பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும்...
பகுதி III
சென்ற மாத இதழின் தொடர்ச்சி...
யுத்தம் என்பது ஒரு மாபெரும் அரசியல். யுத்தம் ஒரு மாபெரும் வியாபாரம். இந்த இரண்டில் எது சரி எனக் கேட்டால் இரண்டுமே என்று சொல்வது தான் சரி. இருபதாம் நூற்றாண்டின் முற்பாதிக்குள்ளாக நடந்தேறிய இரண்டு உலக மகா யுத்தங்களும், அமெரிக்காவிற்கு பல வகையில் சாதகமானது. இழப்புகள் இல்லாமல் இல்லை. ஆனால் லாபங்களோடு ஒப்பிட்டால் அவை பெரிதே அல்ல. நிகழ்ந்த இரண்டு உலக யுத்தங்களிலுமே அமெரிக்கா இடையிலேதான் சேர்ந்து கொண்டது. ஆனால் முதலாளித்துவ அமெரிக்காவின் வர்த்தகமோ போரைச் சாதகமாக்கி ஐரோப்பிய சந்தையை துவக்கம் முதலே வளைத்துப் போட ஆரம்பித்திருந்தன. முதல் உலக யுத்த காலத்தில் இந்த வர்த்தகத்தை திறம்பட நடத்தி பெருலாபமீட்டுவதற்கு, அப்போதைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் அகன்ற வழிகளையும் வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்தார். அப்போதே யுத்தம் என்பது ஒரு வியாபார வாய்ப்பு என்பதை அமெரிக்கா முழுமையாகப் புரிந்து கொண்டது. லாபம் ஈட்டிக் கொண்டே எப்படி உலக நாடுகளின் பார்வையில் நல்ல பிள்ளை பெயரெடுப்பது எனும் ராஜதந்திரத்தை அது அப்போதே கற்றுக் கொண்டு விட்டது.
|
அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலம் பதவி வகித்தவரான ஃப்ராங்ளின் .டி. ரூஸ்வெல்ட் (பதவிக் காலம் 1933-1945) அமெரிக்க வல்லரசுக் கனவினை இன்னும் அழுத்தமாக எழுதத் துவங்கினார். இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளையில் ஹாலிவுட் அதிகமான தேசப் பற்று திரைப்படங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்திருந்ததை கடந்த இதழிலேயே சுருக்கமாக பார்த்தோம். அமெரிக்க அரசியலும் அமெரிக்க திரைப்படங்களும் பிரிக்க முடியாதவை. வெறும் அரசியல்வாதிகளின் அரசியல் என்று நாம் கருதினால் அது தவறே. அதன் அர்த்தமும் வீச்சும் பன்மடங்கு பெரிதானது; பல அடுக்குகளை உடையது. அமெரிகாவின் கம்யூனிச எதிர்ப்பு என்பது அதன் இருத்தலியலோடு நேரடி தொடர்புடையது. ஒரு வேளை மன்னர் ஆட்சிப் பிடியில் சொல்லிக் கொள்ளும் படியாக எந்த முன்னேற்றமும் இல்லாமலிருந்த ருஷ்யா என்றொரு தேசம் மிக சொற்ப வருடங்களுக்குள் அசுர வளர்ச்சி பெற்று தனது ‘உலகின் ஒரே வல்லரசு’ கனவுக் கோட்டையை தகர்க்கமலிருந்தால், அத்தகைய ருஷ்ய வளர்ச்சிக்கு கம்யூனிச சித்தாந்தமே ஆதார சுருதியாக இல்லாமல் இருந்திருந்தால் அமெரிக்கா நிச்சயம் பொதுவுடமை சித்தாந்தத்தை இவ்வளவு வெறியுடன் எதிர்த்திருக்காது. இந்த இரண்டு வல்லரசுகளுக்கும் இடையே முதலிடத்திற்கு நடந்த தீராத போட்டியானது உலகையே ஐம்பதுகளில் அச்சுறுத்திக் கொண்டிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. எந்த ஒரு தேசமும் சர்வதேச அளவில்- நேரடியாக ஒரு கடைக் குடிமகனுக்கு பிரயோசனமில்லாத அல்லது முதன்மையான உடனடி பலனை தராத பட்சத்தில்- தான் செய்ய நினைக்கும் எந்த ஒரு காரியத்திற்கும் மக்களின் முழுமனதான ஆதரவு நிச்சயம் தேவை. அதற்கு சர்வதேச அளவில் தாம் செய்யும் எந்த ஒரு முன்னெடுப்புக்குப் பின்னாலும் இருப்பது மக்கள் மீதான அக்கறையே என்று நம்பச் செய்ய வேண்டும். இன்றுவரை அமெரிக்காவின் சர்வதேச செய்கைகளின் அடிநாதமாக இருப்பது வர்த்தகமும், லாபமீட்டும் தீரா வேட்கை மட்டுமே. ஒரு முதலாலித்துவ சமூகத்தில் வேறெதை நாம் எதிர்பார்க்க முடியும்?
அமெரிக்காவின் ராணுவத் தலைமையகம் பென்டகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இன்று வரை உலக நாடுகள் அமெரிக்காவை எதிர்க்கத் துணியாததன் மிக முக்கிய காரணங்கள் அதன் பணபலமும், ராணுவ பலமுமே. ஹாலிவுட்டிற்கு Pentagon’s Mouthpiece என்று ஒரு பட்டப் பெயரே உண்டு. அந்த அளவிற்கு அமெரிக்க திரையுலகம் வலதுசாரி அமெரிக்க அரசியல் சாய்வு உடையது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது மிக அதிகமாக பிரச்சாரத் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன என்பது நாம அறியாததல்ல. பல முன்னணி ஹாலிவுட் இயக்குனர்களும் ஒளிப்பதிவாளர்களும் தங்களது பங்களிப்பை திறம்பட அளித்திருக்கின்றனர். உலகப் போரின் போது நாற்பதுகளின் முற்பாதியில் வெளியான இது போன்ற கொள்கைப் பரப்புத் திரை ஆக்கங்களை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதில் எண்ணிகையில் முதலிடம் வகிப்பது அமெரிக்க திரைப்படங்களே என்பது தெளிவாகும். அதிலும் தமக்கு எதிரான நாடுகளை எதிரிகளாகச் சித்தரிப்பதில் கைதேர்ந்தது அமெரிக்க சினிமா. வரலாற்று ரீதியாக அமெரிக்காவின் உலகாளும் வேட்கையும் அதற்குக் குறுக்கே வந்த ரஷ்யாவின் மீதான வெறுப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. குறிப்பாக நாற்பதுகளின் இறுதியில் கம்யூனிச சித்தாந்தத்தின் முழுவீச்சையும் வீரியத்தையும் கண்கூடாக மாவோவின் தலைமையிலான சீனப் புரட்சியிலும், ஐம்பதுகளின் துவக்கத்தில் நடந்த கொரியப் போரிலும் கண்டது அமெரிக்கா. இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் அரசியல் அதிகார மட்டத்தில் நிலவிய நம்பிக்கையின்மையும், சந்தேகமும் முன்னுவமை இல்லாதது. கம்யூனிஸ்டுகள் மிக மோசமானவர்கள், ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள், அமெரிக்கர்களின் அமைதியையும் நிம்மதியையும் கெடுக்க வந்த்வர்கள் எனும் அபிப்ராயங்கள் மீண்டும் மீண்டும் மக்களிடையே வலுவூட்டப்பட்டது. இலக்கியவாதிகள், திரைப் படைப்பாளிகள், பிற துறைக் கலைஞர்கள் என பலரையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்த அமெரிக்க அரசியல் மட்டம் பலரை கம்யூனிச ஆதரவாளர்கள் என முத்திரைக் குத்தி அவர்களை முடக்கியது. அக்காலகட்டத்தில் நடந்த Blacklisting நடவடிக்கைகள் நேரடியாக படைப்பாளிகளின் படைப்புச் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கியது.
|
ஒரே ஒரு உதாரணமே இதற்கு போதுமென நினைக்கிறேன். சார்லி சாப்ளினின் புகழையும் மேதமையையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மௌன யுகத்திலிருந்து டாக்கீஸ் யுகத்திற்கு சினிமா உலகம் கடந்து வந்த பிறகும் விடாப்பிடியாக மௌனத் திரைப்படங்களை மட்டுமே எடுத்து வந்த பிடிவாதக்காரர் அவர். அவருடைய ட்ராம்ப் கதாபத்திரத்தையும் அவருடைய திரை வாழ்க்கையையும் நாம் பிரித்துப் பார்க்கவே முடியாது. அவரது முதல் பேசும் படமான- ஹிட்லரின் காலத்திலேயே அவரை பகடி செய்யும் மகா தைரியமான- The Great Dictator (1940) திரைப்படத்தில் கூட இரட்டை வேடத்தில் ஒரு கதாபாத்திரம் ட்ராம்ப் சாயலையே தாக்கி இருந்தது. அப்படிப்படவர் தனது வழமையான பாணியிலிருந்து முற்றிலும் விலகி நடித்து, இயக்கிய Monsieur Verdoux (1947) தோல்வியைத் தழுவியது. அதற்கு முக்கிய காரணம் படைப்பின் குறை அல்ல. மாறாக அதன் மீதும், சாப்ளின் மீதும் விழுந்த கம்யூனிச ஆதரவு பிம்பம் தான் என்பதே நாம் கவனிக்க வேண்டியது. அவருக்கு எதிராக அக்காலகட்டத்தில் பல ஆதாரமற்ற குற்றஞ்சாட்டும் பிரசாரங்கள் கிளம்பியதாகச் சொல்வார்கள். பிறகு அவர் மௌன யுகத்தின் முக்கியமான சக நகைச்சுவைக் கலைஞரான பஸ்டர் கீட்டனுடன் இணைத்து நடித்த Limelight (1952) பிரிட்டனில் மட்டுமே வெளியானது. அவரது அமெரிக்க பாஸ்போர்ட் திரும்பப் பெறப்பட்டது, வருமான வரித்துறையினரின் நெருக்கடி என பல பிரச்சனைகளால் அவர் மனம் வெறுத்துப் போனார் என்பது தான் அதற்குக் காரணம். தன் மீது விழுந்த கம்யூனிச ஆதரவாளன் பிம்பத்தினால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சாப்ளின் தனது தரப்பை எதிர்வாதமாக முன்வைப்பது போல தயாரித்த படமே A King in New York (1957). அதுவே நடிகனாக அவரது திரையுலக வாழ்வின் கடைசித் திரைப்படமுமானது. இவ்விரு படைப்புகளும் அமெரிக்காவில் இருபது வருடங்கள் கழித்தே வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிற்கும் ருஷ்யாவிற்கும் இடையேயான பனிப்போரில் எல்லாவற்றிலும் இரு நாடுகளும் போட்டி போடத் துவங்கின. தொழிற்துறை உற்பத்திகள், ஆயுத உற்பத்தி, உலக நாடுகளுக்கு செய்யும் உதவிகள், அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப ஆராய்ச்சிகள் என எல்லா விதங்களிலும் முட்டிக் கொண்டன. இந்த இரு வல்லரசுகளின் விண்வெளிப் போட்டி (Space Race) உலகப் பிரசித்தி பெற்றது. அக்காலகட்டத்தில் இவ்விரு தேசங்கள் குறித்து வெளியான செய்திகளில் எது உண்மை எது கட்டுக்கதை என்பதை பிரித்தறிய முடியாத வண்ணம் எல்லாமே கலந்து கிடந்தன. இன்றும் அவற்றுள் பல மர்மங்களாகவே நீடிக்கின்றன.
|
திரை வரலாற்று ஆய்வாளர்கள் (Film Historians) பலர் ஐம்பதுகளின் திரைப்படங்களை மான்ஸ்டர் மூவீ டீகேட் (Monster movie decade) என்று அழைப்பார்கள். அந்த அளவிற்கு மிகுகற்பனை (Fantasy) புனைவுகளால் நிரம்பிய திரைப்பிரதிகள் வெளிவந்தன. அப்படங்களுள் கணிசமானவை அறிவியற் புனைக்கதைகள் (Science Fiction). இந்த இடத்தில் தான் நாம் பார்வையாளர் உளவியலை அவதானிக்க வேண்டும். இக்கட்டுரைத் தொடரின் முதல் இரண்டு பகுதிகளைப் போல் அல்லாமல் இப்பகுதியில் வரலாறு குறித்த பார்வை மேலோங்கி இருப்பதை வாசகர்கள் நிச்சயம் உணர்வீர்கள். அவசியம் கருதியே நாம் இவற்றை குறித்து கொஞ்சம் அதிகமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
இரண்டாம் உலக யுத்தத்தில் ஆயுத புழக்கம் முதல் உலக யுத்தத்தோடு ஒப்பிடுகையில் மிக அதிகமெனினும், அமெரிக்கா அணுஆயுதங்களைப் பயன்படுத்தும் என்பது எந்த நாடும் கனவிலும் நினைக்காத ஒன்று. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களை அடுத்தடுத்து நிர்மூலமாக்கிய அணுகுண்டுகளை அமெரிக்கா பிரயோகித்ததை அடுத்து சார்வதேச அரங்கில் அதன் பிம்பம் முற்றிலும் வேறானது. சர்வ பலம் பொருந்திய தனிப் பெரும் வல்லரசு பிம்பம் அதன் மீது ஒட்டிக் கொண்டது அப்போதிருந்துதான். உலக நாடுகள், குறிப்பாக சம பலம் பொருந்திய ருஷ்யா போன்ற நாடுகள் இன்னும் என்னேன்ன அமெரிக்காவிடம் இருக்கிறதோ என பயம் கலந்த சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தன. இந்த சந்தேகமும் பயமும் பல அனுமானங்களையும், கதைகளையும் உருவாக்கின. காற்று வாக்கில் அமெரிக்காவின் ஆயுதங்கள் குறித்த, அறிவியல் ஆய்வுகள் குறித்த ‘இப்படி இருக்குமோ’ ரக சந்தேகங்கள் எல்லாம் கை முளைத்து, கால் முளைத்து கதைகளாகின. உண்மையும் புனைவும் பிரித்தறிய முடியாதபடி இரண்டறக் கலந்தன. திரைப்படங்களில் இவை நேரடியான தாக்கத்தினை செலுத்தத் துவங்கின.
ஐம்பதுகளில் வெளியான அறிவியற் புனைக்கதைகளில் அயல்கிரகவாசிகளைக் குறித்த புனைவுகள் அதிகம் இடம் பிடிக்க ஆரம்பித்தன. வேற்றுகிரகவாசிகளால் மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், அதற்கு அவர்கள் காணும் தீர்வுகளும் என்பது போன்ற கதைகள் வேறு வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் திரைவடிவம் பெற்றன. திரை ஆய்வாளர்கள் அக்காலகட்டடத்தில் இது போன்ற திரைப்பிரதிகள் மறைமுகமாக வெளிப்படுத்தியது கம்யூனிச பயமே என்கிறார்கள். பெரும்பாலான திரைப்படங்களில் இடம்பெற்ற அயல்கிரகவாசிகளின் அச்சுறுத்தலை பார்வையாளர்கள் ருஷ்யர்களின் அச்சுறுத்தலாகவெ உள்வாங்கிக் கொண்டார்கள். அதற்கு தகுந்தாற் போலவே அப்போதைய அரசியல்-சமூக சூழல் இருந்தது. நாள்தோறும் தினசரிகளிலும், பத்திரைக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் (ஐம்பதுகளில் தான் அமெரிக்க இல்லங்களுக்குள் தொலைக்காட்சி நுழைந்திருந்தது.) ருஷ்யா குறித்த எதிர்மறை செய்திகளாகவே கேட்டுக் கொண்டிருந்த மக்களின் ஆழ்மனம் திரையில் தெரியும் எதிரிகள் யாவரையும் ருஷ்யர்கள் என உருவகித்துக் கொண்டது.
ஐம்பதுகளின் திரைப்படங்களை நாம் பல கோணங்களில் இருந்து அணுகலாம். முதலாவது, நாம் முன்னரே பார்த்த பார்வையாளர்களிடம் வலுவூட்டப்பட்ட ருஷ்ய எதிர்ப்பு மனோபவம். இப்படங்களில் வருகின்ற பிரச்சனைகள் எல்லாம் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் விடப்படுகின்ற சவால்களாகவே இருக்கும். ஆனால் ஒரு அமெரிக்க நாயகன்/ நாயகர்கள் அதனை திறம்பட கையாண்டு வரவிருக்கும் ஆபத்திலிருந்து சகல் மனிதர்களையும் காப்பாற்றுவார்கள். இது போன்ற கதையாடல்கள் மறைமுகமாக அமெரிக்க மேன்மையை விதைத்தன. அப்போதைய சூழலில் ஹாலிவுட் சந்தை ஐரோப்பிய பிராத்தியத்திலும் வலுவாக காலூன்றியிருந்தது. இவ்வகைத் திரைப்படங்களை பார்க்கும் பார்வையாளர்களின் அனைவரின் மனங்களிலும் இவ்வுலகை ரட்சிக்க அமெரிக்காவினால் மட்டுமே முடியும் எனும் மாயை படிப்படியாக உருவாக்கப்பட்டது. சந்தேகமின்றி சாமானிய ரசிகர்கள் தங்களை அறியாமல் இதனை நம்பத் துவங்குவர். இது இரண்டாவது. மேலும் ஈவிரக்கமற்ற ஒரு எதிரியிடமிருந்து நம்மை காத்துக் கொள்வதென்பது, அந்த எதிரியை அழிக்காமல் சாத்தியமில்லை. போரிடுவதோ, வன்முறையை பிரயோகிப்பதோ தவிர்க்கவியலாதது எனும் மனோநிலைக்கு இக்கதையாடல்கள் பார்வையாளர்களை தயார்படுத்தின. போர் ஆதரவு மனோபாவம் அமெரிக்கர்களின் கூட்டு உளவியலில் ஏகமனதாக நிரந்தரமாக இடம்பிடித்ததற்கு திரைப்படங்களின் பங்கு கணிசமானது.
|
அன்று முதல் போர் சார்ந்த திரைப்படங்கள் வருடந்தோறும் ஹாலிவுட்டில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய திரைப்படங்கள் எப்போதும் அமெரிக்க சாய்வு உடையவையாக இருப்பதை சொல்லத் தேவையில்லை. அமெரிக்க மேன்மைவாதம் இப்படங்களின் மூலம் பறைசாற்றப்படுகின்றது. அமெரிக்காவின் ஆதிக்க மனோபாவம் பார்வையாளர்களின் மனதில் மீண்டும் மீண்டும் வலுவூட்டப்படுகிறது. வரலாற்றுப் பார்வையில் அமெரிக்கர்களின் மகா மோசமான தோல்வியைக் கூட Pearl Harbour போன்ற திரைப்படங்களின் வழி- ஒரு முக்கோணக் காதல் கதை போர்வையில்- வெற்றி போல திரையில் மறுஆக்கம் செய்ய முடிகிறது. அதே வேளையில் பியர்ல் துறைமுகத் தாக்கத்தை அடுத்த ஜப்பான் மீதான போர் தொடுப்பில் இவோ ஜிமோ பகுதியில் நடந்த போரை மையப்படுத்தி Letters from Iwo Jimo வையும் அதே ஹாலிவுட்டால் உருவாக்க முடிகிறது. இன்று கூட சராசரியாக ஐந்து முதல் பத்து திரைப்படங்கள் இரண்டாம் உலக யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியாகிறது. எல்லா வரலாற்று நிகழ்விற்கும் மாற்றுப் பார்வை உண்டு. ஆனால் எடுக்கப்படும் திரைப்படங்கள் யாவும் அமெரிக்காவின் பார்வையையே முன்வைப்பதாக இருப்பதால் மாற்றுப் பார்வை பதியப்படுவதே இல்லை. இதனால் ஒரு பார்வையாளனுக்கு ஒரு தட்டையான ஒற்றைப் பார்வையான வரலாறே திரைவழி முன்வைக்கபடுகிறது.
ஐம்பதுகளின் அமெரிக்காவில் வெளியான ஒரு சில முக்கியமான படங்களை உதாரணங்களாக இப்போது பார்க்கலாம். அயல்கிரகவாசிகளின் தாக்குதல் குறித்த புனைவுகளில் முக்கியமானது The Day Earth Stood Still (1951). திடீரென பூமிக்கு வருகை தரும் அயல்கிரக வாசிகளால் ஏற்படும் அச்சுறுத்தலையும், அவர்களை எதிர்த்து முறியடிக்கும் மனிதர்களின் முன்னேடுப்புகளையும் பற்றி இப்படம் பேசியது. இதே கதைக் கரு பலமுறை வேவ்வேறு திரைக்கதை வடிவங்களில் மீண்டும் மீண்டும் காலந்தோறும் ஹாலிவுட்டில் படமாக்கப்படுகின்றன. மற்றொன்று The War of the Worlds (1953) – 1898 இல் வெளியான H.G.Wells இன் அறிவியற்புதினத்தை அடியொற்றிய திரைவடிவமாக வெளியானாது. அக்காலகட்டத்தில் பலதரப்பட்ட செய்திகள் அமானுஷ்ய அறிவியற் நிகழ்வுகள் குறித்து செய்திகள் ஊடங்கள் வழியே மக்களை வந்தடைந்த வண்ணம் இருந்தன. வேற்றுகிரகவாசிகள் குறித்த பல்வேறு நிரூபிக்க முடியாத புனைவுகள் கட்டமைக்கப்பட்டன. பறக்கும் தட்டுகள் குறித்த அச்சமும், பரபரப்புகளும் நிறையவே அமெரிக்கர்களை ஆட்டிக் கொண்டிருந்தது. இந்த புனைவுகள் தோற்றுவித்திருந்த அகநெருக்கடியே பார்வையாளர்களை இவ்வகைத் திரைப்படங்களை நோக்கி ஈர்த்தன.
|
Invasions of The Body Snachers (1956) - விண்வெளியில் இருந்து வரக்கூடிய வினோதமான விதைகள் மூலம் உணர்வுகளற்ற மனித நகல்கள் உருவாவதால் ஏற்படும் குழப்பங்களையும் இக்கட்டையும் முன்வைத்தது. கதை என்னவோ அறியியற் புனைவாக இருந்தாலும் இப்படம் மறைமுகமாக கம்யூனிச பயத்தையே முன்வைத்தது. இதில் வரும் கண்ணுக்குத் தெரியாத எதிரி, கம்யூனிஸ்டுகளை பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கொள்ளப்பட்டது.
அமெரிக்க அணுஆயுதங்கள் உலகளவில் ஏற்படுத்திய அச்சத்தின் தாக்கத்தில் பல திரைப்படங்கள் அணுஆய்வுகள், அதன் பின்விளைவுகள் என அதனைச் சுற்றிய கதைப்பின்னல்களுடன் இதே காலகட்டத்தில் வெளிவரத்துவங்கின. இரண்டு அணுகுண்டுகளை தன்மீது வாங்கிய ஜப்பானில் வெளியான ஒரு முக்கியமான திரைப்படம் Gojira – King of the Monsters (1954). தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் ஒரு அமெரிக்க அணு ஆயுத சோதனையின் எதிர்விளைவாக ஜப்பானிய கடற்பகுதியில் வெழித்துக் கொள்ளும் ஒரு அசுர விலங்கையும் அதனை ஜப்பானியர்கள் எதிர்கொள்வதாகவும் கதை அமைக்கப்பட்டிருந்தது. அணுஆயுதங்களின் எதிர்விளைவுகளின் சாத்தியங்களை கற்பனைத்தன்மையுடன் இப்பிரதி முன்வைத்தது என்வும் கொள்ளலாம். இப்படம் உடனடியாக அமெரிக்காவில் வெளியாகவில்லை. மாறாக இப்படத்தில் இருந்த சில அமெரிக்க எதிர்ப்பு அம்சங்கள் மிகக் கவனமாக தணிக்கை செய்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அமெரிக்காவில் Godzilla – King of the Monsters (1956) என்று வெளியிடப்பட்டது. இதை அமெரிக்க திரைப்பட அரசியலுக்கு ஒரு முக்கியமான உதாரணமாக சுட்டமுடியும்.
|
அமெரிக்காவின் அணுஆய்வு ரகசியங்களை தெரிந்து கொள்ள கம்யூனிஸ்டுகள் முயல்வதாக புனையப்பட்ட மற்றுமொரு திரைப்படம் Pick up on the South Street (1953) இத்திரைப்படத்தில் மிக நேரடியாக அமெரிகக் கம்யூனிஸ்ட் உளவாளிகள் கதாபாத்திரங்களாக உலா வருகின்றனர். அணுஆயுத ரகசியங்கள் அடங்கிய ஒரு படச்சுருளை ருஷ்ய ஏஜண்டுகளுக்கு கைமாற்றிட முனைகையில் ஒரு திருடன் அதனை திருடிவிடுகிறான். கதையின் படி தான் செய்வதை அறியாத நாயகி தன்னையறீயாமல் இந்த சதிக்கு உதவுகிறாள். இறுதியில் தன் உயிரைப் பணயம் வைத்து அந்த திருடனின் உதவியுடன் தேச ரகசியங்களைக் காப்பாற்றுகிறாள். அக்காலகட்டத்தில் முறைதவறிப் பிறந்தவனே என்று வசைபாடுவதை விடவும் அமெரிக்க சமூகத்தில் ஒருவனை கம்யூனிஸ்ட் என்று சொல்வது மோசமானதாக கருதப்பட்டது. இப்படத்தில் பல கதாப்பாத்திரங்கள் தங்களை ‘Commies’ (கம்யூனிஸ்ட் என்பதன் சுருக்கம்) என்று அழைப்பதை மிகுந்த உணர்வெழுச்சியுடன் எதிர்க்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் சமூகத்தில் கடைநிலையில் மரியாதையற்றவனாக இருக்கும் ஒரு திருடனை விடவும் ஒரு கம்யூனிச ஆதரவாளன் மோசமானவன் எனும் கருத்தியலை மறைமுகமாக இப்படம் சொல்லவருவது போல பாத்திரப்படைப்புகள் இருக்கும்.
உலகின் வேறெந்த திரைத்துறையிலும் அல்லாத ஒரு வழக்கம் காலங்காலமாக ஹாலிவுட்டில் உண்டென்றால் அது பழைய திரைப்படங்களை மறுஆக்கம் (Remake) செய்வது. மேலோட்டமாக ஹாலிவுட்க்கு எப்போதெல்லாம் கதைத் தட்டுப்பாடு வருகிறதோ, எப்போதெல்லாம் கதாசியர்களின் கற்பனை ஊற்று வற்ருகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் பழைய கள்ளை புதிய மொந்தையில் ஊற்றத் துவங்குவார்கள் என்று சொல்வதுண்டு. ஒரு வகையில் இது சரியே என்றாலும் இதற்கு இன்னுமொரு பக்கமும் உண்டு. திரைப்படங்களீன் மறுஆக்கங்களை, அப்பிரதிகள் வெளியாகும் காலகட்டத்தின் வரலாற்றை, மறுஆக்கம் செய்யப்படும் படத்தின் கதையாடல் செய்யப்படும் மாற்றங்கள் ஆகியவற்றை அவதானித்தால் அதில் ஒளிந்திருக்கும் அரசியல் பிடிபடும். அதனை இரு முறை திரைவடிவம் பெற்ற ஒரு முக்கியமான பனிப்போர் கால திரைப்பிரதியின் வழியாக நாம் அடுத்த பகுதியில் அலசலாம்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamoli |