ஈரானிய பெண் திரைப்பட இயக்குனர் ஹனா மெக்மல்பஃப் நேர்காணல்
- தமிழில் - எம். ரிஷான் ஷெரீப் |
ஈரான் திரைப்பட இயக்குனர் ஹனா மெக்மல்பஃப் குறித்து
1988, செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி தெஹ்ரானில் பிறந்த ஹனா மெக்மல்பஃப், தனது தந்தையான மூஸின் மெக்மல்பஃப்பின் “A moment Of Innocence” எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது 7 வயதில் திரையுலகில் பிரவேசித்தார். தொடர்ந்து கையடக்க கேமராவின் மூலம் “The Day My Aunt Was ill” எனும் குறுந்திரைப்படத்தை தனது எட்டு வயதில் எடுத்து சாதனை படைத்தார். 1997 ஆம் ஆண்டு, இக் குறுந் திரைப்படமானது, லொகார்னோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தபோது ஹனாவுக்கு வயது ஒன்பது. அதனைத் தொடர்ந்து இவர் தனது பதினான்காவது வயதில் எடுத்த “Joy of Madness” எனும் ஆவணத் திரைப்படமானது, 2003 ஆம் ஆண்டு வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மூன்று சர்வதேச விருதுகளை வென்றது.
|
ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட “Buddha Collapsed Out Of Shame” எனும் இவரது முழு நீளத் திரைப்படம், இவரது பதினெட்டு வயதில் எடுத்து முடிக்கப்பட்டது. இத் திரைப்படமானது இதுவரை உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுள்ளதோடு, பல விருதுகளையும் வென்று குவித்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து "Green Days" எனும் இன்னுமொரு முழு நீளத் திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இன்னும், தனது மெக்மல்பஃப் குடும்பத் திரைப்படங்களில் பல்வேறு விதங்களில் பணியாற்றி வருகிறார்.
தனது பதினாறாவது வயதில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்துள்ள ஹனா மெக்மல்பஃப், திரைப்படங்களல்லாது, கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதிலும் ஆர்வமுள்ளவர். இவர் 2003 ஆம் ஆண்டு ‘Visa for One Moment’ எனும் தனது முதலாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.
உங்கள் முதல் முழு நீளத் திரைப்படமான 'Buddha Collapsed Out of Shame' திரைப்படம் எங்கே எடுக்கப்பட்டது?
திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், ஆப்கானிஸ்தான், பாமியன் பிரதேசத்தில், 2001 ஆம் ஆண்டு தாலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர் சிலையின் சிதைவுகளிற்கருகே ஒளிப்பதிவு செய்யப்பட்டன.
நடிகர்களை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள்?
எனது திரைப்படத்துக்குத் தேவையான நடிகர்களைத் தெரிவு செய்வதற்காக பாமியன் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளுக்கு நான் சென்றேன். ஆயிரக்கணக்கான சிறுவர்களைப் பார்த்து, நூற்றுக்கணக்கானவர்களை நேர்காணல் செய்து, எனது கதைக்குப் பொருத்தமானவர்களாக இருப்பதாக நான் கண்ட, அவர்களுள் சிலரை நான் தேர்ந்தெடுத்தேன்.
சிறுவர்களை இயக்கியது, நடிக்கச் செய்தது எப்படியிருந்தது?
சிரமமானது, அதேவேளை பெறுமதியானது. அவர்கள் எவருமே சினிமாவுடன் தொடர்புடையவர்களாக இருக்கவில்லை என்பதாலேயே சிரமமானது எனச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களது பிரதேசத்தில் இதற்கு முன்பு எந்தத் திரைப்படமும் படமாக்கப்பட்டிருக்கவில்லை. அங்கு ஒரு உள்ளூர்த் தொலைக்காட்சி நிலையம் கூட இல்லை. ஆகவே அவர்கள் தத்தமது உருவத்தைத் தாங்களே ஒரு பெட்டி வழியாகப் பார்த்துப் பழக வேண்டியிருந்தது. பெறுமதியானது ஏனெனில், அப் பலவிதமான சிறுவர்களும் நல்ல சுறுசுறுப்புடனும், அப்பாவிகளாகவும் இருந்தனர். அவர்களை இயக்கும்போது நான் வழமையை விடவும் வித்தியாசமான முறையில் அணுக வேண்டியிருந்தது. அவர்களுக்கு நடிப்பை, ஒரு விளையாட்டைப் போல பார்க்க வைக்க வேண்டியிருந்தது. இந்த விளையாட்டுத்தனமான அணுகுமுறை திரையில் சில பாகங்களில் யதார்த்தமாகப் பிரதிபலித்திருப்பதை நீங்கள் காணலாம். இந்தத் திரைப்படத்துக்கு ஒரு அர்த்தம் இருக்கின்றதெனில், அது இச் சிறுவர்களின் விளையாட்டுத்தனமான பின்னணிகளினூடே திரைக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.
|
இப்பொழுது நீங்கள் இத் திரைப்படத்தைப் பார்க்கும்போது, இத் திரைப்படத்தை உருவாக்கியதன் நோக்கம் நிறைவேறியிருப்பதாக உணர்கிறீர்களா?
இப்போதைய ஆப்கானிஸ்தானின் ரூபங்களைக் காட்டுவதன் மூலம், நாட்டில் இடம்பெற்ற அண்மைக்கால வன்முறைகளால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைத் தீட்டிக் காட்டவே நான் முயற்சித்திருக்கிறேன். ஆகவே இதன் மூலம் வளர்ந்தவர்களது நடத்தைகள், இளைய தலைமுறையினரிடத்தில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதைக் காணலாம். சிறுவர்கள்தான் எதிர்காலத்தில் வளர்ந்தவர்களாகின்றனர். அவர்கள் வன்முறைகளுக்கு பழக்கப்பட்டவர்களாக மாறினால், உலகின் எதிர்காலமே பாரிய அபாயத்துக்குள் சிக்கிக் கொள்ளும்.
'நான் வளர்ந்த பிறகு, உன்னைக் கொல்வேன்' என திரைப்படத்திலுள்ள ஒரு பதின்ம வயதுப் பையன் சொல்கிறான். ஏனெனில், அவன் குழந்தையாக இருக்கும்போதே பல வன்முறைகளுக்கு மத்தியில் வளர வேண்டியிருக்கிறது. ஆகவே வன்முறை, அவனது அன்றாட வாழ்க்கையில் வழமையானதொன்றாகி விடுகிறது. அந்தச் சிறுவன் தனது உண்மையான பாடங்களை அவனது பெற்றோரதும், அவனைச் சூழவுள்ள வளர்ந்தவர்களதும் நடத்தைகளைக் கிரகிப்பதன் மூலமும், பிரதிபண்ணுவதன் மூலமுமே கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றான் என நான் எண்ணுகிறேன். எடுத்துக் காட்டாக, பாமியன் எனும் அவர்களது நகரத்தில், சில வருடங்களுக்கு முன்பு மிகக் கொடூரமான கூட்டுப் படுகொலைகள் நடைபெற்ற போது பல ஆண்களதும், சிறுவர்களதும் தலைகள், அவர்களது மனைவியரினதும், தாய்மாரினதும் கண் முன்னாலேயே துண்டிக்கப்பட்டதைச் சொல்லலாம்.
இதில் முரண்நகை என்னவெனில், யார் ஆப்கானிஸ்தானை மீட்டெடுக்கவென வருகிறார்களோ அவர்கள் முதலில் அதனை அழிக்கிறார்கள். பின்னர் அதனை மீளக் கட்டியமைக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. தொடர்ந்து ஆப்கானிஸ்தானை மீட்டெடுக்க அடுத்த படை வருகிறது. அவர்களைத் துரத்தி விட்டு, இவர்களும் அதே அழிவுகளையும், வன்முறைகளையும் செய்கிறார்கள். இதுவே மாறி மாறித் தொடர்ந்து நடக்கிறது.
முதலில் ரஷ்ய பொது உடமைவாதிகள். பின்னர் தாலிபான்கள். இப்பொழுது அமெரிக்கப் படைகள். அதாவது முதலில் பொதுவுடமைவாதக் கொள்கையுடையவர்கள். அடுத்ததாக இஸ்லாமியர்கள். இறுதியாக நாஸ்திகர்கள் அல்லது கிறிஸ்துவர்கள். ஆனால் இவர்கள் எல்லோரிடமும் ஒன்று மட்டும் பொதுவானதாக இருக்கிறது. அது 'வன்முறை'. இந்த வன்முறையானது, மூன்று ஒன்றுக்கொன்று வித்தியாசமான குழுக்களாலும், இத் தேசத்திலுள்ள மக்களின் கலாசாரத்தில் மருந்தேற்றுவதைப் போல மேலும் மேலும் ஏற்றப்பட்டு, மிக ஆழமாக உட்செலுத்தப்பட்டு வலிதாக்கப்பட்டுள்ளதைத்தான் இச் சிறுவர்களது விளையாட்டின் மூலம் நீங்கள் காணலாம்.
ஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் வன்முறைகளைக் கற்றுக் கொண்டுள்ள அமெரிக்கச் சிறுவர்கள் போலன்றி, இந் நாட்டிலுள்ள சிறுவர்கள், தமது உறவுகளுக்கு தம் கண் முன்னாலேயே இழைக்கப்படும் வன்முறைகளை நேரடியாகப் பார்த்துக் கற்றுக் கொள்கின்றனர். இச் சிறுவர்கள் தமது தந்தையர், தம் வீட்டு முற்றத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு இறந்ததைப் பார்த்து வளர்கின்றவர்கள்.
உங்கள் திரைப்படத்தின் பெயர் 'Buddha Collapsed Out of Shame - புத்தர் வெட்கத்தினால் உடைந்து போனார்'. ஆனால் உண்மையில் புத்தர் சிலைகளை தாலிபான்தானே அழித்தது?
ஆமாம். அவர்கள்தான் அழித்தார்கள் என்று நீங்கள் சொல்லலாம். அதைத் திரைப்படத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் நான் காட்டியிருப்பதையும் நீங்கள் காணலாம். ஆனால் நான் இந்தத் தலைப்பை எனது தந்தையான மொஹ்ஸீன் மெக்மல்பஃப்பின் உருவகஞ் சார்ந்த கூற்றிலிருந்து பெற்றுக் கொண்டேன். இதன் அர்த்தமானது, அப்பாவி மக்களுக்கு இழைக்கப்படும் எல்லா விதமான வன்முறைகளுக்கும், கொடூரங்களுக்கும் சாட்சியாக நின்று கொண்டிருக்கும் ஒரு சிலை கூட, வெட்கப்பட்டு அதனால் உடைந்து போகக் கூடும்' என்பதாகும்.
தலைப்பினுள்ளே பொதிந்திருக்கும் அர்த்தங்களினால் மாத்திரமன்றி, திரைக்கதையானது புத்தரின் சிலையிருந்த இடத்தினைச் சுற்றியே நகர்வதால், இத் திரைப்படத்துக்கு இத் தலைப்பு பலவிதங்களிலும் பொருத்தமாக இருக்குமென நான் கருதினேன்.
இத் திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஆரம்பிக்கும் முன்பே, இத் திரைப்படத்தின் பூரணப்படுத்தப்பட்ட கதை உங்கள் எண்ணத்தில் இருந்ததா? அல்லது ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கும்போது தோன்றியதா?
ஆரம்பத்தில் ஒரு புனைவுத் தன்மையோடான கதைக் கரு உள்ளத்தில் இருந்தது. அதாவது ஒரு ஆறு வயதுச் சிறுமியின் ஒரு நாள் பயணம். அயல்வீட்டுச் சிறுவனது கல்விச் செயற்பாடுகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு பள்ளிக்கூடம் செல்ல விரும்பும் ஒரு சிறுமியைப் பற்றிய கதை. அவளிடம் எழுத நோட்டுப் புத்தகம் இல்லாததால், அவளது வீட்டுக் கோழியின் முட்டைகளை விற்று நோட்டுப் புத்தகம் வாங்குகிறாள். பென்சில் வாங்கப் பணம் இல்லையாதலால், பென்சிலுக்குப் பதிலாக எழுதுவதற்கு தாயின் லிப்ஸ்டிக் குச்சியை எடுத்துக் கொண்டு அவள் வழியில் காண நேரும் பள்ளிக்கூடங்கள் எல்லாவற்றிலும் ஏறி இறங்குகிறாள். அனுமதி மறுக்கப்படுகிறாள். நிராகரிக்கப்படுகிறாள். இதுதான் எனக்குத் தோன்றிய எண்ணக் கரு.
இளவேனிற்காலத்தில் படத்தின் முதற்பாகம் எடுக்கப்பட்டு முடிந்ததும், படத்தின் செப்பனிடல் வேலைகளின் போது பார்த்தால், கதாபாத்திரங்களினிடையே ஏதோவொன்று பூரணமாக இல்லை என எனக்குத் தோன்றியது. ஆகவே நான் திரைக்கதை எழுத்தாளரான எனது தாயிடம் சென்று, இருவருமாக இணைந்து தொடர்ச்சியாக அத் தளத்திலேயே இயங்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும், செப்பனிடல் வேலைகளையும் ஆரம்பித்தோம். எனவே திரைப்படமானது, ஒரே நாளில் நடக்கும் கதையைக் கொண்டிருந்தாலும் கூட, வசந்த காலம், கோடைகாலம், இலையுதிர்காலம் என மூன்று வித்தியாசமான காலகட்டங்களில் படமாக்கப்பட்டது.
திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் எவ்வாறு முழுமையடைந்தன?
அவை திரைக்கதையை எழுதும்போது ஒரு பகுதியும், ஒளிப்பதிவு செய்யும்போது ஒரு பகுதியும் என முழுமையடைந்தன. படப்பிடிப்பினை ஆரம்பித்தபோது, என்னைச் சுற்றி நான் பார்த்த, கேட்ட புது விடயங்களின் மீதும், நாம் இருந்த சூழலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் விளையாட்டின் மீதும் கூர்ந்த கவனத்தைச் செலுத்தி, புதிய தகவல்களையும், அவர்களது சில விளையாட்டுக்களையும் எனது திரைக்கதையில் சேர்த்தேன்.
எடுத்துக் காட்டாகச் சொல்வதென்றால், நான் சந்தித்த ஒருவரைப் பற்றிச் சொல்லவேண்டும். அவர் ரஷ்யப்படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போது பொதுவுடைமைவாதியாக இருந்தார். பின்னர் தலிபான்களின் ஆக்கிரமிப்பின் போது முல்லாவாக இருந்தவர், இப்பொழுது அமெரிக்கப்படைகளோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த இரு தசாப்தங்களாக அதிகாரத்தின் மூலமாக அவர் மக்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவராக இருக்கிறார். இந்த நபரது கதாபாத்திரத்தையே இத் திரைப்படத்தில் ஒரு சிறுவன் நடித்திருக்கிறான். அதாவது, வெவ்வேறு படைகளின் பிரதிநிதியாக நின்று, வெவ்வேறு பெயர்களுடன், எப்பொழுதுமே பொதுமக்களைக் கொன்று கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் கதாபாத்திரம்.
இன்னுமொரு உதாரணமாக, மற்றச் சிறுவனைச் சொல்லலாம். அவனுக்கு எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல், அரிச்சுவடியைப் படித்துக் கொண்டிருப்பான். அவன் சித்திரவதை செய்யப்படும் போதும் கூட அவன், அகர வரிசையைத் தொடர்ந்தும் பயின்று கொண்டிருப்பான். அவன் முழுமையாக அதனைக் கற்றுக் கொள்ளவுமில்லை. எந்த முன்னேற்றமும் தெரியவுமில்லை. ஆனாலும் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருப்பான். அவனது திணறடிக்கும் அனுபவங்களுக்குப் பின்னாலும் சில ஆழமான அர்த்தங்களிருக்கும். மற்றவர்களைப் போலல்லாமல், அவன் ஒருபோதும் அதிகாரமுள்ளவனாக இல்லை அல்லது அதிகாரத்திலிருப்பவர்களுடன் நெருக்கமானவனாக இல்லை. ஆனாலும் அவன் அதிகாரத்தினால் தகர்க்கப்படுகிறான், வன்முறைக்குள்ளாக்கப்படுகிறான்.
இது சாதாரண அனுபவமொன்றல்ல. இதைத்தான் உலகம் முழுவதிலுமுள்ள பல இனத்தவர்களும் அனுபவிக்கின்றனர். எப்பொழுதும் அவன் அச்சுருத்தப்படுகிறான், சித்திரவதைக்குள்ளாக்கப்படுகிறான், கொல்லப்படுகிறான். ஆனாலும் முயற்சியைக் கைவிடவில்லை. அவ்வாறே எந்த வெற்றியையும் அவன் அடையவுமில்லை. சிலவேளைகளில், நீங்கள் வாழ்வைத் தொடர வேண்டுமானால் யதார்த்தத்தில் செத்துப் போகவேண்டுமென அவன் கற்றுக் கொள்கிறான். இது சாதாரணமான ஒரு அனுபவமல்ல. திரைப்படத்தின் இறுதியில் அவன், அச் சிறுமியிடம் 'செத்துப்போ. அப்போதுதான் அவர்கள் உன்னைத் தனியே விடுவார்கள்' என்று சொல்கிறான். சிறுமி அவ் விளையாட்டில் செத்துப் போகச் சம்மதிக்கிறாள். அதன்பிறகுதான் அவர்கள் சிக்கிக் கொண்டிருந்த அந்த வன்முறை மிக்க கொடிய சூழலிலிருந்து அவர்களால் வெளியேற முடிகிறது.
இத் திரைப்படத்தின் கதாநாயகன் யார்?
எவருமில்லை. அந்தச் சிறுமி கூட இல்லை. ஏனெனில் அவள் இறுதியில் தனது இலக்கினை எட்டவில்லை. திரைப்படத்தின் இறுதியில், சிறுவர்களால் மிரட்டப்படும்போது அவள் தற்காலிகமாக செத்துப் போவதற்குச் சம்மதிக்கிறாள் அல்லது புத்தர் சிலையைப் போலவே உடைந்து போகிறாள். அவளுக்கு வேறு வழியில்லை. ஒரு நகைச்சுவையான நொடிக் கதையைக் கற்றுக் கொள்வதற்காக அவள் நீண்ட தூரம், பல பள்ளிக் கூடங்களுக்குப் பயணிக்கிறாள். ஆனால் எவருமே அவளுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக நிஜ வாழ்க்கையிலுள்ள ஏனைய விடயங்களை அவள் அந்தப் பயணத்தின் போது கற்றுக் கொள்கிறாள்.
இத் திரைப்படத்தில் கதாநாயகர்கள் இல்லாததும், நிஜ வாழ்க்கை மனிதர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை விரிவாகவும் எளிமையாகவும் காட்டுவதும் எனக்குச் சற்று சிரமமாகவே இருந்தது. இத் திரைப்படத்திலுள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நிஜ வாழ்க்கையின் வெவ்வேறான அடுக்குகளைத்தான் சித்தரிக்கின்றன. அது நாம் இத் திரைப்படத்தை எக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பதிலும் தங்கியிருக்கிறது.
உதாரணமாக, திரைப்படத்தில் அருகருகே வளரும் சிறுவர்களையும், சிறுமிகளையும் பாருங்கள். சிறுவர்கள் அவர்களது தந்தையர் யுத்தங்களில் செய்வதைப் போன்ற ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபடுகையில், சிறுமிகள் அவர்களது அன்னையரைப் போல முகத்தை அலங்கரிப்பதிலும், ஒப்பனைகளைச் செய்வதிலும் தம்மை மறந்து விடுகின்றனர். இவையெல்லாம் ஒரு நாட்டில் நடக்கும். இத் திரைப்படத்தில் சித்தரித்திருப்பது போல எங்கே மெல்லிய குச்சிகளால் செய்யப்பட்ட துப்பாக்கிகள் வெடிக்கின்றனவோ, பள்ளிக்கூடங்கள் லிப்ஸ்டிக்கின் காரணமாகத் தாக்கப்படுகின்றனவோ, உங்கள் கற்பனையிலுள்ள பட்டம் போன்ற சிறு விளையாட்டுப் பொருளினால் ஒரு நகரமே அழிக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் நடக்கும்.
உங்கள் முந்தைய இரண்டு திரைப்படங்கள் பற்றியும், இதுவரையில் சினிமாவுடனான உங்கள் அனுபவங்கள் பற்றியும் கூறுங்கள்.
எனது இரண்டாவது அனுபவம் விளையாட்டுத்தனமானது எனச் சொல்லலாம். 'At five in the afternoon' எனும் திரைப்படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது அதன் பின்னணியை ஒரு டிஜிட்டல் கேமராவினால் தனியாகப் படம்பிடித்துக் கொண்டிருந்தேன். முதலில், ஆப்கானிஸ்தானில் அத் திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது படத்தின் இயக்குனரும் எனது சகோதரியுமான சமீரா எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகளைப் படம்பிடிக்கவே எண்ணியிருந்தேன். ஆனால் அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்னர் காபூலில் பெண்கள் எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகள் சம்பந்தமான ஆவணப்படமாக இறுதியில் அது பூர்த்தியானது. இது எனது இரண்டாவது அனுபவம்.
முதலாவது திரைப்படம் 'The Day My Aunt Was ill' ஒரு குறும்படம். எனது அத்தை உடல்நலம் குன்றி வீட்டில் தங்கியிருந்த ஒரு நாளில், ஒரு சாதாரண கை கேமராவினால் எனது வீட்டில் வைத்து என்னால் எடுக்கப்பட்டது. அப்போது எனக்கு எட்டு வயது.
இவ்வாறாக எனது முதலாவது குறுந் திரைப்படத்துக்கும், எனது முதலாவது முழு நீளத் திரைப்படமான 'Buddha collapsed out of shame' இற்கும் இடையில் ஒன்பது வருட கால இடைவெளியிருக்கிறது. இந்த ஒன்பது வருட காலப்பகுதியிலும் தொடர்ச்சியாக வேறு சில திரைப்படங்களில் புகைப்படக் கலைஞராக, உதவி இயக்குனராகப் பணியாற்றிய அனுபவங்கள் எனக்கு உண்டு.
ஏன் ஈரானைத் தவிர்த்து ஆப்கானிஸ்தானை களமாகத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
எந்தக் கதை என்னை ஈர்க்கிறதோ, எந்த இடத்தில் படம்பிடிக்க அனுமதி கிடைக்கிறதோ அங்கே நான் திரைப்படங்கள் எடுப்பேன். ஈரானைக் களமாகக் கொண்ட பல கதைகள் என்னிடமிருக்கின்றன. ஒருநாள், ஈரானில் படம்பிடிக்க எனக்கு அனுமதி கிடைக்கும்போது நான் அவற்றை எடுப்பேன். இப்போது அது அவ்வளவு இலகுவானதாக இல்லை.
வருங்கால ஆப்கானிஸ்தான் எவ்வாறிருக்குமென நினைக்கிறீர்கள்?
தலிபான்கள் போய்விட்டார்களெனினும், அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் இன்னும் இக் கலாசாரத்தில் எஞ்சியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தொடர்ச்சியான தாக்குதல்கள் நாட்டை விடவும் அதன் கலாசாரங்களையே பெரிதும் அழித்திருக்கின்றன. இந் நாட்டில் யுத்தங்களினூடாக சிறுவர்களின் ஆன்மாக்களைச் சூறையாடிக் கொண்ட வன்முறையானது, புதுவித மனப்பாங்கோடு எதிர்காலத்தில் மீண்டும் முளைக்கும்.
'ஒரு சிறந்த அரசியல்வாதி எதிர்காலத்தைப் பகுத்தாய்பவரல்ல; அவர் இன்றைய நாளை நன்கு உணர்ந்து கொள்பவர்' என அஹ்மத் ஷா மஷூத் அடிக்கடி கூறுவார். ஆப்கானிஸ்தான் எனும் தேசத்தின் இன்றைய நாட்களின் பிரச்சினைகளை இந்த உலகமானது இன்னும் புரிந்துகொள்ளவில்லை என ஆப்கானிஸ்தானில் நானிருக்கும் போதெல்லாம் உணர்வேன். இந் நிலைமை எவ்வாறு ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும்?
ஏன் இந்த இளம்பெண் ஹனா திரைத்துறைக்கு வந்தார்? தனது ஏனைய குடும்ப அங்கத்தவர்களைப் போல திரைப்படங்களை உருவாக்கும் தேவை அவருக்கிருக்கிறதா அல்லது அவருக்கென்று சுயமாக திரைப்படங்களின் மூலமாகச் சொல்ல ஏதாவது இருக்கிறதா?
ஈரானில் தற்போதைய கட்டுப்பாடுகளின் கீழ், சித்தாந்தங்களை, கொள்கைகளைப் பொறுத்துக் கொண்டு அரசியல் மற்றும் சமூக அழுத்தங்களிடையே வாழும் ஒரு பதினெட்டு வயதுப் பெண்ணாக எனக்குச் சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால் அவற்றில் அனேகமானவற்றை நான் சிறுகதைகளின் வடிவத்திலேயே எழுதி வருகிறேன். எழுதுவதானது, என்னோடு ஒத்துணர்வு உள்ளவர்களது வலியைக் குறைக்காவிடினும், குறைந்தபட்சம் எனது மன அழுத்தங்களுக்கு அது வடிகாலாக இருக்கிறது. ஈரானில் உருவாக்கப்படாத இந்தத் திரைப்படத்தினூடாக நான் கூறவிழைவது, ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும் உள்ள பொதுவான பிரச்சினைகளைத்தான். இரண்டு சமூகங்களுமே ஒரே மாதிரியான கலாசார, அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்பவை.
திரைப்படங்களின் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?
சிறு வயதிலிருந்தே. அதாவது எட்டு வயதாக இருக்கும்போது எனலாம். முதலில் எனக்கு ஓவியராக ஆக ஆசையிருந்தது. ஒரு முன்னணி பெண் ஓவியக் கலைஞரோடு சினேகமானேன். நீண்ட நாட்களாக, ஒரு ஓவியத்தை வரைவதற்கு அவர் சந்திக்க நேரும் தனிமையைக் கண்ட போது, 'நான் ஓவியம் வரைவதை விரும்புகிறேன் ஆனால் அது கொண்டு வரும் தனிமையை எனக்குப் பிடிக்கவில்லை' என எனக்கு நானே கூறிக் கொண்டேன்.
சினிமா மிகவும் சுறுசுறுப்பானது. எனது தந்தை அதில் ஈடுபடும்போது, விதவிதமான வல்லமைகளின் அதிர்வலைகள் அவரது திரைப்படங்களிலிருந்து வெளிப்படும்போது, அவற்றினூடாக நானும் கவரப்பட்டேன். சௌண்ட், கேமரா, ஆக்ஷன் ஆகிய சொற்கள் எப்போதுமே எனக்கு வியப்பளித்தன. இம் மூன்று சொற்களுக்கும் ஒரு அதிசயமான சக்தியிருக்கிறது. அதனால்தான் எட்டு வயதிலேயே, எனது இரண்டாம் வகுப்பில் வைத்து நான் பள்ளிக்கூடத்தை விட்டும் விலகினேன். அப்போது எனது சகோதரி சமீராவும் பாடசாலையை பாதியிலேயே விட்டு விலகி சில மாதங்களே ஆகியிருந்தது. தொடர்ந்து நானும், சகோதரியும் எனது தந்தையிடமே பாடங்களைக் கற்றோம். அத்தோடு, எனது குடும்பத் திரைப்பட உருவாக்கப் பணிகளில் புகைப்படக் கலைஞர், காட்சித் தொடர்ச்சி இயக்குனர், உதவி இயக்குனர் போன்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். மற்றும் படப்பிடிப்பின் பின்னணிகளை ஒளிப்பதிவு செய்து ஆவணப்படங்களாகத் தொகுத்திருக்கிறேன்.
நீங்கள் பள்ளிக் கூடத்தை விட்டு விலகியதை உங்கள் தந்தை எவ்வாறு ஏற்றுக் கொண்டார்?
அறிவியலுக்குப் பதிலாக, சித்தாந்தங்களை, கொள்கைகளைக் கற்பிக்கும் ஈரானிலுள்ள பாடசாலைக் கட்டமைப்பின் மீது அவருக்கு ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கையிருக்கவில்லை. 'மேலதிகக் கல்விச் செயற்பாடுகளுக்கு உன்னால் சுயமாகத் தயார்படுத்திக் கொள்ள முடியுமாக இருந்தால், எனது கல்விக் கூடத்துக்கு உன்னை வரவேற்கிறேன்' என்றார். அந்தக் கணத்திலிருந்து நான் கடுமையாகப் பாடுபட வேண்டியிருந்தது. ஏனெனில் எனது தந்தையின் கல்விக் கூடத்தில் நான் சினிமாவைக் கற்றுக் கொள்ளும் அதேவேளை, எனது பாடசாலையில் எனது வகுப்பினர் கற்றுக் கொள்ளும் அனைத்துப் பாடங்களையும் நானும் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.
இவ்வாறான கற்கைச் செயற்பாடுகள் எவ்வாறான பிரச்சினைகளை உண்டாக்கும்?
எல்லாவற்றுக்கும் முன்பதாக எனது வகுப்பினரின் பொறாமையை நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் ஒரு வருட காலமாக வாசிக்கும் புத்தகங்களை நான் ஒரு மாதத்திலேயே வாசித்து முடிப்பதைக் கண்ட போதும், பரீட்சைகளை எதிர்கொண்டு அவற்றில் எனது சாதனைகளை நிலைநாட்டிய போதும் அவர்கள் என்மீது பொறாமை கொண்டதைக் காண நேர்ந்தது.
சில வருடங்களுக்குப் பிறகு, ஒரு தடவை மரபொழுக்கக் கற்கை நெறிகளுக்காக நான் திரும்பவும் பாடசாலைக்குச் செல்ல வேண்டி நேர்ந்தது. அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருப்பேன். அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது செயற்படுத்தும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளும், புராதனக் கல்வி வகைகளும், அரசியலும், சித்தாந்தங்களும் மேற்பூசப்பட்ட எல்லாப் பாடங்களும் என்னை மேலும் ஏமாற்றமடையச் செய்தன. ஒருநாள் கண்ணாடியின் முன்பு என்னைப் பார்த்தபோது முதிய பெண்ணொருத்தியைப் போல உணர்ந்தேன். மீண்டும் பாடசாலையை விட்டும் ஓடி வந்துவிட்டேன்.
சினிமா எனப்படுவது மிகக் கடுமையான பணியா அல்லது இலகுவான ஒன்றா? என்ன நினைக்கிறீர்கள்?
நான் முன்னே செல்லச் செல்ல, இப் பணியின் சிரமங்கள் மேலும் தெளிவாகின்றன. சிறு வயதில் 'தணிக்கை' எனும் சொல்லை அடிக்கடி கேட்டிருக்கிறேன். ஆனால் அதனை இன்று நேரில் பார்க்கிறேன். எனது இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை ஈரான், கலாசார அமைச்சிடம் பல மாதங்களாகக் கிடப்பில் கிடந்தது. ஆனால் அதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவேயில்லை.
யதார்த்தத்தில் இன்று, சினிமா எங்களை நாடுகடத்தியிருக்கிறது. எனது தந்தை தணிக்கையிலிருந்து மீண்டு வருவதற்காக நாடோடிகளைப் போல வாழ்ந்து வருகிறார். எனது இந்தத் திரைப்படம் ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டு, தஜிகிஸ்தானில் செதுக்கப்பட்டு, ஜேர்மனியிலுள்ள ஆய்வகமொன்றில் பூரணப்படுத்தப்பட்டது.
உங்கள் சகோதரி சமீராவை எந்தளவு கூர்ந்து கவனிக்கிறீர்கள்? அவர் உங்களிடமிருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறார்?
நான் அவரது வெளித் தோற்றத்தை மட்டுமே காண முடியும். எனது உள் உணர்வுகளாலேயே என்னை நான் உணர்கிறேன். ஆகவே என்னால் எனது உள் உணர்வுகளையும், அவரது வெளித்தோற்றத்தையும் ஒப்பிட முடியவில்லை. ஆனால் அவர் ஒரு படைத் தலைவி போன்றவர். எனக்கு மாத்திரமல்ல. அவரது தோழிகளுக்கும் அவர் அவ்வாறுதான். ஈரானில் மாத்திரமல்லாது, அவர் இளந் தலைமுறையினருக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்.
ஒரு புறத்தில் பார்த்தால் அவர் பித்துப் பிடித்தவரைப் போல வெறியோடு படங்களை உருவாக்குகிறார். ஒரு வலிய காரணம் இருந்தால் மாத்திரமே நீங்கள் பீட்ஸா சாப்பிடக் கூடுமென அவர் நினைக்கிறார். முந்தைய ஈரான் தலைவர் தோற்றதற்கும், அவர் போதுமான அளவு மதம்பிடித்தவராக இருக்காததுதான் காரணமென அவர் நம்புகிறார். ஒரு உன்மத்த நிலையானது வரலாற்றை முன்னோக்கிக் கொண்டு செல்லும் எனவும் மதிநுட்பம் அதனைக் கட்டுப்படுத்தும் எனவும் சமீரா நம்புகிறார்.
நான் அவரளவு பித்துப் பிடித்த நிலையிலில்லை. எனக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது எனது முதல் திரைப்படத்தை எடுத்து முடித்து, அது லொகார்னோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. சமீராவினது முதல் திரைப்படம் கூட அதற்குப் பின்னர்தான் திரையிடப்பட்டது. இந்த ஒப்பீடுகள் எந்தத் தீர்வையும் அளிக்காது. நிச்சயமாக நாங்கள் இருவருமே ஒருநாள் சினிமாவை விட்டு வெளியேறி, மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழ நேரும். மற்றவர்களைப் போல வாழத் தெரியாத ஒருவரை விடவும், திரைப்படங்களை எடுக்கத் தெரிந்த ஒரு திரைப்பட இயக்குனர் எனப்படுபவர் சாமான்ய ஒருவரல்ல என நான் படிப்படியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamoli |