிடும் மக்கள் விளம்பரப் படங்கள் எத்தகயதாக இருந்தாலும் அவற்றை ரசிக்கும் மனோபாவம் கொண்டிருக்கிறார்கள், விளம்பரப்படங்களில் உயர்ந்த தரத்தையும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். சினிமாவில் தரம் பற்றிய பிரக்ஞை அவர்களை இன்னும் வந்தடையவில்லை. ஆனால் சினிமா பட உத்திகளை விளம்பரப்படங்கள் விதித்துள்ளன.
டி.வி. விளம்பரங்களில் இப்போது மிகைப்படுத்தலும் அளவுடன் பயன்பட்டு வருகிறது. பாண்ட்ஸ் பவுடரை உபயோகிக்கும் பெண் தன்னம்பிக்கை கொண்டவளாகத்தான் காட்டப்படுகிறாள். அவள் அழகு ராணியாக காட்டப்படுவதில்லை., விளம்பரங்கள் மீது நுகர்வோர் கண்காணிப்பும் செயல்படுகிறது. விளம்பரப்படுத்தப்படும் பண்டங்கள் உண்மையிலேயே விளம்பரத்தில் சொல்லப்படும் குணநலன்கள் கொண்டிருக்கின்றனவா என்று சோதிக்கப்படுவது சம்பிரதாய சினிமா தணிக்கை முறையிலிருந்து வேறுபடுகிறது. விளம்பரப்படங்கள் மேலும் ஒருபடி சென்று தங்களைத் தாங்களே பரிகாசம் செய்து கொள்கின்றன. ‘நீங்கள் என்ன ஷேவிங் க்ரீம் உபயோகப் படுத்துகிறீர்கள்?” என்ற கேள்விக்கு ‘நானா?’ என்றவாறு திரும்புகிறார் சவரத்தையே புறக்கணித்துவிட்டு மடிப்புகலையாத துண்டைத்தோளில் போட்டு நடக்கும் சினிமாக் கதாநாயகனைப்பார்த்துப் பழக்கப்பட்ட மக்களுக்கு இதெல்லாம் மிகப்பெரிய புதுமைதான். ஒனிடா விளம்பரத்தில் டெலிவிஷன் பெட்டியே உடைக்கப்படுகிறது. இத்தகைய தரத்திற்கு மக்கள் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டனர்.
நகரத்து மேல் தட்டு வர்க்கத்தினருக்காக டி.வி.யும் டி.வி. விளம்பரங்களும் தோன்றின என்பதோடு மட்டுமின்றி டி.வி. விளம்பரங்களும் நேரடியாக மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன என்பது விளம்பரங்களின் தரத்திற்கு பிறிதொரு காரணமாகும்.
’காப்பியடிப்பதுதான் அடிக்கிறீர்கள்! ஏன் எப்போதும் மோசமான ஹாலிவுட் படங்களையே, காப்பியடிக்கிறீர்கள்? டிசிகா, குரசோவா, அண்டோனியோனி போன்றோரின் படங்களைக் காப்பியடித்தால் என்ன?’ என்று ஆதங்கப்படும் ஆர்ட் பட ரசிகர்கள் விளம்பரப்படங்களுக்கு இருப்பார்களேயானால் அவர்கள் பூரண திருப்தி அடைவார்கள். இந்திய விளம்பர அணுகுமுறை முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. காப்பியடிப்பது ஒரு கலையாக வளர்ந்திருக்கிறது.
ஆனால் பொருத்தமாக பாட பேதம் செய்வதும் நடந்து வருகிறது. உதாரணமாக ’மூட்ஸ் ஆணுறை’, விளம்பரம் காப்பியடிக்கப்பட்ட ஒன்று. மூலத்தில் ஆணுறை கேட்பவர் கடையில் ஒரு பெண் விற்பனையாளரைப் பார்த்து தயங்குகிறார். இந்திய விளம்பரத்தில் ஒரு ஆண், ஆண் விற்பனையாளரிடமே ஆணுறை கேட்கத் தயங்குவதாக காட்டப்பட்டுள்ளது. இத்தகாத கூச்சம் இந்திய குணத்துடன் காட்டப்பட்டுள்ளது.
|
விளம்பரப் படங்கள் பல வயதினராலும் பார்க்கப்படுகின்றன என்ற போதிலும் அதன் பரம ரசிகர்கள் சிறுவர் சிறுமியர்தான். நர்ஸரி ரைம்கள் கொண்டிருந்த இடத்தை விளம்பரப்பட பாடல்கள் பிடித்துக்கொண்டு விட்டன. சிறுவர் சிறுமியர்க்கு விளம்பரப் படங்கள் ஒரு புதிய அதிகாரத்தையும் வழங்கியுள்ளன. சாக்லேட், பிஸ்கட் போன்றவற்றின் பெயர்களைத் தெரிந்து வைத்துக் கொண்டதுடனில்லாது அவர்கள் சமையலுக்கு எந்த எண்ணெய் உபயோகிக்க வேண்டும் வீட்டிற்கு என்ன பெயிண்ட் அடிக்க வேண்டும் என்பதையெல்லாம் கூடத் தெரிந்து கொண்டுள்ளனர். ஆனால் மூட்ஸ் விளம்பரம் எதை விற்கிறது?, விஸ்பர் விளம்பரம் என்ன சொல்கிறது? என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இக்கேள்விகளுக்கு பெரியவர்கள் வழக்கம்போல் பதில் சொல்வதில்லை. செக்ஸ் கல்வி நமது நாட்டில் இல்லை என்பதால் இவற்றை சிறு வயதினர் ரகசியமாகத் தெரிந்து கொள்கின்றனர். ரஸ்ஸல் கூறுவதுபோல் அவற்றை அம்முறையில் அவர்கள் தவறாகவே புரிந்து கொள்கின்றனர்.
டி.வி.விளம்பரப் படம் ஒரு நிகழ்ச்சி என்று கூறினோம். ஆனால் அது கலைதான் என விவாதிப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். அல்டஸ் ஹக்ஸ்லி அதைக்கலை என்றே பாராட்டினார். விளம்பரப் பட இயக்குநர்களும் அதைக்கலையென்றே வாதாடுகிறார்கள். ‘என்னதான் இருந்தாலும் அது விளம்பரப் படம் தானே!’ என்ற பரிகாசத்தை அவர்கள் ஏற்பதில்லை.
டி.வி. விளம்பரப்படம் ஒரு சிக்கலான வெளிப்பாடு சாதனம். அதை இயக்க முதல் தரமான திறமை தேவைப்படுகிறது. நிறைய உழைப்பையும் தரவேண்டியிருக்கிற பணம் நிறையக் கிடைத்த போதிலும் அதுவே போதுமான பரிசு என்று அவர்கள் எண்ணுவதில்லை.
உலகப்புகழ்பெற்ற விளம்பரப்பட இயக்குநர் பென் கிரேடஸ் கூறுகிறார், “திரைப்படத்திற்கே உரித்தான கூறுகளை எண்ணிப் பாருங்கள். சித்திரங்களையும் பொருட்களையும் உயிர்கொள்ள வைத்தல், எடிட்டிங், அசைகிற மாண்டாஷ், ஆப்டிகல் விளைவுகள், ஒலிசேர்க்கைகள் மற்றும் பல, டி.வி. கமர்ஷியல் இவை அனைத்தையும் பயன்படுத்துகிறது. இது தவிர விற்பனை அம்சங்கள், பொது ஜனத் தொடர்பு, பழக்கத்தில் வந்துள்ள வெகுஜன உளவியல் பிரச்சாரம் போன்றவை அனைத்தையும் அது உபயோகிக்கிறது. இவை அனைத்தையும் பார்ப்பவர்கள் விரும்புகிற வகையில் ஒன்றாக இணைத்து அவர்களை மகிழ்வித்து, ஒப்புக்கொள்ள வைத்து பொருட்களின் பால் நாட்டமும் கொள்ளச்செய்கிறார் இயக்குநர், கடைசியாக சொல்லப்பட்ட குணாம்சம் டி.வி.கமர்ஷியலுக்கே உரிய ஒன்று. அதே சமயம் இயக்குநரானவர் டி.வி. நிலையம், சட்டதிட்டங்கள், நெருக்கடியை ஏற்படுத்தும் குழுக்கள், அதற்கு மேலாக தன்னையும் திருப்திப்படுத்த வேண்டும் – அதுவும் வரையறுக்கப்பட்ட வினாடிகளில்.”
இருந்தும் கூட டி.வி. விளம்பரம் கலை என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படவில்லை. தன் வரையில் ஒரு பொருளின் மீது விருப்பு கொள்ளாமலேயே அது பற்றி ஒரு விளம்பரப் படம் எடுக்க முடியும், இயக்குநரால், ஆனால் கலைஞன் என்பவன் தன் சம்பந்தப்பட்ட அனைத்திலும் முற்றான ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறாகாது.
விளம்பரப் படம் கலை என்றோ வியாபாரம் என்றோ முத்திரை குத்தப்பட்டுவிடாது புதிய ஒரு நிகழ்வு என்று ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். அதில் தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது!
நன்றி: சலனம் பிப்ரவரி-மார்ச் 93
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamoli |