இதழ்: 33    வைகாசி (June), 2015
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 16 - டிராட்ஸ்கி மருது - ஒலிப்பதிவும் எழுத்தும் : யுகேந்தர்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது 2015 - தினேஷ்
--------------------------------
பேசாமொழி பதிப்பகத்தின் - ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா - II - தினேஷ்
--------------------------------
ஹனா மெக்மல்பஃப் நேர்காணல் - தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
டி.வி. விளம்பரப் படங்கள் - அம்ஷன்குமார்
--------------------------------
பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் - வருணன்
--------------------------------
வெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல் - அறந்தை மணியன்
--------------------------------
 
   



   

 

 

உயிர் கொடுக்கும் கலை 16 - டிராட்ஸ்கி மருது

- ஒலிப்பதிவும் எழுத்தும் : யுகேந்தர்

"Sequential Art" என்று உலகம் முழுவதும் அறியப்படும் சித்திர தொடர் மரபு (காமிக்ஸ்), ஒரு கலை வடிவமாக பெரிய அங்கீகாரம் பெற்றுள்ளது. அச்சு இயந்திரத்திலிருந்து வந்த காமிக் புத்தகங்கள், இன்று ஐ-பேட், ஆண்ட்ராய்ட் பேசி என அடுத்த கட்டமான மின்னனு மற்றும் சமூக ஊடகத்தில் இடம் பெற ஆரம்பித்து விட்டது. உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர்களை தாண்டி அறியப் படாத இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட கலைஞர்கள் அல்லது அமெச்சுர் ஒவியர்கள் தாமே படம் வரைந்து அதற்கான கதையை எழுதி, படிமங்களின் மூலம் தொடர்பு ஏற்படுத்த இயலும் படைப்புகளை வெளியிடும் சாத்தியக்கூறுகளும் கிடைத்து விட்டது. சமூக ஊடகங்களில் தினமும் படைப்பை வெளியிட்டு தொடர்பு ஏற்படுத்தி வெற்றிப்பெற முடியும் என்ற நிலை இப்போது உண்டு.

காமிக் புத்தகங்களில் கதையை மட்டும் சொல்வதல்லாமல், உலக முழுவதும் நிகழும் பிரச்சனைகளைக் கூறுவதாகவும், மக்களுக்கான பிரச்சனைகளை முன்னெடுத்து செல்வதற்காகவும், சுகாதாரம், தினப்படி வாழ்க்கையில் மனிதனுக்கு அறிவுறுத்த வேண்டியவை போன்றவையும் சொல்ல முடிகிறது. குழந்தைகளுக்கு ஏற்கனவே இருந்த நீதிக்கதைகள் அல்லாமல் பெரியவர்களுக்கான கிராஃபிக் நாவலும் வர துவங்கியது. மனித இனத்தின் பிரச்சினைகளை சொல்வது, நாடு விட்டு நாடு குடியேறும் அகதிகள், மனித இனத்தின் மகிழ்வையும் வேதனையும் சொல்லும் ஒரு தனித்த மொழியாக காமிக் புத்தகங்கள் விளங்குகிறது. இந்த 100 வருடங்களில் இப்படியான வளர்ச்சி திடீர் என ஏற்படவில்லை. கிராஃபிக் நாவல் வடிவத்தில் இதுவரை அசைவு இல்லாமல் இருந்தது, இப்போது அனிமேடட் கிராஃபிக் நாவல் வந்துவிட்டது. ஒரு சட்டகத்திற்கும் இன்னொன்றுக்கும் இருக்கும் தொடர்பு நிலையை, படிக்கும் மனிதனின் மனதில் காட்சியாக நிகழ்கிறது. டார்சான் ஒரு மரத்திலிருந்து இன்னொன்றுக்கு செல்கிறான் என்றால் இரண்டு படங்கள் இருக்கும், ஒரு கிளையிலிருந்து இன்னொன்றுக்கு செல்வது போல் ஒன்று, இன்னொரு மரத்தை அடைவது போல் அடுத்தது, இடையில் நடக்கும் நிகழ்வு காணும் மனிதனின் மனதில் நிகழ்கிறது. இதுவே இக்கலை வடிவத்தின் சக்தி.

சமீபத்தில் நிகழ்ந்த பாலசந்திரனின் மரண நிகழ்வு இதற்கு நல்ல உதாரணம். ஈழத்தில் பிரபாகரனின் மகனை கொன்ற அந்த நிகழ்வு மூன்று நிழற்படங்களாக வெளி வந்தது. சிறுவனை பிடித்து வைத்திருந்தது, அவன் பிஸ்கட் சாப்பிடுவது, பிறகு இறந்து கிடப்பது என மூன்று படங்கள் வெளியானது. மூன்று படங்களையும் ஒன்றாக பார்ப்பதற்கான நிலை ஏற்ப்பட்ட பின்னரே, உலக முழுவதும் இருக்கும் தமிழ் மக்களின் மனதில் இந்த கொலை நிகழ்ந்ததாகவே கருதப்பட்டது. இதுவே இந்த ஊடகத்தின் ஆற்றல். ஒரு நிழற்படமாக சிறுவன் இறந்து கிடப்பதாக இருந்தால் அந்தளவு தாக்கம் ஏற்பட்டு இருக்காது. அல்லது பிஸ்கட் சாப்பிடும் நிழற்படத்தை மட்டும் பார்த்திருந்தாலும் இந்தளவு தாக்கம் ஏற்பட்டு இருக்காது, மூன்று படங்களையும் பார்த்ததாலே அந்த கொலை ஈழத்தில் நிகழ்ந்ததாக அல்லாமல் படங்களைப் பார்த்த ஒவ்வொருவரின் மனதிலும் நிகழ்ந்ததாகவே அறியப்பட்டது. உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களை ஒன்றினைத்தது இந்த மூன்று படங்கள். இந்த இழப்பை தங்களுடைய இழப்பாக கருத இட்டு சென்றது.

தொடர் சித்திரங்கள் மூலம் வெளிப்படுத்தும் கலை என்பது திடீரென இப்போது வந்தது அல்ல. நாகரிகம் வளர்ந்திராத குகை மனிதன் காலத்திலிருந்தே பழக்கத்தில் இருந்திருக்கிறது. தன்னுடைய கை தடையங்களை குகையில் வைத்து, அதை பார்க்கும் போது ஒவ்வொறு முத்திரைக்கும் இடையில் இருக்கும் செயலை நினைப்பது போன்ற ஒரு உணர்வை அன்றே ஏற்படுத்தியது. குடும்ப வாழ்க்கை குறித்தும், குறிப்பாக வேட்டையாடிய விலங்குகளை சித்திரமாக வரைந்த்தோடு அல்லாமல் பல கால்களை கொண்டு மிருகத்தினுடைய அசைவை சித்திரத்தினர், அது தான் காமிக் புத்தகத்தின் ஆரம்ப புள்ளி எனலாம். அதுவே அனிமேஷனுக்கான ஆரம்ப புள்ளியாகவும் சொல்லலாம்.

பண்டைய நாகரிகங்களில் களி மண் முத்திரைகளில் தொடர் சித்திரமாக ஒரு செய்தியை சொல்லும் வழக்கம் உண்டு. எகிப்த்தியர் காலகட்டத்து சுவர் ஓவியங்கள், கிட்டத்தட்ட படிக்கும் விதமாக இருக்கும், கதையின் அடுத்தடுத்து நிகழ்வை சுவரில் தொடர் ஓவியமாக வரைந்திருப்பார்கள். சித்திரம் மூலமாகவே செய்தியை படிக்கும் நிலை அது. அது ஒரு காலகட்டம், இப்போதும் அதை நாம் காணலாம். பார்ப்பதற்கும் படிப்பதற்கும் வசதியாகவே அந்த உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஒலியை குறிக்க அதற்கேற்ற ஓவியங்களை வரைந்துள்ளனர், பறவையின் ஒலியை குறிக்க அந்த பறவையையே வரைந்துள்ளனர். சித்திரம் அல்லது ஓவியம் மூலம் தொடர்பு ஏற்படுத்துவது என்பது ஆரம்ப காலத்திலேயே இருந்தது.

இதனுடைய தொடர்ச்சியாக இன்னொரு பகுதியைப் பார்க்கலாம். கிரேக்க, ரோம புடைப்பியல் சிற்பங்களில் அந்த நாட்டினுடைய முக்கியமான சரித்திர நிகழ்வுகளை தொடர் சித்திரங்களாக வரைந்திருக்கிறார்கள். அதன் பின் அடுத்தடுத்து வளர்ச்சியில் இன்னும் ஒரு பத்து நூற்றாண்டுக்குள் வந்துவிட்டீர்கள் என்றால், சிலுவை போர் கால கட்டங்களிலும், ஐகானிக் காலத்திலும் பல்வேறு திரைச்சீலைகள் மூலம் பெரும் போர்களை தொடர் சித்திரங்களாக சொல்லும் மரபு இருந்தது. அவை இப்போதும் படிக்கும்படியாக அருங்காட்சியங்கத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. மனித இனம் வார்த்தைகள் அல்லாமல் தொடர் சித்திரம் மூலமாக தொடர்பு ஏற்படுத்துவதில் கடந்து வந்த பாதை இது.

மறுமலர்ச்சி காலத்திற்கு சற்று முன்பாக, குட்டன் பர்க் மூலம் அச்சு கலை தோன்றியது. மிகப் பெரிய மாற்றங்களை அச்சு கலை ஏற்படுத்தியது. அதுவரை ஒரே ஒரு கையெழுத்து பிரதியே இருந்து வந்தது, அரசர்கள் அல்லது பெரும் பணக்காரர்கள் வைத்திருக்க கூடியதாகவே அதுவும் இருக்கும். எந்த ஒரு முக்கியமான புத்தகமானாலும், ஒன்று மட்டும் தான் இருக்கும். படங்களுடன் கேலிகிராபிக் மூலம் புத்தகங்கள் செய்யும் நிலையிலிருந்து, அச்சு கலை வந்தவுடன் இந்த நிலை மாறியது. ஒரு புத்தகத்தை நூறாக இருநூறாக ஆயிரமாக பிரதியாக்க முடியும் என்ற நிலை வந்தது. சாமானியனை அடையும் இடத்தை அது ஏற்படுத்திக் கொடுத்தது. அதற்கு முன்பிருந்த வுட்கட்டிங், என்கிரேவிங் என அச்சுக்கலையில் படங்களை போடும் தன்மையில் இருந்து இன்னொரு கட்டத்திற்கு நகர்ந்தது. அப்படி வந்தவுடனே கோயா போன்ற ஒரு சில முக்கிய ஓவியர்கள், ஓவியத்தையே தொடர் சித்திரமாக வரைந்தும் பார்த்தனர். அப்படியான சில முயற்சிகளும் நடந்தது.

படிமங்கள் மூலம் தொடராக சொல்வது என்ற மிக முக்கியமான மாற்றம் 1833இல் ஐரோப்பாவில் Rodolphe Topffer என்பவர் செய்தார். நன்றாக சொல்ல வேண்டுமென்றால் அதிலிருந்தே காமிக் புத்தகம் பிறக்கிறது. அதற்கு முன்பு சீனாவில் இருந்தது, தமிழகத்தில் அதாவது இந்தியாவிலும் இருந்தது. ஆனால் காமிக் புத்தக வடிவத்துடன், சித்திர கலையை ஒரு தனி மரபாக, அச்சு பகுதியோடு சேர்த்து அதை ஒரு மொழி வடிவத்திற்கு கொண்டு வந்தததின் முதல் கட்டம் இதுவே என்று கருத வேண்டும். அதற்கு முன்பு இந்தியாவில் மகாபலிபுரத்திலேயே நான்காம் ஐந்தாம் நூற்றாண்டில் நமக்கான ஆக்கங்கள் இருந்தது. நம்முடைய பேனல்ஸ் (கட்டம்) விவரிப்பானதாக இருக்கிறது. ஒரு தனி கட்டமே விவிரிப்பானதாக இருக்கிறது. தொடர் சித்திரங்கள், பெளத்த காலத்து ஜாதக கதைகள் ஆகியவை ஏற்கனவே புடைப்பியியல் சிற்பங்களில் செய்திருக்கிறார்கள். ஒரு சில நேரங்களில் இராமாயணம், அதன் சில பகுதிகளை தொடர் சித்திரங்களாக செய்ய முயற்சியும் செய்திருக்கிறார்கள்.

அப்படியான இடத்தில் சித்திரங்களோடு தொடர்ந்து பேசுவது என்பது பேனல் வடிவ கட்டத்தில் ஒரு பெரிய முயற்சியாக அச்சு வடிவத்தோடு சேர்த்து 1833'இல் முதலில் நடந்தது. அடுத்து 1848'இல் Gustave Dore இன்னொரு கட்டத்திற்கு அதை எடுத்து சென்றார். கஸ்தவ் தூர் ஒரு முக்கியமான பிரான்சு நாட்டு ஓவியர். தூருக்கு கீழே முப்பது என்க்ரேவர் இருந்தார்கள். புத்தக வடிவம் இன்னொரு உயரத்திற்கு வந்தது. உலகிலே அதிகமாக விற்ற புத்தகம் என்று சொல்வது பைபிளைத்தான். பைபிளிலும் அதிகமாக விற்றது தூரின் என்க்ரேவிங் படங்களுடன் வெளிவந்த பைபிள். அந்த காலக்கட்டத்தில் கஸ்தவ் தூர் ஒரு பெரு முயற்சி எடுத்தார். Rodolphe Topffer மற்றும் Gustave Dore ஆகிய இருவருக்கும் காமிக் கலையில் மிக பெரிய பங்குள்ளது என இன்று அனைவரும் கருதுகின்றனர்.

தூரின் தாக்கம் பலரிடம் உள்ளது. எனது பள்ளி நாட்களில் இந்த படத்தை வரைந்தது தூர் தான் என்று தெரியாமலே எனக்கு அவரின் அறிமுகம் கிடைத்தது. ஐந்தாவது ஆறாவது படிக்கும் போது வீதியில் நடந்து செல்லும் போது ஒரு தாளை பார்த்தேன். அதில் தூரின் படைப்பு இருந்தது. முப்பதாண்டுகளுக்கு பிறகு ஓவியக்கல்லூரி நாட்களில் அதே சித்திரத்தை தூருடைய ஓவியங்களில் பார்க்கும் போது இவர் தூர் என்பது மனதில் நிற்கவில்லை. பிறகு தூருடைய ஓவியங்களை என்பதுகளில் கடந்து வந்த போதே அவரின் அருமை புரிந்தது. அவருடைய மொத்த ஓவியங்களை பார்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது. அவருடைய ஓவியங்களை அலைந்து திரிந்து சேகரித்தேன். தூரின் ஓவியங்களே வான் காவிற்கு ஆரம்பகால தூண்டுகோளாக இருந்துள்ளது என்று அப்போது தான் தெரிந்தது. கிராமம் வரைக்கு சென்றடைந்து விட்டார் தூர், வான்கா கிராமத்திலிருக்கும் போது அவர் பெரும் தாக்கம் ஏற்படுத்தினார். தூரின் என்க்ரேவிங் ஐரோப்பா முழுவதும் நீக்கமற இருக்கிறது. அவருடைய பங்கேற்பு மிக முக்கியமான ஒன்று.

அலேக்ஸான்டர் டுமாஸின் நினைவிடத்தை கட்டியவர் தூர். அவ்விடத்தை நான் பார்த்துள்ளேன். இந்த உந்துதலே ஐரோப்பா சென்றிருந்த போது அவருடைய கல்லறைக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது. தூருக்கு பிறகு உடனே, 1849, 1855, 1857, 1859, 1881 வரை குறிப்பிடத்தக்க மாற்றம் காமிக் புத்தகங்களில், அதாவது தொடர் சித்திர மரபில் நிகழ்ந்தது. பலர் உள்ளே வந்து பணிபுரிந்தார்கள். அந்த கலை வடிவம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தூரின் காலக்கட்டத்தில் தான் புகைப்படங்களின் ஆரம்ப நிலை வந்தது. நடார் பலூனில் பறந்து பாரிஸை படம் எடுக்கிறார். நடார் போலவே பல கலைஞர்கள் ஓவியம் மற்றும் துனை கலைகள் மூலமாக இந்த கலை வடிவத்தை மேம்படுத்த பங்களிப்பு செய்துள்ளனர்.

1896'இல் R.F.Outcault'இன் Yellow Kid, சித்திரை கதை மரபில் கதை சொல்லும் கதாபாத்திரமாக அறிமுகமானது. அதை தொடர்ந்து அமெரிக்காவில் Winsor Mccay'இன் Little Nemo வெளிவந்தது. தூருக்கு பிறகு இந்த மாற்றங்களெல்லாம் வருகிறது. காமிக் புத்தகங்கள் துனை கலைகள் உதவியுடன் இன்னொரு நிலையை எட்டியது. கிராமப்போன் கண்டுபிடிக்கப்படுகிறது. நீங்கள் தொடர்ந்து அடுத்தடுத்த காலக்கட்டத்தை பார்த்தால் உங்களுக்கு நன்றாக தெரியும். அதன் பின் தொடர் சித்திரம் வரைவதை கட்டங்களில் (பேனல்) வரைய ஆரம்பிப்பது என்ற இடம் புத்தக வடிவத்திற்க்குள் வந்தது. இதற்கிடையில் தொழில் புரட்சியுடன், மோட்டாரை அச்சு இயந்திரத்துடன் சேர்ப்பதும் நிகழ்ந்தது. அதிக வேலைக்கொண்டு கடினமாக இருந்த ஒரு முறை, ஒரு நாளுக்குள் ஆயிரம் பிரதிகள் அச்சு அடித்து விடலாம் என்ற நிலை வந்தது.

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில், பல்ப் (PULP) என்று சொல்லி செய்திதாளில் சனி மற்றும் ஞாயிறு அன்று குழந்தைகளுக்கான ஒரு பகுதி வரவும், லிட்டில் நெமோ வெளிவந்தது. அற்புதமாக கலை உணர்வுடன் காமிக் பேனல்ஸ் செய்யக்கூடிய சக்தி இருந்த மெக்கேவினாலே முதல் அனிமேஷன் படமான Gertie the Dinosour' உருவாக்கப்பட்டது. அதே வேலையில் பல்ப், அதாவது செய்தித்தாளை நான்காக மடித்து காமிக் புத்தகம் போல் செய்வது என்பதும் பிறக்கிறது. பல்ப் கதைகள் பெரியளவில் வந்தது. அமெரிக்காவின் பங்கு இதில் மிக பெரியது. அதே காலத்தில் வால்ட் டிஸ்னி அனிமேஷனில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து, 1920க்கு பிறகு டிஸ்னி இன்னொரு இடத்திற்கு செல்கிறது. பல்ப், செய்திதாளை அச்சு அடித்து அதனுடன் படங்களை இணைத்து காமிக் புத்தகம் வடிவமாக கொண்டு வருவது பெரிய இடத்திற்கு வளர்ந்தது.

பல்ப் கதைகளுக்கு பெரிய சாத்தியக்கூறுகளை ஏற்படுத்திக் கொடுத்தது டார்சான். டார்சானிலிருந்து மிக்கி மவுஸ், அதிலிருந்து சூப்பர் மேன். அமெரிக்க காமிக் புத்தக வளர்ச்சி இந்த மூன்றையும் தள்ளிக்கொண்டு முன்னேறியது. அடுத்த கட்டத்தில் Hal Foster, Hogarth போன்ற கலைஞர்கள் வரைய ஆரம்பித்தார்கள். இவர்களுடைய பங்களிப்புகள் அனைத்தும் சேர்ந்து அமெரிக்க காமிக் புத்தகங்கள் இன்னொரு இடத்துக்கு சென்றது.

காமிக் புத்தக பணி செய்வது பெரிய தொழிலாக மாறியது. பல்ப் எழுத்தாளர்கள் மற்றும் காமிக் புத்தக கலைஞர்கள் என இருவரும் இணைக்கிறார்கள். டார்சான் காமிக் புத்தகத்திலிருந்து சினிமாவிற்கும் செல்கிறது. வின்சர் மெக்கே அனிமேஷன் படம் செய்துவிடுகிறார். இவை அனைத்தும் ஒரு கலை வடிவத்துக்குள் வந்துவிடுகிறது. காமிக் புத்தகம், அனிமேஷன் படம், திரைப்படம், ஸ்பெஷல் எஃப்க்ட்ஸ் என இவை அனைத்தும் கலையின் ஒரு நீட்சியே. டிஜிட்டல் தொழில்நுட்பம் இவை அனைத்தையும் சுருக்கி ஒரு கட்டத்திற்க்குள் கொண்டுவந்து விட்டது.

Hal Foster, Justin Gold, Milton Caniff போன்று பெரிய கலைஞர்கள் காமிக் புத்தக உருவாக்கத்தில் இருந்திருக்கிறார்கள். சினிமாவும் வளர்ந்து வந்தது. காமிக் புத்தகத்தின் மூலமாக சினிமா வளர்கிறது, சினிமா மூலமாக காமிக் புத்தக முறை வளர்கிறது. இதை ஒரு மொழியாக்கும் முறை, படிமங்கள் மூலம் பேசுவது என்பதற்கு ஒரு பெரிய வெளி வந்தது. இப்போது வார்த்தையையும் படிமங்களையும் சேர்த்து காமிக் புத்தகங்களில் பயன்படுத்துவதில் ஒரு பெரிய பாண்டித்தியத்தை மனித இனம் கண்டுவிட்டது.

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், காமிக் புத்தகத்திற்கு பங்களித்த கலைஞர்களை இந்த உலகம் பெரிதாக அங்கீகரிக்க வில்லை. 1965 வரை இது கலை இல்லை என்றும் சொல்லிக்கொண்டிருந்தனர். அதன் பின் சில முக்கியமான தொலைநோக்கு பார்வைக்கொண்ட விமர்சகர்கள், இது ஒரு கலை வடிவம் என்றனர். 1965'க்கு பிறகு இது குறித்து கடுமையாக விவாதிக்கப்பட்டது. 1969'இல் ஒரு பெரிய இருக்கம் படிமம் சார்ந்த விஷயங்களுக்குள் வந்தது. அதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கான வடிவமாகவே அனிமேஷன் திரைப்படமும் காமிக் புத்தகமும் இருந்தது. அதை பெரியவர்களுக்குமானதாக ஆக்க அதற்கு முன்பு வரை ஒரு சிறிய முயற்சி மட்டுமே இருந்தது. அனைத்தையும் காட்சிப்பூர்வமாக சொல்லிவிட முடியாது. வன்முறை, செக்ஸ், முன் பகுதி நிர்வானம் ஆகியவற்றை காண்பிக்க முடியாது. அதற்கு முன்பு ஓவியத்தில் பலர் இதை செய்துவிட்டனர், ஆனாலும் பொது ஊடகமான அச்சு ஊடகத்திற்க்குள் இது வரவே இல்லை. அது ஒரு பெரிய இடர்பாடாக இருந்த காலக்கட்டத்தில், ஒரு சில கலைஞர்கள் அதை கலைத்தனர். படங்களுடன் முதிர்ச்சி அடைந்த வாசகர்களுக்கான புத்தகத்திற்கான ஒரு வழியை கொண்டு வந்தார்கள்.

அந்த காலக்கட்டத்தில் Bonnie and Clyde திரைப்படம் வெளிவந்தது. படத்தின் உச்சக்கட்டத்தில் மிக பெரிய வன்முறை காட்சி இருந்தது. அதற்கு பிறகு Wild bunch வெளிவந்தது, இது போன்று பல திரைப்படங்கள் வெளிவந்தது. பல திரைக்கலைஞர்கள் வன்முறையை திரைப்படத்தில் முன்னிலையில் கொண்டு வர ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பு பரிட்சார்ந்த படங்களில் வன்முறை மற்றும் முன் பகுதி நிர்வானம் இருந்தது. 1969'இல் அனைத்தும் உடைகிறது. காமிக் புத்தகத்தில் நிர்வாணம் வருகிறது. மெதுவாக அது நகர்ந்து 1970'இல் காட்சி ரூப வடிவில் நாவலாக காமிக் புத்தகம் வரத் தொடங்கியது. Metal Hurlant என்ற புத்தகம், அதில் Moebius, Enki Bilal, Druillet மற்றும் பல முக்கிய பிரன்ச்சு கலைஞர்கள் 1970'களில் பங்கெடுத்து காமிக் புத்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர். சினிமாவில் அறிவியல் புனைவு வருவதற்கு முன்பே, அதை பரிசோதித்து பார்ப்பது காமிக் புத்தகத்தில் நடந்தது. சினிமாவில் 20 ஆண்டுகள் கழித்து அறிவியல் புனைவில் செய்ததெல்லாம், இந்த கலைஞர்கள் அப்போதே செய்தனர். அதிலிருந்து தான் முதன் முதலில் Geiger, Alien திரைப்படத்திற்கு Ridley Scott'ஐ கண்டு பிடிக்கிறார்.

அடிப்படையிலே பிரான்சு, ஓவியர்களுக்கும் ஓவியம் சார்ந்த விஷயங்களுக்கும் மெக்காவாக கருதப்படுகிறது. பிரன்ச்சு மக்கள் காமிக் புத்தகத்தை தீவிரமாக வாசிப்பவர்கள். அதே போலத்தான் ஜப்பானியர்களும். பிரான்சில் இந்த காலக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தது. ஆனாலும் கலை வடிவத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தவர்கள், தூய்மைவாத கலை, சுத்தமான கலை வடிவம் என்று பெருமை பேசிய அனைவரும், காமிக் புத்தகத்தை கலை வடிவம் என கருதாமல் நிராகரித்துக் கொண்டிருந்தனர். நான் முன்பு கூறிய ஆட்களும், அதிக கல்வி தகுதி மற்றும் திறன் கொண்டவர்களும் சேர்ந்து, தொடர்பு ஏற்படுத்தும் விதமாக இருப்பத்தோடு, இன்னொரு கட்டத்திற்கு காமிக் கலையை கொண்டு சென்றதால், மெதுவாக தூய்மைவாதம் பேசுபவர்களை இது நிராகரித்து விட்டது.

வன்முறை, இரத்தம் சிதறல், நிர்வானம் இதெல்லாம் குழந்தைகளை கெடுக்கிறது என்று சில அமெரிக்க மாநிலங்களில் எதிர்ப்பு வந்தது. Mad பத்திர்க்கையை நடத்திய Gaines இங்கு குறிப்பிட வேண்டியவர். அவருடைய அப்பாத்தான் செய்தித்தாளில் இருந்து காமிக் புத்தகமாக மாற்றுவதை ஆரம்பித்தார். திவாலில் மூழ்கி இருந்த நிறுவனத்தை, EC Comics (Education Comics) என்று இருந்ததை அதே சின்னத்தை வைத்துக்கொண்டு Entertainment Comics என்று மாற்றி கெயின்ஸ் நடத்தினார். அந்த பத்திரிக்கை மிகவும் முக்கியமான ஒன்றாகும். Harvey Comics, Gold Key comics, இப்படியெல்லாம் ஒரு காலக்கட்டத்தில் வந்தது. இவர் வந்தவுடன், EC Comics அமெரிக்காவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு பெரிய எதிர்ப்பும் வந்தது, நீதிமன்றம் வரை செல்லும் நிலை ஏற்ப்பட்டது. வழக்கின் மூலம் காமிக் வரைமுறைகள் கொண்டுவந்தனர், ஒரு வகை தணிக்கை முறையே அது. அனுமதிப்பெற்றே காமிக் புத்தகம் வர வேண்டும் என்று நிலை ஏற்ப்பட்டது. நீதிமன்றத்தில் இது குறித்து அவர் சரியாக பேசினார். படிமம் ஒரு குழந்தையை கெடுக்காது, குழந்தை வளர்க்கப்படும் விதம், சூழல் போன்றைவையே குழந்தையை கெடுக்கும் என்று கெயின்ஸ் வாதிட்டார். படிமம் கற்பிக்க மட்டுமே செய்யும் என்றார். நீதிமன்றத்தில் கடுமையாக இது குறித்து பேசினார். ஆனால் அந்த புத்தகத்தை நிறுத்திவிட்டனர்.

அந்த காமிக் சட்டம் வருவதற்கு முன், EC comics புத்தகத்தை ஆறேழு வருடங்களாக படித்த குழந்தைகளே, ஹாலிவுட்டை பிறகு திருப்பி தூக்கி போட்ட பெரிய கலைஞர்களாகிய George Lucas, Stephen Spielberg, John Landes போன்ற திரைக்கலைஞர்கள் ஆவார்கள். இது பின்பு தான் தெரியவந்தது. இந்த கலைஞர்கள் அனைவரும் சொன்னது என்னவென்றால், நாங்கள் படித்த கதை எங்களுக்கு மறந்து விட்டது, அந்த படிமங்களே எங்களை இவ்வளவு பெரிய கலைஞன் ஆக்கியது என்றனர். பிரான்சிலும் மிக பெரும் மாற்றங்கள் வந்தது. கிராபிக் நாவல், பெரிய புதிய வடிவமாகி, இன்று மெட்ரோ போலிஸ் வருவது போன்ற ஒரு இடத்திற்கு வந்துவிட்டது. மெட்ரோ போலிஸ், இரானிய வாழ்க்கையை காமிக் புத்தக்த்தில் சொல்லி உலகையே திசை திருப்பியது.

டிஜிட்டல் புரட்சிக்கு பின் அது வேறொரு வடிவத்திற்கு சென்றது. ஒரு project, காமிக் புத்தகமாகலாம், விளயாட்டு செயலி ஆகலாம், அனிமேஷன் திரைப்படமாகலாம், அல்லது ஒரு திரைப்படமாகவும் மாறலாம். பேஸ்புக் கண்டுபிடித்தவர் சொல்வது என்னவென்றால், இன்னும் ஐந்து-பத்து ஆண்டுகளில் பேஸ்புக் முழுவதும் காணொலிகள் தான் இருக்கும். ஏற்கனவே எடுத்த காணொலிகள் மட்டுமல்ல, எந்த காணொலியாகவும் இருக்கலாம். வார்த்தையாக பேசாமல் படிமம் மூலம் பேசும் இடத்தை, தொடர்பு படுத்திக்கொள்ளும் இடத்தில், காட்சி மூலமாக பயிற்சிப்பெற்ற, கற்பிக்கப்பெற்ற சமூகமாக, மெதுவாக வளர்ந்து, ஆரம்பத்திலிருந்த அந்த இடத்திற்கு திரும்பி குகை மனிதன் சென்ற இடத்துக்கு நாம் வந்துவிட்டோம். வார்த்தைகள் மற்றும் படிமங்களாக இருந்தது, தொடர்ந்து மாற்றம் அடைந்து அந்த வடிவமும் மாறிவிட்டது. வார்த்தையே இல்லாமல் பரிட்சார்த்த முயற்சியையும் காமிக் புத்தகத்தில் பல ஓவியர்கள் செய்திருக்கிறார்கள்.

சில கலைஞர்கள் காலத்துடன் பரிட்ச்சார்த்த முயற்சிகளை செய்துக்கொண்டுள்ளனர். மேட்ரிக்ஸில் ஒரு விநாடிக்குள் நீங்கள் பயணிப்பது போல், டிஜிட்டல் தொழில்நுட்பம் அப்படியான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தி கொடுத்தது. அது போல காலத்தின் ஒரு சிறிய பகுதிக்குள் பயணம் செய்யும் விதமாக கலைஞர்கள் பரிட்ச்சார்ந்த முயற்சிகள் செய்கின்றனர். பேனலின் உதவியுடன் வார்த்தைகள் மூலம் விவரிப்பது, எழுத்துருக்கள் மூலம் விவரிப்பது, பலூன் உடன், பலூன் இல்லாமல், நிறத்துடன், லே அவுட் உடன், இவையெல்லாமும் காமிக் புத்தகத்தின் சக்தியாகும். சினிமா ஒரே பேனலில் மட்டுமே நடக்கும். சினிமாவில் dissolve, fade in, fade out, wipe in, wipe out என்று இருந்தவற்றை இன்னும் பல்வேறு காட்சி மாற்றும் உத்திகளாக டிஜிட்டல் தொழில்நுட்பம் கொடுத்துள்ளது. ஒட்டுமொத்த நிகழ்வும் ஒரு சட்டகத்துக்குள் நடக்கிறது. ஆனால் அவசியத்திற்கும் தேவைக்கும் உங்கள் கதையை விவரிப்பதற்கு தக்கப்படி காமிக் புத்தகத்தில் பேனலின் அளவை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். கட்டங்களை செங்குத்தாக (vertical) வைக்கலாம், கிடைமட்டமாக (horizonatal) வைக்கலாம், ஒரே பக்கத்தில் நிறைய கட்டங்களுடன் சொல்லலாம், வட்டமாக பேனல் வைக்கலாம், உடைந்தது போன்று வைக்கலாம். எந்த ஒரு வடிவத்திலும் தொடர்பு ஏற்படுத்த இந்த நவீன வடிவம் உதவுகிறது.

இரண்டாம் உலக போருக்கு பின், ஜப்பான் ஒரு மிக பெரிய உயரத்திற்கு சென்றது. குரோசுவாவும் ஒசாமா தெஸுகாவும் இரண்டு முக்கியமான கலைஞர்கள். ஜப்பானிய வாழ்க்கையை உலகிற்கு காண்பித்ததும், கலை வடிவத்தின் மூலம் இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்றதும் இவர்கள் இருவரே. ஜப்பானிய கலாச்சாரத்தில் தெஸுகா மிக முக்கிய பங்காற்றினார். அவர் மூலம் அடுத்த கட்டத்திற்கு வந்தவர்கள் பெரிய உயரத்தை தொட்டுள்ளனர். மாங்கா காமிக் புத்த்கம், ஒரு முக்கிய தொழிலாக மாறியது. அனைத்தையும் காமிக் வடிவத்தில் படிப்பவர்களாக ஜப்பானிய மக்கள் இருக்கிறார்கள். இன்று உலக முழுவதும் அது சென்றுவிட்டது.

காலனிய காலக்கட்டத்தில், பிரித்தானியர்கள் இங்கு வந்தனர். பிரிட்டிஷ், டச்சு, ஸ்பானிஷ் ஆசியாவினுடைய கீழே வரை வந்தனர். சிங்கப்பூர், இந்தியாவை ஒட்டி தாய்லாந்து வரை சென்றனர். ஸ்பானிஷ் காலனிகள் சென்ற இடங்களான பிலிப்பினோ போன்றவற்றில், ஸ்பெயின் நாட்டு ஓவியரின் தாக்கத்துடன் வளர்ந்த பிலிப்பினோ கலைஞர்கள், ஐரோப்பாவிற்கு, அதாவது ஸ்பெய்னுக்கு மேல்படிப்புக்காக சென்றனர். ஸ்பானிஷ் ஆசிரியரின் தாக்கம், கலாச்சாரத்தின் தாக்கம், அங்கிருந்து அமெரிக்காவிற்கு சென்று, ஐரோப்பிய கலைவடிவத்தின் தாக்கத்தால் ஏற்ப்பட்ட இரண்டாவது தலைமுறை ஆசிய கலைஞர்கள், மீண்டும் ஐரோப்பா சென்று, அங்கு தங்களின் படைப்பு வழி செழுமை சேர்த்தனர். இப்போது நாம் படிப்பது மூன்றாம் கட்ட கலைஞர்களின் படைப்பு.

இங்குள்ள கலை வடிவத்தை படித்து அசல் ஸ்பெய்னுக்குள் சென்று, ஸ்பெயினின் தாக்கத்துடன் அங்கிருந்து அமெரிக்காவுக்கு குடியேறியவர்கள், அல்லது பிலிப்பைனிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறியவர்கள், அமெரிக்க காமிக் வடிவத்துக்குள் இருப்பவர்கள், ஒரு தனித்த ஆசிய உணர்வுடன் கூடிய ஒரு அமெரிக்க தன்மையை கொண்டு வருகிறார்கள். கலாச்சாரரீதியில் இரத்தம் ஒன்றாக கலந்தது போல, ஆசியவிலிருந்த சென்ற கலைஞர்களின் தாக்கத்துடன், ஸபானிஷ் உடன் சேர்ந்த பிறகு கிடைக்கு ஓர் உணர்வு, இப்போது இருக்கும் தலைமுறையின் சக்தி வாயந்த கலைஞர்களிடம் இருக்கிறது.

கடந்த 10-15 ஆண்டுகளில் ஐரோப்பாவில் பயணம் செய்த போது, மாங்காவின் மிக அதிகமான தாக்கம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க காமிக் புத்தகங்களில் இருப்பதை உணர்ந்தேன். அமெரிக்க காமிக் புத்தக ஓவியர், திரைப்பட இயக்குநர், Frank Miller'க்கு மாங்க மிகப்பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

வார்த்தைகள் இல்லாமல் காமிக் புத்தகத்தைப் பார்ப்பது, மொழியற்ற மொழிதான் அனிமேஷனும் காமிக் புத்தகமும். எந்த மொழியும் பேச வேண்டியதில்லை, அமைதியாக இருந்தாலே அது தொடர்பு ஏற்ப்படுத்திவிடும். எங்கே வார்த்தை தேவையோ அங்கு பயன்படுத்த வேண்டும், வார்த்தையை பயன்படுத்தவதின் சக்தியை தெளிவாக அறிந்து குறைந்தளவில் பயன்படுத்த வேண்டும். 2000 பக்கம் நாவல் போல் வார்த்தைகள் இல்லாமல் இருக்க வேண்டும். 3000 பக்கங்கள் எழுதுவது ஒரு தவிப்பு என்றே நான் நினைக்கிறேன். உலகளவில் தொடர்பு ஏற்படுத்த முடியாத இடத்திற்கு, மூச்சிரைக்க ஓடுவது போலவே அது உள்ளது. அந்த இடத்தை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என தோன்றுகிறது.

எனக்கு தெரிந்து, தமிழ்நாடு காமிக் புத்தகத்தினுடைய முழு சக்தியை அறிய முற்படாமல் நடந்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், நாம் இங்கு மேடைப் பேச்சு மயக்கத்திலும், இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் எழுத்தாளர்கள் மேடையேறி பேசிக்கொண்டே இருப்பது என்ற ஒரு இடத்துக்கு சென்றதனால் ஏற்படுகிறதோ என்றும் தோன்றுகிறது. படிமங்களே தொடர்பு ஏற்படுத்த வேண்டும், சினிமாவே எல்லோரையும் பிடித்து இருக்கிறது. சினிமாவே எல்லோரிலும் தாக்கம் செலுத்தியிருக்கிறது. ஆனால் அதன் முழு தாத்பரியத்தை மக்களுக்கு எடுத்து சொல்லாமல் ஒரு கயமை தமிழ்நாட்டில் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கிறது. உண்மையாக பேசுவதற்கான இடம் இல்லை. அப்படியான இடத்தில் காமிக் புத்தகம் ஒரு முக்கியமான ஒன்று. அதை கைக்கொள்ள தவறிவிட கூடாது.

தமிழினம் கடந்த 30-35 ஆண்டுகளில் சந்தித்த வலியை சர்வதேச சமூகத்துடன் தொடர்பு ஏற்படுத்த முடியாமல் தவிப்பதற்கு காரணம் தமிழ் அறிந்தவர்களுக்கு நடுவிலே தமிழில் பேசிக்கொண்டிருப்பது மட்டுமே. எப்படி அதை கொண்டு செல்வது, வேற்று மொழியில் எடுத்த செல்ல வேண்டுமென்றால், அந்த மொழியில் நமக்கு பாண்டித்தியம் வேண்டும். அந்த மொழியில் மாற்றம் செய்ய பெரும் சக்தி வேண்டியிருக்கிறது. அதற்கு ஒருவர் வாழ்வை அர்பணித்திருக்க வேண்டும். அவர் மூலமாகவே, அவரை நம்பி செய்ய வேண்டியிருக்கும். படிம வழி அப்படிக் கிடையாது.

கடந்த முப்பதாண்டுகளில், இலங்கை தொடர்பான, அங்கு நடந்த அத்தனை மோசமான நிகழ்வுகளும், இந்தியாவிலிருந்து சென்ற படை அங்கு செய்த அட்டூழியங்கள் என தமிழகத்தில் இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாமல், புகைப்படமாகவோ காணொளியாகவோ உங்களை அடையாமல் இருப்பதற்கான சாத்தியங்கள் எவ்வளவு இருக்கிறதோ அதை கைக்கொண்டது தான் தமிழ்நாட்டில், இந்தியாவில் நடந்த மிகப் பெரிய அரசியல். ஒன்று தெரிந்துக்கொள்ளுங்கள், காட்சிப்பூர்வமான பகுதி உங்களை வந்து அடையக்கூடாது, உங்கள் வலி காட்சியில் தெரிந்துவிடக்கூடாது. அதற்காக பத்திரிக்கைகள் ஊடகங்களை எல்லாம் மடக்கி அதை எல்லாம் வெளிவரவிடாமல் செய்தது தான் மிக முக்கியமான அரசியல்.

எப்போதும் வாயால் பேசிக்கொண்டே இருக்கும் கூட்டம், அல்லது இந்த படிமங்களின் சக்தியை தெரிந்துக்கொண்டு அதை மறைத்து வைப்பதற்கான சாத்தியங்களும் தான் தமிழ்நாட்டில் இன்னும் நடக்கிறது. உங்கள் வேதனையை நீங்கள் படிமங்கள் மூலம் சொல்லவில்லை என்றால், தொடர்பு ஏற்படுத்தவே முடியாது. இவை அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் போது இது தோன்றுகிறது. இனி வரும் இளம் கலைஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் கலந்து பணிபுரிந்து அடுத்து கட்டத்திற்கு முன்னேறி செல்லவில்லை எனில் இதே மனநிலையிலேயே அனைவரும் இருப்பார்கள்.

பல்வேறு பல்கலைக்கழகங்களில் நானே சென்று பேசினேன், சொன்னேன், ஆனாலும் இந்த ஊடகத்தின் மதிப்பையும் அவசியத்தையும் உணர்ந்தது போல் தெரியவில்லை. மாங்கா காமிக் புத்தகத்தை எப்படி செய்வது, அதற்கு எப்படி கதை எழுதுவது, எப்படி செய்தியை சொல்லுவது என சீனா, ஜப்பான் முதல் தாய்லாந்து வரை பல்வேறு பல்கலைக்கழகங்கள் பெருத்த படிப்புகள் வைத்துள்ளது. காமிக் புத்தகம் எப்படி உருவாக்குவது என்பது உலக முழுவதும் ஒரு முக்கியமான பாடம். நமக்கு அது தெரியவில்லை. இனிமேலாவது நாம் இதில் ஈடுபட வேண்டும். காலத்தில் நாம் இதை புரிந்துக்கொள்ள வேண்டும். இணையம் உங்களுக்கு அனைத்தையும் இப்போது சொல்லிக்க்கொடுத்து விடுகிறது.

இந்த ஊடகத்தை அறிந்து, தமிழக ஊடகங்கள் அளவில், அல்லது பாடத்திட்டம் அளவில், இதை முன்னெடுக்கிற, இதன் தெளிவை புரிந்து, உலக முழுவதும் இருக்கும் இதன் விற்பனர்களை இங்கு அழைத்து பேசவைப்பதன் மூலமாகவும் ஒரு மாற்றம் கொண்டு வரலாம். இங்கு இந்தியாவில் 'ComicCon'வந்துவிட்டது, நானும் சில முறை சென்றேன். ஆனால் அது வெகுஜன கலாச்சாரத்திலும், பன்னாட்டு வியாபாரம் பகுதிக்கு மெதுவாக இழுத்து செல்வது போல் இருக்கிறது.

தமிழகத்தில் காமிக்ஸை வெறும் தீபாவளி மலருடன் மட்டுமே இணைத்து வைத்திருந்தோம். அவ்வப்போது சிறு முயற்சிகள் நடந்தது. சக்தி வாய்ந்த அச்சு இயந்திரங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் கெட்டு விடும், எதாவது ஓட்ட வேண்டும் என முயற்சித்ததில் முத்து காமிக்ஸ் 1950'களில் இரும்பு கை மாயாவி போன்றவற்றை அச்சடித்தனர். அதுவே ஒரு பெரிய கல்ட் பின்பற்றுதலாக தமிழ் நாட்டில் வந்தது. 1960'களில் டைம்ஸ் ஆப் இந்தியா பதிப்பித்த வேதாளம், முகமுடி முதல் புத்தகத்தை என் தந்தை எனக்கு வாங்கி கொடுத்தார். நான் தொடர்ந்து அதை படித்திருக்கிறேன், சேகரித்தும் இருக்கிறேன். என்னுடைய சேகரிப்பில் Harvey Comics, Gold Key comics, Classic Illustrated மற்றும் பல்வேறு பிரிவுகளிலான காமிக்ஸ் இருந்தது. நான் ஏழாவது படித்த காலக்கட்டத்தில் அட்டைப்படமில்லாமல் மதுரை வீதியில் பழைய புத்தக கடையில் Mad இதழை முதலில் பார்த்தேன். நான் வாங்கி படிக்கும் காமிக் புத்தகம் போல் அல்லாமல், வித்தியாசமான ஒரு காமிக் புத்தகமாக இருந்தது. அட்டைப்படம் இல்லாதிருந்தது. மதுரை சென்டர்ல் சினிமா வாசலுக்கு முன்பு அதை வாங்கினேன். அது ஒரு பெரிய வெளிப்பாடு.

ஓவியக்கல்லூரி மாணவனாக இருந்த போது எனக்கு முதல் மாங்கா கிடைத்தது. 1972'இல், இப்போது மைலாப்பூர் ரயில் நிலையம் இருக்கும் இடத்தில் இருந்த ஒரு பழைய புத்தக கடை, லஸ் கார்ணர் பக்கத்திலிருந்தது, சரியாக சொல்ல வேண்டும் என்றால் அதற்கு மேல் தான் இளையராஜாவின் குரு தன்ராஜ் மாஸ்டர் இருந்தார். அதற்கு நேராக கீழே இருந்த புத்தக கடையில் முதல் மாங்கா வாங்கினேன்.

Golden Book, Look and learn, Knowledge, Falcon என ஐரோப்பாவில் மிக பெரிய காமிக் வடிவம் இருந்தது. அதில் தான் Frank Hampson வரைந்த Dan Dare:Pilot of the future வந்தது. Don Lawrence செய்த Trigan Empire, அந்த புத்தகங்களில் வந்ததை எடுத்து 20 புத்தகங்களாக 1960'களில் டால்டன் பிரசுரம் கொண்டு வந்தது.

பெரிய மல்டி கலர் ஆப்செட் பிரஸ் வைத்திருந்த நிறுவனங்கள் அதற்கு வேலை அதிகமாக கொடுக்காமல் நிலையாக இருக்ககூடாது என்பதற்காக இப்படியானவற்றை வாங்கி வந்து அதில் சிலவற்றை அச்சு அடித்து தமிழ்நாட்டில் விற்கும் முயற்சி நடந்தது. அதில் ஆஃப்செட்டில் மிக முக்கியமானது வடபழனி ப்ரஸ், ஒரு குழந்தை பத்திரிக்கையை அவர்கள் முயற்சி செய்தார்கள். 20 பதிப்பு மட்டுமே வந்தது, அரிய முயற்சி ஆனால் அதற்கு மிகப்பெரிய ஆதரவில்லாமல் நின்றது. இன்றும் தாள் தாளாக இருக்கும் அந்த புத்தகங்களை பாதுகாத்து வைத்துள்ளேன். கிட்டத்தட்ட 40-45 வருடங்களுக்கு முன். அதற்கு பிறகு அப்படியான முயற்சி இங்கு இல்லை.

அதன் பிறகு ஜேம்ஸ் பாண்ட், இரும்பு கை மாயவி என ஓரளவில் பிறகு கொண்டு வந்தார்கள். நான் முன்பே படித்திருந்ததாலும் அது சமகாலத்து உணர்வை பிரதிபலிக்காததாலும் என் மனதில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அது தாமதமானது. நான் அதை அனுபவிக்கும் போதே அது தாமதமாக வந்தது. 1970'களில் கொனான் தி பார்ப்பேரியன், வெஸ்டர்ன், ராபர்ட் ஆர்வர்டின் புத்தகங்கள் காமிக் புத்தகங்களாக மாறி டார்சானுக்கு பிறகு இவையெல்லாம் வந்தது.

காமிக் புத்த்கத்தை பற்றி சீரியஸாக சொல்வதோ எழுதுவதோ அதை ஒரு வடிவமாக பேச தமிழகத்தில் ஆள்கள் பெரிதாக இல்லை. இப்போது வரை தயக்கம் தான். வெறுமனே இரசிகர் மன்றம் பேச்சுகள் போல் பேசுவது எப்போதும் எனக்கு பிடிக்காது. இன்னும் பல எழுத்தாளர்கள் காமிக் புத்தகங்கள் குறித்து சொல்லும் போது நாஸ்டாலிஜிக்காகவே சொல்லுகிறார்கள். அப்படியிருக்க கூடாது. எழுத்தாளர் அந்த ஊடகத்தை குறித்து பேச வேண்டும். என்ன பரிசோதனை முயற்சி இதில் இருக்கிறது, வரலாற்று பூர்வமாக என்ன நடந்தது, சமுதாயத்தில் என்ன தாக்கம் ஏற்படுத்தியது, அந்த பகுதியை யாரும் பேசுவதில்லை. படித்ததை எங்கேயோ ஒரு இடத்தில் சொரிந்து விட்டுக்கொண்டது போல் மட்டுமே பேசுகின்றனர்.

ஓவியருடைய பங்களிப்பு என்ன, அதற்கு கதை எழுதியது யார், எப்படி அது உருவாகியது, பதிப்பிபதற்கு அந்த புத்தகம் என்ன கஷ்டப்பட்டது, அந்த காலக்கட்டத்தில் எதெல்லாம் அப்படி ஒரு புத்தகத்தை எழுதுவதற்கு தாக்கம் ஏற்படுத்தியது, அந்த காலத்தின் வியாபாரத்தை எது நிர்ணயம் செய்தது, கதை வர காரணம் என்ன, இதெல்லாம் பேசினால் தான் சமூகத்திற்கு பயன்படுமே ஒழிய, வெறுமனே மற்றதை பேசுவது உபயோகமாக இருக்காது. சமீப காலங்களில் காமிக் புத்தகங்கள் படித்தேன் என பலர் பேசுகிறார்களே ஒழிய, இது குறித்தெல்லாம் பேசுவதில்லை. அதனால் எனக்கு இது மனக்குறையாகவே இருக்கிறது. அதனாலே திரும்ப திரும்ப சொல்லுகிறேன். இன்னும் நான்கு பேர் ஆழமாக பாத்து பேச வேண்டும். ஒருவர் மட்டும் பேசுவதால் ஒன்றும் நடக்காது. இன்னும் பலர் வர வேண்டும். இத்தகைய வடிவத்தை ஊன்றி பார்பவர்கள் அதிகமாக வரவேண்டும். அடுத்த தலைமுறை அதை ஒரு ஊடகமாக எடுத்துக் கையாள வேண்டும். அப்படி இல்லையென்றால் காண்பியல்ரீதியாக கற்றுள்ள மனிதர்களுக்கிடையே காண்பியல் கல்வியற்ற பகுதியாக தமிழகம் இருக்கும் என நான் கருதுகிறேன்.

ஒரு சிறிய காமிக் கலைஞரை அறிமுகப்படுத்த, 'ComiKet' என்று ஜப்பானில் வருடத்திற்கு இரண்டு முறை கூடுவது போன்ற அமைப்பு உள்ளது. அங்கு 8 லட்சம் பேர் முன்று நாள்கள் கூடுகிறார்கள். யாரும் யாருடனும் பேசிக்கொள்ளலாம், நீங்க கதை எழுதுகிறீர், நான் படம் வரைக்கிறேன், நானும் நீங்களும் சேர்ந்து ஒரு காமிக் புத்தகம் உருவாக்கிவிடலாம். அல்லது நல்ல கருத்து ஒன்றை மக்களுக்கு சொல்லவேண்டும் என நினைக்கிறீர்கள், நல்ல ஓவியக் கலைஞர் வேண்டும் என்று தேடுகிறீர், அங்கு ஒருவரை பார்த்து தேர்ந்தெடுத்து அவருடன் பேசி உருவாக்கலாம். அப்படியான ஒரு சந்தை நடக்கிறது. அந்த இடத்திற்கு அவர்கள் சென்றுவிட்டனர்.

இப்போது வரை பிரபலமாக இருக்கும் காமிக் புத்தகங்களின் அசல் படிமங்கள், ஓவியர் வரைந்த பக்கங்களின் அசலை சேகரிப்பது கலையின் ஒரு பணி என கருதப்பட்டு, அந்த பக்கங்களை மட்டும் காட்சிப்படுத்தும் அருங்காட்சியங்கள் வந்துள்ளது. இணைய மூலம் அசலை வாங்குவது, காமிக்கான்னில் அசலை விற்பது, ஓவியர்களை சந்திப்பது, அவர்களோடு பேசுவதற்கான சாத்தியங்கள் உள்ளது. சந்தை ஒரு முக்கியமான ஒன்று. ஒரு காமிக் புத்தகம் வந்தால் அதற்கு டீஸர் போடும் அளவுக்கு இப்போது நிலை வந்துள்ளது. அது வெறும் புத்தகம் மட்டுமல்ல, இரஷ்ய புரட்சியை பற்றி சொல்லுகின்றதென்றால், அந்த புரட்சியை அது சினிமாவை போல காண்பிக்கிறது. பிரன்ச்சு புரட்சி நடந்த காலத்தில் நிகழும் ஒரு எளிய குடும்பத்தின் கதையை சொல்வதாக இருந்தால், பிரன்ச்சு புரட்சியின் காலத்தையே அந்த புத்தகம் கண் முன் காண்பிக்கும். ஒரு விஞ்ஞான புதினமாக இருந்தால், அது ஒரு படிக்கும் அனுபவாக இருக்காது, அந்த உலகத்திற்க்குள் நீங்கள் சென்று வருவீர்கள். இப்படியான அனுபவத்தை ஏற்படுத்துவதாலே, இதற்கான தயார் பணி, எவற்றையெல்லாம் ஆராய்ந்தார், எங்கெல்லாம் ஸ்கெட்ச் செய்தார், இந்த பேனல் வரைவதற்கு முன்பு எத்தனை முறை வரைந்து பார்த்தார். இதெல்லாமும் இன்று சேகரிப்பவர்களின் பதிப்பு பகுதியில் உள்ளது. இவற்றை எல்லாம் சேர்த்து புத்தகம் போடுமளவுக்கு வந்துவிட்டது.

இவற்றையெல்லாம் ஏன் இவ்வளவு சொல்கிறேன் என்றால், நான் காமிக் புத்தகத்தை விரும்புகிறேன் என்பதற்காக அல்ல, என்னால் அதை நெருங்க முடிந்ததால், தொடர்ந்து அதை கவனித்ததால், என்னால் அதை பேச முடிகிறது. நான் பேசவில்லை என்றாலும் இதனுடைய முக்கியத்துவம் முக்கியமே தான். கால தாமதமாகுது அல்லது வேறு யாராவது வந்து சொல்ல வேண்டும் என்றில்லாமல், எனக்கு தெரிந்ததால் இதை நான் பதிவு செய்கிறேன்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </